உதத்து-என்பதற்கு, யுத்தத்துக்கு என்று பொருள் செய்தால், சீறுகின்ற போரில், புரளுகின்ற வாளாயுதம் போன்ற கண் எனினும் பொருந்தும். அடு மைப்பாவு விழி மாதர்:- அடுதல்-கொல்லுதல்; கொல்லும் தன்மையும், மைப் படிந்தும் இருப்பவை மகளிர் விழிகள். கண்களைப் பற்றி இப்படி இத்தனை வர்ணனைகள் செய்கின்றார் அடிகளார். மத்தகிரி போலும்:- இனி அவர்களது தனபாரங்களின் தன்மையைக் கூறுகின்றார். மத்தகிரி-மதம் பொழிகின்ற மலை. மலையில் ஒருவிதமான சத்து வெளிப்படும். அதற்குச் சிலாசத்து என்றுபேர். அன்றியும், “மதம் பொழிகின்ற யானை” என்றும் கூறலாம். (உவம ஆகுபெயர்). வைத்த கொடிதான மயல் விட்டு:- விலைமகளிரது புலால் உடம்பின் மீதுவைத்த மயக்கம் மிகவும் கொடியது. அது சகல பாவங்களையும் செய்யத் தூண்டும். அறிவை மயக்குவது கள். அந்தக் கள்ளினும் கொடியது காமம். ஏன்? கள்ளை நினைத்தாலும், கரத்தால் தொட்டாலும், கண்ணால் கண்டாலும் மயக்கந் தராது: உண்டால்தான் அறிவை மயக்கும்; காமம் உள்ளத்தால் நினைத்தாலும் அறிவை மயக்கும்; கண்ணால் கண்டாலும், கைகளால் தொட்டாலும் அறிவை மயக்கும். உள்ளக் களித்தலும் காண உவத்தலும் கள்ளுக்கில் காமத்துக் குண்டு. திருக்குறள். இத்தகைய கொடிய காம மயக்கத்தை, காமனை எரித்த கனற் கண்ணினின்று,அருட்பெருஞ் சோதியாய் வந்த ஆறுமுகப் பரமன் அருளால் அகற்றுதல் எளிது; பிறர்க்கு அரிது. |