தாய் நின்றுரைத் துழலாதே:- தாய்-தாவி. அங்குமிங்குமாகத் தாவிச்சென்று உழல்வர். இங்ஙனம் உலகிலுள்ள புலவருட் பலர் வீணில் உழல்வதை அருணகிரிநாதர் தம்மீது ஏற்றிக் கொண்டு,அவர்கள் பொருட்டு இறைவனிடத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அங்ஙனம் அவநெறி நிற்கும் புலவர் சிவநெறி உய்யும்பொருட்டு இதனைப் பாடியருளினார் என வுணர்க. துன்ப நோய் சிந்த:- இங்கு நோய் என்பது பிறவிநோய் என வுணர்க. அந்த நோயை மாற்றும் மருத்துவன் முருகனேயாகும். அது நெடிது காலமாகத் தொடர்ந்து வருகின்ற நோய். அதனை அந்நோய் இல்லாத ஒருவனே மாற்றமுடியும். பெம்மான் முருகன் பிறவான் இறவான், ஏனைய தேவதைகள் செத்துப் பிறப்பவை. “செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள செங்கீரை யாடி யருளே” -குமரகுருபரர். முருகன் அருணகிரியாருக்கு அந்த அருள் நலத்தை யருளினான் என்பதனை அடியில் வரும் அடியால் அறிக. “அநுபவ சித்த பவக் கடலிற் புகா தெனை வினவி யெடுத்தருள் வைத்த கழற் க்ருபாகரன்” -திருவகுப்பு (6) தொண்டினால் ஒன்றுரைக் கருள்வாயே:- முருகனுக்கு தொண்டுபட்டு, மறுமொழிப் புகலாது, ஒரு மொழிப் புகன்று உய்யவேண்டும். அந்த வரத்தை இதன் மூலம் சுவாமிகள் வேண்டுகின்றனர். வெங்கண் வ்யாளம்:- வியாளம்-பாம்பு. தேவர்கள் பாற்கடல் கடைந்த போது, மந்தரகிரியை மத்தாகவும், வாசுகி என்ற |