பாண்டியனுடன் உறவு பூண்டு அவனைப் பாண்டி நாட்டு அரியணையில் ஏற்றி வைத்தனர். சோழர், பாண்டியர், சிங்களவர் இம் மூன்று நாட்டு மன்னர்களும் விளையாடிய அரசியல் சூதாட்டம் இரண்டாம் இராசராசன் ஆட்சிக்குப் பிறகு கி.பி. 1179 வரையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178-1216) இரண்டாம் இராசாதிராசனின் விருப்பப்படியே அவனுக்குப் பிறகு மூன்றாம் குலோத்துங்கன் அரசுகட்டில் ஏறினான். மூன்றாம் குலோத்துங்கன் சோழப்பேரரசர்களின் நேரான பரம்பரையில் வந்தவனல்லன். இவனுக்கும் இரண்டாம் இராசாதிராசனுக்கும் எந்த வகையான உறவு என்பது விளங்கவில்லை. மூன்றாம் குலோத்துங்கன் பட்டமேற்றவுடனே வீரபாண்டியன் மீண்டும் சிங்களவருடன் அரசியல் சூழ்ச்சிகளில் இறங்கிச் சோழரை எதிர்க்கலானான். குலோத்துங்கன் வீரபாண்டியனைக் கவிழ்த்துக் குலசேகர பாண்டியனின் உறவினனான விக்கிரம பாண்டியனுக்குப் பட்டம் சூட்டுவித்தான் (கி.பி. 1182). கேரள மன்னனின் துணைகொண்டு வீரபாண்டியன் மீண்டும் அரசியல் கிளர்ச்சிகளில் இறங்கினான். ஆனால், குலோத்துங்கன் அவனை முறியடித்தான். வீரபாண்டியன் கொல்லத்தில் அடைக்கலம் புகுந்தான். வழக்கம்போல் சிங்களமும் இக்கிளர்ச்சியில் தலையிட்டது. எனினும், சோழரின் படைவலிக்கு அது அடிபணிய வேண்டிய தாயிற்று. எனினும், சிங்கள மன்னன் நிகசங்கமல்லன் இருமுறை பாண்டி நாட்டின்மேல் படையெடுத்து வந்து இராமேசுவரத்தைக் கைப்பற்றினானெனச் சிங்களத்து வரலாறுகள் கூறுகின்றன. குலோத்துங்கன் கி.பி. 1190-94 ஆண்டுகளில் பலமுறை கொங்கு நாட்டின்மேல் படையெடுத்துக் கிளர்ச்சிகளை ஒடுக்கிச் சோழப் பேரரசின் மேலாட்சியை நிலைநாட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வடஆர்க்காட்டுக்கும் நெல்லூருக்கும் இடையிட்ட நாடு தெலுங்குச் சோடரின் ஆட்சியில் இருந்து வந்தது. காஞ்சிபுரமும் அவர்கள் கைவசத்திலேயே இருந்தது. சோழருக்கும் தெலுங்குச் சோடருக்குமிடையே நல்லுறவு பொருந்தியிருந்தது. எனினும், குலோத்துங்கன் அவர்களிடமிருந்து காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான் (கி.பி. 1196). இச் சமயத்தில் சடாவர்மன் குலசேகரன் பாண்டி நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். இவன் விக்கிரம பாண்டியனின் மகன் போலும். இவன் சோழரின் மேலாட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தான். குலோத்துங்கன் பெரும் படையொன்றைப் |