பாடல் எண் :2916
"அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
முதுண்ட பிள்ளையா ரணைந்தா"ரென்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
சேர்ந்ததிருத் தொண்டர்குழா மடைய வீண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவாரப் பதியிலுள்ளோ
ருடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்.
1018
(இ-ள்) அம்பொன்மலைக் கொடி....என்று - அழகிய பொன்மலையரசன் மகளாராகிய கொடி போன்ற உமையம்மையாரது திருமுலைப்பாலில் குழைத்த ஞான அமுதத் தினை உண்டருளிய பிள்ளையார் வந்தணைகின்றார் என்று எண்ணி; செம்பொன்மலை...ஈண்டி - செம்பொன் மலையாகிய மேருமலையினை வில்லாகவுடைய இறைவரது திருக்காளத்தியிற் சேர்ந்த திருத்தொண்டர் கூட்டம் நெருங்க அடைந்து; பம்பு சடை...உடன் விரும்பி - நெருங்கிய சடையினையுடைய திருமுனிவர்களும், கபால மேந்தும் காபாலியராகிய சைவர்களும், மற்றும் இவ்வாறு மாவிரதம் முதலிய பலபல வேடங்களையுடைய சைவர்களும், வேடர் குலத்தவர்களும், மற்றும் மேலாகிய தவம் புரிவோர்களும் அந்தப் பதியில் உள்ளவர்களுடன் கூடி மகிழ்ந்து; எதிர்கொள்ள உழைச் சென்றுற்றார் - எதிர்கொள்ளப் பக்கத்தில் சென்று சேர்ந்தனர்.
(வி-ரை) பொன்மலைக் கொடி - பார்வதியம்மையார். பொன்மலை - இமயமலை அரசன்; கொடி - கொடிபோன்ற பெண்; அரசனது மகள். பொன்மலை - ஈண்டு இமயமலை. "பொன்மலைப் புலிவென் றோங்க" (552) என்றது காண்க.
"அம்பொன்மலை....அணைந்தார்" என்று - அணைந்தனர் என்று உட்கொண்டு; என்று எதிர்கொள்ள வுற்றார் - என்க; பிள்ளையார் அணைந்த பெருமைக்கேற்ப எதிர்கொள்ளு முறைமையில் உற்றனர்.
திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் கூட்டம் - திருமுனிவர் - கபாலக்கையர் - சைவர் - குலவேடர் - தவம்புரிவோர் - இவர்கள் திருக்காளத்தியில் தவநெறி சார்ந்த பல சார்விலுமுள்ள சைவப் பகுதியினரும் பிறரும். அப்பதியிலுள்ளோர் - தொண்டர் கூட்டத்துச் சேராத நகர மாந்தர். குலவேடர் - வேடர் குலத்தவர்; கண்ணப்ப நாயனாரின் மரபு உடையவர்கள் அத்தொடர்புபற்றி அங்கு வந்து சேர்ந்தோர்.
குல வேடர் - வேடர் குலத்தோர்; இவ்வாறன்றிக் குலமரபு பற்றியே சைவ வேடங்களைத் தாங்கியவர்கள் என்றலுமாம்; இது மகர குண்டலம் முதலியவை ஆதி சைவருட் டீக்கையுடையோர்க் காகுதல்போல வருவன என்றலுமாம்.
உம்பர் தவம் புரிவார் - உம்பர் - மேலாகிய; மேலாகிய தவமாவது சிவபூசை முதலாகிய சைவத் தவம். உம்பர் - மேன்மையான; உம்பர் - தேவர்கள் என்று கொண்டு, தேவர்களாவர் இங்கு வந்து மனிதர்களாய்த் தவம் புரிவோர் என்றுரைத்தலுமாம். "இ மையவ ரரம்பையர் பிறந்து, மாறில் வேடரு மாதரு மாகவே வணங்கும்" (1090) என்றது காண்க.
தொண்டர் குழாம், ஈண்டி, முனிவர் முதலியோருடன் விரும்பி - என்று கூட்டுக.
உழைச் சென்று - மலையடியின் புறத்துப் பிள்ளையார் வரும் இடத்தின் பக்கத்திற் போய்.