அந்த வாய் தந்தபற் சந்த மோகின்ப முத்தென:- அழகிய மகளிர் வாயிலுள்ள பல் முத்து போன்றது என்று உவமித்து மகிழ்வர்.அவர்கள் புன்னகைப் புரிந்தால், காணிக்கையாகப் பொன்னகைத் தந்து பணிவர் காமுகர். அப்பல் ஒரு காலம் உதிர்ந்து போவதுதான். உதிர்ந்த பல் முத்து போலவா இருக்கும்? வானில் தங்கு கார் பைங்குழல்:- உதிர்ந்து போவதும், பஞ்சு போல் நரைத்துப் போவதும், கசக்கவில்லையானால் அழுக்குப் பிடித்து நாறுவதும் சிக்குப்பிடித்துச் சீரழிவதும் ஆகிய கூந்தலை வானில் தங்கும் கரிய மேகம் என்று வியந்து கூறுவர். இன்னும் என்ன என்னவோ உவமை கூறியுழல்வர். கொங்கை நீள் தண்பொருப்பென்று:- ஒரு காலம் திரைத்துத் தொங்கியொழியுந் தனத்தினை நீண்ட மலை யென்று மதித்து மதிமயங்குவர். இவையனைத்துங் கானலை நீரெனக் கருதுவது போலாகும். “வனமழியு மங்கை மாதர்களின் நிலைதனை யுணர்ந்து தாளிலுறு வழியடிமை அன்பு கூருமது சிந்தியாதோ” -(உததியறல்) திருப்புகழ். உலகோரை..........கொண்டல் நீ யென்று சொற்கொண்டு:- மகளிரைப் புகழ்ந்து மதிமயங்கி மோகாந்தகாரம் மூடி, அவர்கட்கு அள்ளி வழங்குதற்கெனப் பொருளை நாடி, செல்வரைத் தேடிச்சென்று, அழகில்லாதவரை அநங்கனே என்றும், கொடாத லோபியைக் கொண்டலே யென்றும் பொய்மை யாகப் புகழ்ந்து பாடித் தலைமை சான்ற புலமையை அவமாக்குவர். |