பக்கம் எண் :


திருச்செந்தூர்747

போர்கொள் சத்தி:-

போருக்குரிய வேலைப்போலவும் அக்கண்கள் கூர்மையும், கொடுமையும் படைத்தவை.

மாவின் வடுவை:-

மாம்பிஞ்சைப் பிளந்தால் அதன் இடையில் உள்ள விதையின் பிளப்பு கருமணிப் போலவும், சூழ்ந்துள்ள பகுதி வெண்மையான விழிப்போலவும், காட்சிதரும். ஆகவே மாதர் விழிக்கு மாவடுவை உவமை கூறுவது மரபு.

காவி:-

காவி-குவளை. பெண்களின் கண்கள் குவளை மலர்போல் அழகாக இருக்கும்.

மீறு தக்க மணம் வீசு கமலப் பூவை:-

மலர்களில் தலைமையாவது தாமரைப்பூ. அதுவே இலக்குமியின் கோயில். வாணியும், தேவனும் எழுந்தருளியிருப்பதும் தாமரையே; வள்ளியம்மையாரது திருக்கரத்திலும் தாமரைப்பூ விளங்கும்; கண்கள் தாமரைப் பூவைப்போல் திகழும்.

மிக்க விளைவான கடுவை:-

விலைமகளிரது கண்கள், நஞ்சுபோல், தன்னை விரும்பினவர்க்கு அச்சத் தையும் செய்யும். அந்நஞ்சும் நன்றாக முதிர்ந்தது என்கின்றார்.

சீறுதத்துகளும் வாளை:-

சீறு-சினங்கொண்டு; உதத்து உகளும்-தண்ணீரில் புரளுகின்ற; வாளை- வாளைமீன் போன்றது. சினந்து ஓடுகின்ற தண்ணீரில் எதிர்த்துப்போகும் தன்மை உடையது வாளைமீன்.