பக்கம் எண் :


திருச்செந்தூர்735

அரவரசனைத் தாம்பாகவும் பிணித்தனர், பலநாள் கடைந்தபோது அத்துன்பத் தைத் தாங்கமாட்டாத வாசுகி ஆலகால விடத்தைக் கக்கினன். இங்கே பாம்பினிடந் தோன்றிய நஞ்சு என்பதை வருவித்துப் பொருள் கொள்ள வேண்டும். அந்த விடத்தால் உலகமெல்லாம் கொதித்து அல்லலுற்றன. அமரர் ஆற்றாது அஞ்சி அலமரலுற்றனர்.

எடுத்துண்டு:-

இறைவன் அமரரை யாட்கொள்ளும் பொருட்டு ஆலகால விடத்தை யெடுத்து உண்டு அமரர்க்கு அமுதத்தை வரவழைத்து அளித்து அருள்புரிந்தனர். இல்லையேல் வானவர் யாவரும் அன்றே மாண்டிருப்பார்கள்.

மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங்
கோலெங்கே வானோர் குடியெங்கே-கோலஞ்செய்
அண்டங்கள் எங்கே அவனியெங்கே எந்தைபிரான்
கண்டமங்கே நீலமுறாக் கால்.
             வள்ளலார்.

இறைவனுடைய எல்லையில்லாத பெருங்கருணையை விளக்குவது அவரது நீலகண்டம்.

திருக்கொண்டல் பாகன்:-

உமையம்மையாரை இடப்பாகத்தும் திருமாலை வலப்பாகத்தும் சிவபெருமான் வைத்திருப்பர். திருமால் புருஷசக்தியென அறிக. கூர்ம புராணம் முதலிய நூல்களில் விளக்கமாக இது பற்றிக் கூறியுள்ளது. இத்திருமால்  ’சம்பு பட்சத்தில்’ உள்ள நவந்தருபேதத்தில் உள்ள மூர்த்தியென வுணர்க.

இறந்து பிறந்து உழலும் மூவரில் ஒருவராகிய திருமால் என மயங்கற்க. அடிமலர் தேடியறியாது அல்லலுற்ற திருமால்’அணுபட்சத்தில்’ உள்ளவர் எனவும் அறிக. இந்த விளக்கத்தை வெகுபேர் அறியாது இரண்டும் ஒன்றென எண்ணி இடர்ப்படுவர்.