தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் போலவும், கங்கை கொண்ட சோழீச்சுரம்போலவும் மூன்றாம் குலோத்துங்கன் கும்பகோணத்துக்கு அண்மையிலுள்ள திரிபுவனம் என்னும் ஊரில் அழகும், அமைப்பும் வாய்ந்த சிவன்கோயில் ஒன்றை எழுப்பினான். அவனுடைய கலைத்திறனுக்கும், சிவ பக்திக்கும், இதய விரிவுக்கும் அழியாச் சின்னமாக உயர்ந்து நின்று வருகின்றது அக்கோயில். மூன்றாம் இராசராசன் (கி.பி. 1216-1246) குலோத்துங்கனையடுத்து மூன்றாம் இராசராசன் முடிசூட்டிக் கொண்டான். இவ்விருவரும் எம் முறைக் கேளிர் என்று விளங்கவில்லை. ஒருவேளை இராசராசன் குலோத்துங்கனின் மகனாகவும் இருக்கக்கூடும். இராசராசன் அரியணையில் அமர்ந்தவுடனே அரசியல் சுழிகள் இவனை விழுங்கக் காத்துக்கொண்டிருந்தன. பாண்டியரின் செல்வாக்கு உயர்ந்துகொண்டே போயிற்று. போசளர், காடவர்கள், தெலுங்குச் சோடர்கள் ஆகியவர்கள் ஒருபுறம் இராசராசன்மேல் பாயக் காலங்கருதி வந்தனர். பாண்டியருடன் சோழர் மேற்கொண்டிருந்த சமாதான உடன்படிக்கையை இராசராசன் மீறினான். உடனே பாண்டியர்கள் சோழ நாட்டின்மேல் படையெடுத்து வந்து தலைநகரைக் கைப்பற்றிக் கொண்டனர். இராசராசன் நாட்டைக் கைவிட்டு ஓடினான். காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் என்பான் அவனைத் தாக்கிச் சிறையிட்டான் (கி.பி. 1231) மேற்கில் போசளர்களின் கையும் ஓங்கி வந்தது. அரசியல் செல்வாக்கிலும், சூழ்ச்சியிலும், படைவலியிலும் அவர்கள் மேம்பட்டு வந்தனர். போசள மன்னன் இரண்டாம் வல்லாளன் (கி.பி. 1173-1220) என்பவன் சோழ நாட்டு இளவரசி ஒருத்தியை மணம் புரிந்திருந்தான். அவள் வயிற்றுப் பிள்ளை இரண்டாம் நரசிம்மன் சோழப் பேரரசன் இராசராசனைச் சிறையிட்டு வைத்த கோப்பெருஞ்சிங்கனின் நெஞ்சுரத்தைக் கண்டு வெகுண்டான். இராசராசன் சேந்தமங்கலத்தில் சிறைசெய்யப்பட்டிருந்தான். கோப்பெருஞ்சிங்கன் சோழ நாட்டில் பல இடங்களிலும் தன் படைகளை ஏவிக் கோயில்களையும் இடித்து நிரவினான். இரண்டாம் நரசிம்மன் தன் தலைநகரமான துவாரசமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டு வந்து, திருவரங்கத்துக்கு அண்மையில் உள்ள பாச்சூரில் தண்டு நிறுத்தினான் ; திருவரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும் கைப்பற்றினான்; தன் படைத்தலைவர் இருவரைக் கோப்பெருஞ்சிங்கன்மேல் செலுத்திவிட்டு இராமேசுவரம் சென்று அங்கு வெற்றித் தூண் ஒன்றை நாட்டினான் (கி.பி. 1231-2). படைத் தலைவர்களான அப்பண்ணாவும் சதுத்திர |