பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்167


78.மூச்சென்பார்; உள்ளம் என்பார்; மோனம்எனும் மோட்சம்என்பார்
பேச்சென்பார்; உன்னுடைய பேர் அறியார்; பூரணமே!
  
79.பரம்என்பார்; பானுஎன்பார்; பாழ்வெளியாய் நின்ற
வரம்என்பார்; உன்றன் வழி அறியார்; பூரணமே!
  
80.எத்தனை பேரோ எடுத்தெடுத்துத் தான் உரைத்தார்;
அத்தனை பேர்க்கு ஒன்றானது அறிகிலேன்; பூரணமே!
  
81.நகார மகாரம் என்பார்; நடுவே சிகாரம் என்பார்
வகாரயகாரம் என்பார்; வகை அறியார் பூரணமே!
  
82.மகத்துவமாய்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து
பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே!
  
83.உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல்
பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன், பூரணமே!
  
84.வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காயம் எடுத்துக் கலங்கினேன்! பூரணமே!
  
85.சந்திரனை மேகமது தான் மறைத்த வாறது போல்
பந்தமுற யானும்உனைப் பார்க்கிலேன்; பூரணமே!
  
86.செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன்நான் பூரணமே!
  
87.நீர்மேல் குமிழிபோல் நிலையற்ற காயம் இதைத்
தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன்; பூரணமே!
  
88.நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு
வஞ்சகத்தைப் போக்க வகை அறியேன்; பூரணமே!
  
89.எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன்; பூரணமே!
  
90.மாயாப் பிரபஞ்ச மயக்கத்தி லேவிழுந்தே!
ஓயாச் சனனம் ஒழிந்திலேன்; பூரணமே!