மன முடையவர்களாய், நாகணவாய்ப்பறவை போன்றவர்களாயுள்ள பொதுமாதர்களுடைய, துன்பத்தைத் தருகின்ற மாயமும், காமமும் உடைய கண்பார்வையாகிய அம்பினால் மனம் வாடுகின்ற அறிவற்றவனாகிய அடியேன் முன் எழுந்தருளி வந்து, என்னை ஆட்கொள்ளுமாறு இனி எப்போது நினைப்பேனோ? விரிவுரை இந்த்ரபுரிகாவல் முதன்மைக்கார:- இந்திரனுடைய நகரமாகிய அமராவதியை சூரபன்மனுடைய மகன் பானுகோபன் இடித்துத் தீக்கு இரையாக்கிப் பொடிசெய்து அழித்துவிட்டனன். முருகப்பெருமான் சூராதியவுணரை யழித்து, இடிந்த அமராவதியைப் புதுப்பித்து, இந்திரனுக்கு முடிசூட்டி, அவனை ஐராவத முதுகில் ஏற்றி பவனி வரச்செய்து மீளவும் அந்நகருக்கு இடர்வரா வண்ணம் பாதுகாவல் புரிந்தனர். தேரணியிட்டுப் புரமெரித்தான் மகன் செங்கையில்வேல் கூரணியிட்டணு வாகிக் கிரௌஞ்சம் குலைந்தரக்கர் நேரணியிட்டு வளைந்தகடக நெளிந்தது சூர்ப் பேரணிகெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்தநுவே. -அலங்காரம் (3) என்று அருணகிரிநாதர் பிற இடங்களிலும் முருகன் இந்திரபுரியைக் காத்தருளிய கருணைத் திறத்தை வியந்து கூறுகின்றார். இந்திராதி தேவர்கள், இளம் பூரணனைச் சரணமடைந்து தொழுது வழிபட்டதனால், இமையவர்கள் நகரை எம்பெருமான் காவல் புரிந்தனர். “தொழுது வழிபடும் அடியர் காவல்காரப் பெருமாளே” எனவரும் பழநிமலைத் திருப்புகழாலும் இதனை அறிக. |