பக்கம் எண் :


760திருப்புகழ் விரிவுரை

அவரைக் குருவாகக் கொண்டு வழிபட்டால். அவர் நிச்சயமாக ஒரு சமயம் குருவாய் வெளிப்பட்டு அருள்புரிவாா.்

அகத்தியருக்கும், அருணகிரிநாதருக்கும் குருமூர்த்தியாக வந்து மந்திரோ பதேசம் புரிந்தருளினார். உண்மைத் துறவியாக அண்மையில் வாழ்ந்த பாம்பன் சுவாமிகளுக்கும் குருமூர்த்தி வந்து அருள் புரிந்தனர்.

“முருகன் தனிவேல் முனிநங் குருவென்
 றருள் கொண்டறியார் அறியுந்தரமோ
 உருவன் றருவன் றுளதன் றிலதன்
 றிருளன் றொளியன் றென நின்றதுவே”     
-அநுபூதி (13)

என்ற அநுபூதியை ஊன்றிப் படித்து உணர்க. மேலும் இறுதியாகிய அநுபூதியிலும் உறுதியுடன் “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்று சுவாமிகள் பாடி முடிக்கின்றனர். எல்லோருக்கும் அவனே குரு. “ஆதி திருப்புகழை மேவுகின்ற கொற்றவன்” அவனே யாகும். உப-சமீபம்; தேசம்- இடம்; இறைவனுடைய அருகில் ஆன்மாவைச் சேர்ப்பது உபதேசம்.

செந்தினகர்வாழும் அருமைத்தேவர் பெருமாளே:-

திருச்செந்தூரில் நினைவுகளாகிய அலைகள் வந்து இறைவன் திருவடியிலே ஓய்ந்து ஒடுங்கிவிடுகின்றன. அதனால் “அலைவாய்” என்று அப்பதிக்கு மற்றொரு பேருமுண்டு. அது பிறவிப் பெருங்கடலின் துறைமுகப் பட்டினம் ஆகும். அங்கு சென்றோர் பிறவிக் கடலினின்று உய்வுபெற்று, முத்திக்கரை சேர்வர். அதனால் அங்கு வந்து தேவர்கள் வழிபடுகின்றார்கள். அந்த அருமையை யுடையவர்கள் என்று குறிப்பிடுகின்றார்.

கருத்துரை

செந்திமாநகரம் மேவிய கந்த நாயகனே! பந்த பாசத்தைத் தரும் மாதர் மயலில் அகப்படாவண்ணம் அடியேனை ஆண்டருள்வீர்.

திருச்செந்தூர்த் திருப்புகழ் விரிவுரை முற்றுப்பெற்றது.