பக்கம் எண் :


திருச்செந்தூர்757

தென்பா லுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடி
பெண்பா லுகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பா லியோகெய்தி வீடுவர் காண்சாழலோ.
   -திருவாசகம்.

இங்கே வள்ளியம்மை இச்சாசக்தி. இச்சாசக்தியுடன் முருகன் கலந் திருப்பது, உயிர்கள் இச்சையமைந்து, கன்மங்களைத் துய்த்து, கன்ம நீக்கம் பெற்று, மலபரிபாகமுற்று, வீடுபேறு பெரும் பொருட்டே என உணர்க.

வந்த அசுரேசர் கலகக்கார:-

அசுரர்கள் தலைவர்களாகிய சூராதி யவுணர்கள், அமரர்களைச் சிறை விடுமாறு ஆறுமுகப்பெருமான் கூறிய அறிவுரையைக்கேட்டு உய்யாமல், மூர்க்கத்தன மேற்கொண்டு போர்க்களத்தில் எதிர்த்து வந்தார்கள்; பலப்பல மாயப்போர் புரிந்தார்கள். இறைவன் அவர்களைத் தண்டித்தது மறக்கருணையாம் என்க. குற்றஞ் செய்கின்ற புதல்வனை அவன் திருந்தி உய்தல் வேண்டும் என்ற கருணையால் தந்தை தண்டிக்கிறார். இதே நியாயந்தான் முருகவேள் அசுரேசரைத் தண்டித்தது என்பதை யுணர்க.

எங்களுமை சேயெனருமைக்கார:-

உமா-உ.ம.அ. என்ற மூன்று மந்திரங்களின் சேர்க்கையே உமா என்ற மந்திரம் என உணர்க. உ-காத்தல், ம-ஒடுக்கல், அ-அக்கல். முத்தொழில்களையும் தனது சந்நிதியில் தனது ஆற்றலைக்கொண்டு செய்விக்கும் முதல்வி உமா தேவியார். அவளின்றி ஓர் அணுவும் அசையாது. ஞானத்தின் சொரூபம்; சகல லோக ஏகநாயகி அப்பரம நாயகியின் அன்பு நிறைந்த இளங்குழவி முருகவேள். “பார்வதீப்ரிய நந்தனாய நம”, என்பது முருகனுடைய நூற்றெட்டு நாமங்களில் ஒன்று. ஆகவே பார்வதி பாலன் என்ற அருமைக்கும் பெருமைக்கும் உரியவர் முருகர்.

இனி உமை என்பது சித்து; முருகர் என்பது ஆனந்தம். அறிவிலிருந்து ஆனந்தம் தோன்றும். “நானாநந்தம்” “அறிவானந்தம்” “சித்தானந்தம்!’ என்று வரும் சொற்களை உன்னுக. அஞ்ஞானத்திலிருந்து துன்பம் தோன்றும். ஆகவே அருணகிரிநாதருக்கு அம்பிகையின் பரிபூரண அருள் உண்டு. அவர் பல இடங்களில் அம்பிகையை வாயார வாழ்த்துகின்றார். “எங்கள் தாய்” என்று அவர் கூறும் உரிமையை நோக்குக.