பக்கம் எண் :


738திருப்புகழ் விரிவுரை

கொன்றை மலரையும், மத்தம்-ஊமத்தம் பூவையும், துழாய்-துளசியையும், துன்று-நெருக்கமாக அணிந்து, பொன்-அழகுடன் விளங்கும், செம்சடா பஞ்சரத்து உறு தோகை-சிவந்த சடையாகிய கூட்டில் வாழ்கின்ற மயில் போன்ற கங்காதேவியின், சிந்தையே-சிந்தைக்கு உகந்தவரே! தென்திசை தென்றல் வீசும் பொழில்-தென் திசையிலிருந்து வரும் தென்றல் காற்று வீசுகின்ற மலர்ச் சோலைகளையுடைய, செந்தில்வாழ்-திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள, செந்தமிழ் பெருமாளே-செம்மைப் பண்புடைய தமிழ்க் கடவுளாகிய பெருமையின் மிகுந்தவரே! பங்கமேவும் பிறப்பு-குற்றம் நிறைந்த பிறவியாகிய, அந்தகாரந்தனில்-இருளிலும், பந்தபாசந்தனில்-கட்டுப்படுத்துகின்ற பாசத்திலும், தடுமாறி-தடுமாற்றமடைந்து, பஞ்சபாணம் பட-ஐந்து கணைகளும் பட்டதனால், புண்படா-மனம் புண்பட்டு, வஞ்சக பண்பு இல் ஆடம்பர பொது மாதர் தங்கள்-வஞ்சனையுடையவரும், நல்ல பண்பு இல்லாதவரும், ஆடம்பரம் புரிபவருமாகிய, பொதுமகளிருடைய, ஆலிங்கன கொங்கை-தழுவுவதனால் தனங்கள், ஆகம்பட-என் உடம்பில் பொருந்த, சங்கைமால் கொண்டு இளைத்து அயராது-ஐயமும் மயக்கமும் அடைந்து அதனால் இளைப்புற்று அடியேன் அயர்ச்சி யடையாவண்ணம், தண்டை சூழ் கிண்கிணி-தண்டையையும் சூழ்ந்துள்ள கிண்கிணியையும் அணிந் துள்ள, புண்டரீகந்தனை தந்து- தாமரையனைய திருவடியைத் தந்து, நீ அன்பு வைத்து அருள்வாயே-தேவரீர் அடியவன் மீதுகருணை வைத்துத் திருவருள் புரிவீர்.

பொழிப்புரை

வேற்படையை அழகிய கரத்தில் கொண்டு சூரபன்மனுடைய பெருமையை அழித்து, அண்டங்கள் மலைகள் முதலியயாவும் அஞ்சுமாறு செய்து, திண்ணிய வலிமையுடைய மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுக்கு தேவலோகத்தைக் கொடுத்து அருள்புரிந்தவரே! சந்திரன், ஆத்திமலர், கொன்றைப் பூ, ஊமத்தம் பூ, துளசி இவைகள் நெருங்கியுள்ள அழகிய சிவந்த சடையாகிய கூண்டின் கண் இருக்கின்ற கங்கா தேவியின் திருவுள்ளத்தில் விளங்கும் பாலகரே! தென் திசையிலிருந்து தவழுகின்ற தென்றல் காற்று வீசுகின்ற பூம்பொழில்கள் சூழும் திருச்செந்தூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள செந்தமிழ்க் கடவுளாக விளங்கும் பெருமிதம்