பக்கம் எண் :


736திருப்புகழ் விரிவுரை

“பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து” என்று திருமங்கையாழ்வாருங் கூறுகின்றார். இதுதான் சிவமூர்த்தம் இருபத்தைந்தில் கேசவார்த்த மூர்த்தம் என வுணர்க.

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழுரவும் பொன்னாணுந் தோன்றுமால்-வீழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைத்து.
           -ஆழ்வார்.

செருக்குண்டு பேரம்பலத்தினிலாடி:-

செருக்கு-மகிழ்ச்சி. இறைவனுடைய நடனம் ஆனந்த நடனம். சிற்றம்பலம் - ஆன்மாக்களின் இதயத் தாமரையிலுள்ள சிறுமையான நுட்பமான தகராகாசம் ஆகும். பேரம்பலம் உலகங் கடந்த பெருவெளியாகும்.

செங்கண்மால் பங்கயக் கண்பெறாது:-

புண்டரீகக் கண்ணுடைய திருமால் ஆயிரம் ஆண்டு தேடியும் அரனார் அடிமலர் காணப் பெற்றாரில்லை.

“மண்வைத்த குக்கி மணிவண்ணன்-அன்றொருநாள்
 கண்வைத்துங் காணாக் கழலிணையான்”

என்ற அமுத வாக்காலும் அறிக.

அந்தரத்தின் கண் ஆடும்:-

இங்கே அந்தரம் என்பது பகிரண்ட வெளியை யுணர்த்தியது. ஆண்டவ னுடைய அசைவே அகிலவுலகங்களின் அசைவுக்குங் காரணமாகும்.

செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே:-

சிவபெருமானும் அன்பு கொள்ளும் திருத்தலமாகிய திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூரில் தமிழில் தவழ்ந்து வரும் தென்றல் காற்றுடன் செந்தமிழ்த் தெய்வமாகத் திருவேலிறைவன் வீற்றிருக்கின்றான்.