பக்கம் எண் :


திருச்செந்தூர்749

ஆனபத்தி செய:-

பக்தி-அன்பு. முருகனுடைய அன்பினால் எல்லா நலன்களும் உண்டாகும். முருகன் திருவடியில் பக்தி ஏற்பட்டு விட்டால் அதுவே முக்தியாகும்.

“ஆன பயபக்தி வழிபாடு பெறுமுத்தி அதுவாகநிகழ்
 பக்த ஜன வாரக் காரனும்”
          -திருவகுப்பு (4)

ஏழை அடிமைக்காக வஜ்ரமயில் மீதிலினி எப்போது வருவாயே:-

ஏழை-அறிவில்லாதவன். “அறிவிலியாகிய அடியேன் பொருட்டு தேவரீர் வஜ்ரமயில் மீதிலே வந்து ஆட்கொள்ள வேண்டும்” என்று சுவாமிகள் வேண்டுகின்றனர். வஜ்ரம் போன்ற வலிமையுடையது மயில்.

சித்ர வடிவேல் பனிருகைக்கார:-

சித்ர-அழகு; வடி-கூர்மை, அடியார்கட்கு எம்பெருமான் பன்னிரு கரங்களாலும் வாரி வழங்குவான். மேகம் போன்ற கொடையுடைய கரங்கள் என்று திருவகுப்பில் கூறுகின்றார்.

“எழிலியை யனையப னிருகையி லயின்முதல்
 இலங்கு படையே துலக ஒருபால்”
         -கொலு வகுப்பு

எழிலி-மேகம்.

பக்தி புரிவோர்கள் பனுவற் கார:-

பனுவல்-நூல். கல்வி கற்று, அக்கல்வி யறிவால் செய்த நூல்களை, முருகன் ஏற்கமாட்டான். அன்பு நெறி நின்ற பக்தர்கள், அருள் வேட்கையுடன் பாடிய பனுவல்களைப் பரமன் ஏற்று மகிழ்வான். பகழிக் கூத்தர், சிதம்பர சுவாமிகள், குமரகுருபரர் முதலியோர் இந்த பக்த வரிசையில் நிற்பவர்கள்.