1995. அஞ்சு மடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சு மடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சு மடக்கில் அசேதன 1மாமென்றிட்டு
அஞ்சு மடக்கா அறிவறிந் 2தேனே.

(ப. இ.) புலனடக்கம் என்பது அவற்றைத் தீயவழியிற் செலுத்தாது (1993) தூயவழியிற் செலுத்துதலேயாம். இவ் வுண்மை திருவருளால் செந்நெறிச் செல்வார்க்கே தெளியவரும். ஏனையார் எல்லாம் பொறிபுலன்களைச் செயலறச் செய்தலே அடக்குதலென்பர். அத்தகையோர் அறிவிலாராவர் என ஒதியருள்கின்றனர். சிவவுலகத்தாரும் சிவனைத் தொழும் இறைபணியில் நிற்பாராவர். அதனால் அஞ்சும் அடக்கிய அமரரும் அங்கில்லை என்றனர். ஐம்புலனையும் செயலறச் செய்தலாகிய அடக்குதலைச் செய்தால் அதனகத்துத் தங்குமுயிர் அறிவற்ற கற்போன்றாகும். அஃது ஈண்டு 'அசேதனம்' எனக் கூறப்பட்டது. அதனால் அஞ்சினையும் அடக்காமல் அடக்கிச் சிவ வழிபாட்டில் செலுத்தும் அறிவுவழியிற் றிருப்பும் அறிவறிந்தேனென்க. அசேதனம் - அறிவில்லது. சேதனம் - அறிவுள்ளது. 'அடக்கா' என்பது செய்யா என்னும் வினை எச்சமாகக் கொண்டு அடக்கி (வாழும்) வகை அறிந்தேன் எனக் கொள்க. வாழும் என்பது அவாய் நிலையாய் இடைப் பிற வரலாய் வந்தது. அடக்குதல் சிவனடியார் திருக்கூட்டத்துள்ளும் சிவபெருமான் திருவடிக்கண்ணும் (1985) ஒல்லும் வகை ஓவாது செலுத்தி உய்யும் நன்னெறிக்கண் ஒழுகுதல்.

(அ. சி.) அஞ்சு - பஞசேந்திரியங்கள்.

(3)


1. கரணங்கள். சிவஞானசித்தியார், 9. 1 - 2.

2. அஞ்சினா. அப்பர், 4. 26 - 5.

" செம்மை வெண்ணீற். 12. சண்டேசுரர் - 2.