பக்கம் எண் :


திருச்செந்தூர்759

மலைபோல் நின்று அவன் வஞ்சனை செய்வான். அதனால் அந்த அசுரன் கிரவுஞ்சாசுரன் எனப்படுவான். அகத்தியர் சாபத்தினால், அவன் மலை உருவாகவே நின்று கொடுமை பலசெய்து வந்தான். முருகனுடைய வேல் அக்கிரவுஞ்ச மலையைப் பிளந்து அக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதுமுதல் அமரரும், இருடியரும் இடர்த் தீர்ந்தனர்.

செஞ்சொலடியார்க ளெளிமைக்கார:-

செவ்விய இனிய சொற்களை மொழியும் அடியார்களிடம், மூவருந் தேவருங்காணாத முருகன் மிக எளியவனாக நின்று அருள்புரிவான்.

“மாலயனுக் கரியானே மாதவரைப் பிரியானே”
                        -(காலனிடத்) திருப்புகழ்.

“அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த
 அடியவர்க் கெளியோனே”
           -(தமரகுரங்) திருப்புகழ்.

திங்கள் முடிநாதர் சமயக்கார:-

திங்கள் முடிநாதர் சமயம் சிவசமயம். சிவசமயத்திற்குரிய மூர்த்தி குமாரமூர்த்தி. குமாரக்கடவுள் திருஞானசம்பந்தரை அதிஷ்டித்து சிவமயத்தைப் பாதுகாத்தருளினாா.்

முருகவழிபாடு வேறு. சிவவழிபாடு வேறு என எண்ணிச் சிலர் மலைவர். சிவமூர்த்தமே முருகமூர்த்தம். நடராஜ வடிவம் தட்சிணாமூர்த்தி வடிவம் என சிவ மூர்த்தங்களில் பல காணப்படுவதுபோல முருகமூர்த்தமும் ஒன்று என உணர்க. இதனை யறியாது அழிந்தவன் சூரபன்மன் எனவே சூரபன்மன் செய்த பிழையை மற்றவர்கள் மேற்கொள்ளக்கூடாது. சிவமூர்த்தமே குமாரமூர்த்தம். குமாரமூர்த்தியை வழிபடுவோர் தாம் ஒழுகுவது கௌமார சமயம் எனவும் கூறியிடர்ப்படுவர். இத்தகைய இடர்களை நீக்கவே அருணகிரிநாதர் முருகனைச் சிவசமயமூர்த்தி என விளக்கமாக விளம்புகின்றார்.

“திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசில்
அடிபரவு பழநிமலை கதிர்காம முற்றுவளர்
சிவசமய அறுமுகவ திருவேர கத்திலுறை பெருமாளே”
              -(குமரகுருபர முருககுக) திருப்புகழ்.

மந்திரவுபதேச மகிமைக்கார:-

மந்திரங்களை அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப, குருவாக நின்று உபதேசிக்கின்ற மூர்த்தி முருகமூர்த்தியாகும்.