உடையவரே! குற்றம் நிறைந்த பிறவியாகிய இருளிலும், கட்டுப்படுத்தும் ஆசையாகிய சுழலிலும், தடுமாற்றமுற்று, மன்மதனுடைய ஐந்து மலர்க்கணை களும் பட்டு அதனால் நெஞ்சு புண்பட்டு, வஞ்சனையைச் செய்பவரும், நற்பண்பு இல்லாதவரும், ஆடம்பரமாக வாழ்பவரும் ஆகிய பொது மாதருடைய தனங்கள் தழுவிக் கொள்வதனால் என் உடம்பில் பொருந்த அதனால் ஐயமும் மயக்கமும் அடைந்து இளைப்புற்று, அயர்ந்து போகாவண்ணம், தண்டையும் கிண்கிணியும் சூழ்ந்துள்ள திருவடிக்கமலங்களை அடியேனுக்கு அளித்து எளியேன் மீது தேவரீர் கருணை வைத்துத் திருவருள் புரிவீர். விரிவுரை பங்கமேவும் பிறபந்தகாரம்:- பங்கம்-குறைவு. பிறப்பு பலப்பல குறைவுகளுடன் கூடியது. குறைவு இன்றி நிறைவுடன் கூடியவர் இறைவர் ஒருவரே! நாம் அனைவரும் குறைவுடன் கூடியே பிறந்திருக்கின்றோம். அறிவிருந்தால் அழகிராது; அழகிருந்தால் அறிவிராது; இரண்டும் இருந்தால் அடக்கம் இராது; செல்வமிருந்தால் கருணையிராது; சிலருக்கு உடல் நலமிராது; மக்களிருந்தால் செல்வம் இராது; தனமிருந்தால் மனமிராது; மக்களிராது; இப்படி ஏதாவது குறைவு இருக்கும். இருள், பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் இருளினும் வலிமையுடையது.இருள் எல்லாவற்றையும் மறைக்குமே யன்றித் தன்னை மறைக்காது; ஆணவம் தன்னையுங் காட்டாது மறைத்து, மற்றவற்றையும் மறைத்துக் கொடுமை புரியும்.எல்லா வகையான தீமைகட்கும் மூலக்காரணம் ஆணவமலமேயாகும். அது ஆன்மாவுக்கு செம்புக்குக் களிம்புபோல் அநாதியே உண்டு. அதன் வலிமையைக் கெடுப்பதுவே பதிஞானமாகும். |