சம்ப்ரம மயூர துரகக்கார:- மயில் மிகவும் பெருமையுடையது; ஓங்கார வடிவமானது. அது வாகனத்துக்குரிய குதிரைபோல் எம்பெருமானை என்றும் தாங்கி நிற்பது. அதனால், அருணகிரிநாதர் பல இடங்களில் மயிலைக் குதிரை என்றே உருவகம் புரிகின்றார். என்று மகலாத இளமைக்கார:- முருக மூர்த்திக்குரிய அநேக சிறப்புக்களில், முதன்மையும் வேறு எத்தேவருக்கு மில்லாத தனிமையும் இந்த மாறாத இளமையேயாகும். அதனால் பாம்பன் அடிகள் அடிக்கடி “இளம் பூரணன்” என்று எம்பெருமானைக் குறிப்பிடுவார்கள். என்றும் குழந்தை வடிவில் நின்று அடியவர்க்கு இன்ப அருள் பாலிக்கும் தெய்வம் முருகன். தன்பால் காதலித்துவந்த அடியவர்க்கு முருகன் இளநலங்காட்டி முன்னின்று வேண்டியாங்கு வேண்டியவரம் கொடுத்து அருள்புரிவன். “மணங்கமழ் தெய்வத் திளநலங்காட்டி அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின்வரவென அன்புடை நன்மொழி அளைஇ விளிவு இன்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ யாகத் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்கும்” -திருமுருகாற்றுப்படை. குமாரசாமி என்ற திருப்பெயராலும், பாலசுப்ரமணியம் என்ற திருப்பெயராலும் இதனை அறிக. குறமாதின் இன்ப அநுபோக சரசக்கார:- இறைவன், திருவருளாகிய அம்பிகையுடன் கூடியிருக்கின்றான் எனபதன் உட்பொருள், உயிர்களை உய்விக்கும் பொருட்டு என்பதே ஆகும். |