பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்333


மருவும் அயற்புருடன் வருநேரங் காணாமல்
உருகுமனம் போலெனுள்ளம் உருகுவது மெக்காலம்.

58
  
தன்கணவன் தன்சுகத்திற் தன்மனம் வேறானதுபோல்
என்கருத்தி லுன்பதத்தை ஏற்றுவது மெக்காலம்.

59
  
கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்
தேடித் தவிப்பவன்போல் சிந்தைவைப்ப தெக்காலம்.

60
  
எவ்வனத்தின் மோகம் எப்படியுண் டப்படிபோல்
கவ்வனத் தியானம் கருத்துவைப்ப தெக்காலம்.

61
  
கண்ணா லருவி கசிந்துமுத்துப் போலுதிரச்
சொன்னபரம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம்.

62
  
ஆக மிகவுருக வன்புருக யென்புருகப்
போக வநுபூதி பொருந்துவது மெக்காலம்.

63
  
நீரிற் குமிழிபோல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்
பேரின்பக் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்.

64
  
அன்பை யுருக்கி அறிவையதன் மேற்புகட்டித்
துன்பவலைப் பாசத் தொடக்கறுப்ப தெக்காலம்.

65
  
கருவின் வழியறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவி விழிசொரிய அன்புவைப்ப தெக்காலம்.

66
  
தெளியத் தெளியத் தெளிந்தசிவா னந்தத்தேன்
பொரியப் பொழியமனம் பூண்டிருப்ப தெக்காலம்.

67
  
ஆதார மூலத் தடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்துநிற்ப தெக்காலம்.

68
  
மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்ப தெக்காலம்.

69
  
அப்புப் பிறைநடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவதெக்காலம்.

70
  
மூன்று வளையமிட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுதுநிற்ப தெக்காலம்.

71