பக்கம் எண் :

சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 295

    குலோத்துங்கனுக்கு ஏழு ஆண்மக்களும் ஒரு பெண்ணும் பிறந்தனர்.
ஆண் மக்களுள் சோடகங்கன், மும்முடிச் சோழன், வீரசோடன், விக்கிரம
சோழன் என்பவர்கள் வேங்கி நாட்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி
வந்தனர். மகள் சிங்கள இளவரசன் ஒருவனுக்கு மணமுடிக்கப் பெற்றாள்.

    கங்காபுரி அல்லது கங்கைகொண்ட சோழபுரமே குலோத்துங்கனின்
தலைநகராகத் தொடர்ந்து விளங்கிவந்தது. காஞ்சிபுரத்தினின்றும் பல
ஆணைகளைப் பிறப்பிப்பது குலோத்துங்கனுக்கு வழக்கமாக இருந்தது.

விக்கிரம சோழன் (கி.பி. 1120-1135)

    முதலாம் குலோத்துங்கனை யடுத்து அவனுடைய மூத்த மகன் விக்கிரம
சோழன் சோழநாட்டுப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான் (கி.பி. 1120).
மேலைச் சளுக்க மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன் கி.பி. 1126-ல்
காலமானான். விக்கிரமன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான்.
வேங்கியின் அரசை மேலும் உறுதிப்படுத்தினான். கங்கபாடியின் ஒரு
பகுதியான கோலாரை மீட்டுக்கொண்டான். அவனுடைய ஆட்சியில் கி.பி.
1125ஆம் ஆண்டளவில் வடஆர்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களில்
வெள்ளமும் பஞ்சமும் ஏற்பட்டு மக்கள் அல்லலுற்றனர்.

    சோழரின் தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அண்மையில்
சிதம்பரம் அமைந்துள்ளது. அங்குள்ள திருச்சிற்றம்பலம் என்னும் நடராசர்
கோயிலுக்கு முதலாம் பராந்தகன் முதல் பின்னிட்டு வந்த சோழர்
அனைவரும் அளவற்ற தானங்கள் அளித்து வந்துள்ளனர். விக்கிரம
சோழனும் கி.பி. 1128-ல் இக்கோயிலுக்குப் பெரியதொரு நன்கொடை
வழங்கினான். நாடு முழுவதிலும் அடிக்கடி சுற்றுலா வரும் நல்லதொரு
வழக்கத்தை விக்கிரமன் மேற்கொண்டிருந்தான். அவன் பன்முறை
சிதம்பரத்திலும் தங்கியிருந்ததுண்டு. அவனுடைய விருதுகளில் ஒன்றான
‘தியாக சமுத்திரம்’ என்பது அவனுடைய வள்ளன்மையையும், மற்றொன்றான
‘அகளங்கன்’ என்பது அவன் வாழ்க்கைத் தூய்மையையும் எடுத்துக்
காட்டுகின்றன. சிதம்பரம் நடராசர் கோயிலுக்குப் பல திருப்பணிகள்
புரிந்தான். அக் கோயிலின் அமைப்பில் பல புதுமைகளை இயற்றினான்.
நரலோக வீரன் குலோத்துங்கனின் இறுதி நாள்களில் தொடங்கிய பல
திருப்பணிகளை விக்கிரம சோழன் தன் காலத்தில் முற்றுவித்தான். கோயிலின்
புறமதிற்சுவருக்கு விக்கிரம சோழன் திருமாளிகை என்று