பக்கம் எண் :


740திருப்புகழ் விரிவுரை

பந்தபாசம்:-

பந்தம்-கட்டு. மக்கள், மனைவி, உறவு முதலியவர்கள் ஆசைவைத்து அவர்கள் நலத்திற்காகவே பலப்பல முயற்சி செய்து மாந்தர் உழல்வர். மனைவி மீதுள்ள பாசத்தை விடுத்தவர் இயற்பகை முதலியோர். மக்கட் பாசத்தை விடுத்து வீடு பெற்றவர் சிறுத்தொண்டர். பாச நாசம் ஈசன் நேசத்தால் வரும்.

பஞ்சபாணம்:-

மன்மதன் ஆன்மாக்களை மயக்கி வேட்கைத் தீ மூளுமாறு ஐந்து பூங்கணைகளை விடுவான். அக்கணைகளால் அல்லல்படுவோர் பலர். முருகன் அருள் பெற்றார் அக்கணைகளை வெல்வர்.

“மாரன் வெற்றி கொள் பூமுடிக் குழ
    லார் வியப்புற நீடு மெய்த்தவர்
    வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே”
                          -
(ஏதுபுத்தி) திருப்புகழ்.

வஞ்சகப் பண்பி லாடம்பரப் பொது மாதர்:-

பண்பு என்பது ஓர் உயர்ந்த குணம். அறிவு மனிதனை உயர்த்தும்; அந்த அறிவினும் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது பண்பு. அறிவு மூளையை உறைவிடமாகக் கொண்டது. பண்பு உள்ளத்தை உறைவிடமாகக் கொண்டது. பண்பில்லாத அறிவுடைய மனிதனை மரத்திற்கு நிகராகக் கூறுகின்றார் திருவள்ளுவர்.

அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்

இத்தகைய பண்பு பொதுமாதர் பலரிடம் இல்லை. ஆடம்பரமும் அதிகம் புரிவர்.