பக்கம் எண் :

உரையாசிரியர்கள்368

     உப்பு (1050) என்பது இனிமை. காடி என்பது நடுவு நிலைமை.
அஃதாவது சிறுமக்கள்  பலர் கண்புதைத்து நகையாடும் இடத்து அவருள்
ஒருவனை ‘இவன் காடிச்சால்’ என்று நடு இருத்துவர்; நடுநிலை ஆக வழக்கு
என்பது அறிக.

    உட்பகை அஞ்சித் தற்காக்க உலைவிடத்து
    மட்பகையின் மாணத் தெறும்.           (883)

உட்பகை சிறிதும் உறுவழிப் பெரிதும் அஞ்சித் தன்னைப் பரிகரித்துக்கொள்க;
ஏன்எனின் தனக்கு ஓர் தளர்ச்சி வந்த இடத்தே கரைபடக் கட்டிய மண்,
உறுதிக்கு ஒரு தளர்ச்சி வந்த இடத்து மற்று அதனை முழுவதும் முரித்து
எறியும் வெள்ளம்போல் இதுவும் தன் குடிமுழுதும் குலைந்து எறிந்துவிடும்.”

     மட்பகை என்பதற்கு இவர் வெள்ளம் என்று பொருள் கொள்ளுகின்றார்.
இவ்வுரையின் சிறப்பை அறிஞர் டி.பி. பழனியப்ப பிள்ளை பின்வருமாறு
புலப்படுத்துகின்றார்கள்.

     “மட்பகை என்னும் தொடர்மொழி மண்வினைஞராகிய குயவர்
கையாளும் கருவிகளாகிய சுழலுருளி, கொட்டுக்கோல், அச்சுச் சட்டம்,
ஊசி, ஓலை முதலியவற்றுள் எதற்கும் பெயராக வழக்குப் பெற்றுள்ளதன்று.
மண்ணைப் பகுக்கும் காரணத்தால் போந்தது எனின், அவ்வினை செய்யும்
மண்வெட்டி குந்தாலி முதலியவற்றுக்கும் பெயராதல் செல்லாது ஊசி
ஒன்றற்கே பெயராய் அமைதலும் பொருந்தாது எனக் காண்க. மற்று,
திணிந்த மண்ணினை இயல்பாகக் கரைக்கும் தன்மையுடைத்தாகிய நீர்
அம் மண்ணிற்குப் பகையாதலோடு, இறுகச் செறிந்த கரைகளை வெள்ளப்
பெருக்கால் முரித்து எடுத்து எறிந்து செல்லுதல் கண்கூடு ஆதலால்,
‘மண்பகை’ என்ற தொடர்க்கு நீர்வெள்ளம் என்பது பொருட்பேறு
உடைத்தாவது காண்க. அன்றியும் ஊசி, வனைந்த பாண்டத்தை வனையா
மண்ணிற் பகுக்குங்கால் உலைவிடத்துப் பயனாவது இன்றாய் நிலையிடத்துப்
பயனாவது. நீர் வெள்ளம் உலைவிடன் உடைய கரையை முற்றி
மோதியுடைத்தல் எளிதாகலின் உலைவிடத்துச் செயலுடைமை உட்பகைக்கும்
மட்பகைக்கும் பொருந்தும் அன்றி, குயவன் ஊசிக்குப் பொருந்தாமை
அறிந்து கொள்க.”1

5. மணக்குடவர்

     திருக்குறள் உரைகளில், பரிமேலழகர் உரைக்கு அடுத்தபடியாக
அச்சேறி மக்களிடத்தில் பரவிச் செல்வாக்குப் பெற்ற


 

1. திருக்குறள் பொருட்பால் காலிங்கர் - பரிப்பெருமாளுரை முன்னுரை.