பக்கம் எண் :


திருச்செந்தூர்751

தத்தை நிகர் தூய வனிதைக்கார:-

தத்தை-கிளி. தூய வனிதை-தெய்வயானை.

முச்சகர் பராவு பரணக்கார:-

மூன்று உலகங்களும், முருகனுடைய திருவடியைத் துதி செய்கின்றன. அப்பரமனே பரம்பொருள்; வேதாகமங்களால் வியந்து ஓதப்பெற்ற விமலன்.

இனிதான முத்தமிழையாயும் வரிசைக்கார:-

தமிழ் மிகவும் இனிய மொழி. இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகள் உடைய மொழித் தமிழ் ஒன்றேயாகும். இயல்-சத்து; இசை-சித்து; நாடகம்- ஆனந்தம். சத்து சித்து ஆனந்தம்-சச்சிதானந்தம்-தமிழ்.

பச்சைமுகில் தாவு புரிசைக்கார:-

இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களின் திருமதில்கள் உயர்ந்தவை.அதனால், அதன்மீது மேகந் தவழ்கின்றது.

முத்துலவு வேலைநகர்:-

திருச்செந்தூர் தென் கீழ்க்கடற்கரையில் விளங்குகின்றது. தென்கடல்தான் முத்தங்கொழிப்பது; திருச்செந்தூர் அருகிலுள்ள தூத்துக்குடி கடலில் தான் இன்றும் முத்துக்களை எடுக்கின்றனர்.

“......................ஒருகோடி முத்தம்
 தெள்ளிக்கொழிக்குங் கடற் செந்தில் மேவிய சேவகனே”
                             -அலங்காரம் (106)

முத்தேவர் பெருமாளே:-

ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற முத்தொழில்களைப் புரியும் அயன், அரி,அரன் என்ற மும்மூர்த்தி கட்கும் தலைவன் முருகன்.