பக்கம் எண் :

102தமிழியற் கட்டுரைகள்

மகன் முதலாம் விக்ரமாதித்தன். அவன் மகன் புகழ்விப்பவர் கண்டன் என்கிற இரண்டாம் விசயாதித்தன். அவன் மகன் விசயபாகு என்று கூறப்பட்ட இரண்டாம் விக்ரமாதித்தன், (மணிமேகலை 19.54 உ.வே.சா. அடிக்குறிப்பு) கீழ்வரும் பாடல்கள் 12ஆம் நூற்றாண்டிலிருந்த ஏகம்ப வாணன் புகழ்பற்றியன.

  "சேனை தழையாக்கி செங்குருதி நீர்தேக்கி
ஆனை மிதித்த அடிச்சேற்றில் மானபவன்
மாவேந்தர் வேந்தன் பறித்து நட்டான் ஏகம்பன்
மூவேந்தர் தங்கள் முடி"
     இங்ஙனம் மாவலி மரபு வாண கோவரையர்வரை தொடர்ந்து வந்த தூய தமிழ்க் குடியாயிருக்க அவனையும் அவன் மகனையும் அசுரன் எனக் கூறுவது எவ்வாறு பொருந்தும்?
     இனி அசுரர் தமிழர் அல்லது திராவிடர் என்பதற்கு வேறுமொரு சான்றுண்டு. வடநூல்கள் கூறும் எண்வகை மணங்களுள் ஒன்றான ஆசுரம், மறச் செயல் புரிந்த மகட் கோடலாம். ஆசுரமாவது, கொல்லேறு கோடல், திரிபின்றி செய்தல், வில்லேற்றுதல், முதலியன செய்து கோடல் என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள் சூ. 92 உரை) பண்டைத் தமிழகத்து முல்லை நிலத்தில் ஒரு பெண் பிறந்தபோதே ஒருசேங்கன்றிற்கு அவள் பெயர் குறித்து அதை கொல்லேறாக வளர்ப்பதும், அவள் பூப்படைந்தபின் அக் கொல்லேற்றை அடக்குபவனுக்கே அவளைக் கொடுப்பதும் வழக்கம்.
  "கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்."

(கலித். 103)

     கன்று, காலி வளர்த்து நெய், பால் விற்கும் இளச் செய்தி இஃதாயின் போரையே தொழிலாகக்கொண்ட பாலை மறவரும் மூவேந்தரும் எத்துணைத் தறுகணாளரும் துணிசெயலாளருமா யிருந்திருப்பார். இதனாலேயே செயற்கருஞ் செயலை அசுர நிருத்தியம் என்றும், அறுவை மருத்துவத்தை (surgery) அசுர வைத்தியம் என்றும் வடநூல் கூறும்.
  "ஆரார் தலைவணங்கார் ஆரார்தாம் கையெடார்.
ஆரார்தாஞ் சத்திரத்தில் ஆறாதார் சீராரும்
தென்புலியூர் மேவும் சிவனருள் சேர் அம்பட்டத்
தம்பிபுகான் வாசலிலே தான்"
 
என்னும் கம்பர் பாடல், பண்டைத்தமிழ் அறுவை மருத்துவத்திற்குச் சான்று பகரும்.
     பண்டைக் காலத்தில் மாபேருடல் வலிமையுள்ள மல்லரையும், மறவரையும், உறுவலி மதவலி மாவலி என்றழைப்பது வழக்கம். மாவலிமை யுடைமையாலேயே மாவலி அப் பெயர் பெற்றான். மூவுலகையும் அடக்கி யாண்ட மாவலி என்று அவனை இகழ்வோரும் புகழ்வர். வரையாது வந்தீயும் வள்ளன்மையும் வருவதற் கஞ்சா வாய்மையும் முறைசெய்து காப்பாற்றும் இறைமையும் மாவலியின் அரும் பண்புகள்.
     ஆரியத்திற்கு மாறாக யிருந்ததினாலோ சிவநெறிக் கடும் பற்றினாலோ சூழ்ச்சியாக மாவலி மாய்க்கப்பட்டான். அதன் முடிவு அவன் கொடைத் திறத்தையும் சொல் தவறாமையையுமே குன்றின் மேலிட்ட