பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்169


2.அங்கங்கு உணர்வாய் அறிவாகி யே நிரம்பி
எங்கெங்கும் ஆனதிலே ஏகரித்தாய்; நெஞ்சமே!
  
3.அலையாத பேரின்ப ஆனந்த வெள்ளத்தில்
நிலையாய் உரு இருந்து நின்றனையே; நெஞ்சமே!
  
4.பாராமல் பதையாமல் பருகாமல் யாதொன்றும்
ஓராது உணர்வுடனே ஒன்றினையே; நெஞ்சமே!
  
5.களவிறந்து, கொலையிறந்து, காண்பனவும் காட்சியும்போய்
அளவிறந்து நின்றதிலே அன்புற்றாய் நெஞ்சமே!
  
6.பேச்சிறந்து, சுட்டிறந்து, பின்னிறந்து, முன்னிறந்து,
நீச்சிறந்து நின்றதிலே நேசமுற்றாய்; நெஞ்சமே!
  
7.விண்ணிறந்து, மண்ணிறந்து, வெளியிறந்து, ஒளியிறந்து
எண்ணிறந்து நின்றதிலே ஏகரித்தாய்; நெஞ்சமே!
  
8.பார்த்த இடம் எங்கும் பரம் எனவே உள் புறம்பும்
கோத்தபடி உண்மையெனக் கொண்டனையே நெஞ்சமே!
  
9.ஊரிறந்து, பேரிறந்து, ஒளியிறந்து, வெளியிறந்து,
சீரிறந்து நின்றதிலே சேர்ந்தனையே; நெஞ்சமே!
  
10.ஆண்பெண் அலியென்று அழைக்கஅரி தாய் நிறைந்து
காண்ப அரி தாய இடம் கண்ணுற்றாய் நெஞ்சமே!
  
11.ஆங்காரம் அச்சம் அகற்றி அறிவினொடு
தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்றாய் நெஞ்சமே!
  
12.ஆதியாய் நின்ற அகண்டபரி பூரணத்தைச்
சாதியா நின்ற இடம் சார்வுற்றாய் நெஞ்சமே!
  
13.விருப்புவெறுப்பு இல்லாத வெட்டவெளி யதனில்
இருப்பே சுகம் என்று இருந்தனையே நெஞ்சமே!
  
14.ஆரும் உறாப் பேரண்டத்து அப்புறத்தும் இப்புறத்தும்
நீரும் உப்பும் என்ன நிலை பெற்றாய் நெஞ்சமே!