நடராஜர் கோவில் - சிதம்பரம் 1


சோழ நாட்டு (வடகரை)த் தலம்.

‘கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம்
நடராசப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை.
கோயிலின் பெயர் சிதம்பரம். இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து,
கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.

நடராசப் பெருமான் ஆலயத்தால் பிரசித்திபெற்ற இத்தலத்திற்கு
தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும் - சென்னை, கடலூர், விழுப்புரம்,
திருச்சி, சேலம், தஞ்சை முதுலிய பல ஊர்களிலிருந்தும் பேருந்து
வசதிகள் உள்ளன. சென்னை - திருச்சி மெயின்லைன் இருப்புப் பாதையில்
உள்ள புகைவண்டி நிலையம். தில்லைமரங்கள் அடர்ந்த காடாக
இருந்தமையால் தில்லைவனம் என்ற பெயர் பெற்றது. (இம்மரங்கள்
தற்போது சிதம்பரத்தில் இல்லை. ஆனால் இதற்கு அண்மையிலுள்ள
பிச்சாவரத்திற்குப்     பக்கத்தில்     உப்பங்கழியின்     கரைகளில்
காணப்படுகின்றன.) வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) மிகுதியான
பற்றினால் பூசித்த ஊராதலின் ரெும்பற்றப்புலியூர் என்றும் ; சித் +
அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் ஞானாகாசம் என்றும்,
பூலோக கயிலாயம், புண்டரீகபுரம் சிதாகாசத்தலம் எனவும் இதற்குப்
பல பெயர்களுண்டு. தில்லைவாழ் அந்தணர்கள் இருந்து பெருமானைப்
பூசித்துக் காத்துவரும் அற்புதத்தலம். ஜைமினி. ‘வேத பாதஸ்தவம்’
அருளிச் செய்ததும் ; சேந்தனார் அருள் பெற்றதும் ; மாணிக்கவாசகர்
திருவாசகமும் திருக்கோவையாரும் பாடி முத்தி பெற்றதும் ; வியாக்ரபாதர்
பதஞ்சலி உபமன்யு வியாசர், சுகர் திருநீலகண்டர், திருநாளைப்போவார்
கூற்றுவநாயனார், கணம்புல்ல நாயனார், சந்தானாசாரியர்கள் முத்தி பெற்ற
சிறப்புடையதுமாகிய     பழம்பதி. தில்லைவாழ் அந்தணர்களாகிய
தீக்ஷிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். இக்கோயிலுள்
‘திருமூலட்டானம்’ என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம
வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள்
அனைத்தும் இந்த மூலத்தான இலிங்கத்தில் ஒடுங்குவதால் இம்
மூர்த்திக்கு இப்பெயர் உண்டாயிற்று. எனவே தில்லைத்தலத்தில்
வசிப்போர், வந்துகண்டு செல்வோர், அர்த்தசாம வழிபாட்டைக் காண
வேண்டியது அவசியமாகும்.

இறைவன்- விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும்,
திருவானைக்கா ‘உந்தி’யாகவும், திருவண்ணாமலை ‘மணிபூரக’மாகவும்,
திருக்காளத்தி ‘கழுத்தாகவும்’, காசி ‘புருவமத்தி’யாகவும், சிதம்பரம்
‘இருதயஸ்தான’மாகவும்     சொல்லப்படும். இக்கோயிலில் உள்ள
பேரம்பலத்திற்கு ‘மேரு’ என்றும் பெயருண்டு. “பெருமதில் சிறந்த
செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம்மேரு வருமுறை
வலங்கொண்டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் சென்றார்”
என்பது சேக்கிழார் வாக்கு (தடு. புரா.) வடக்கிலொரு ‘மேரு’ இருப்பதால்
இதைத் ‘தட்சிணமேரு’ என்று கூறுவர்.

‘மேருவிடங்கன்’ என்பது ‘சேந்தனார்’ தொடர். பஞ்சபூதத் தலங்களுள்
இஃது ஆகாயத்தலம். பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை,
சிற்சபை. பதஞ்சலி வியாக்ரபாதர்களுக்குப் பெருமான் கனகசபையில்
நடனக்காட்சியை அருளிய தலம். தரிசிக்க முத்தி தரும்பதி. மூவர் பாடல்
பெற்ற தலம்.

இராசராசன் வேண்டுதலின் பேரில் நம்பியாண்டார் நம்பிகளால்
பொல்லாப்பிள்ளையாரின் துணைகொண்டு திருமுறைப் பதிகங்கள்
கண்டெடுக்கப்பட்ட     தெய்விகத்தலம்.     பெரியபுராணமென்னும்
திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் பெருமானால் அரங்கேற்றம்
செய்யப்பட்ட அருமையான தலம். வைணவத்திலும் ‘திருச்சித்திரகூடம்’
என்று புகழ்ந்தோதப்படும் திருப்பதி. நாற்புறமும் கோபுரங்கள். தெற்குக்
கோபுரவாயிலே பிரதான வாயிலாகும்.

இறைவன் -

நடராசர், அம்பலக்கூத்தர், திருச்சிற்றம்பலமுடையார்,அம்பலவாணர், (கூத்தபிரான், கனகசபாபதி,சபாநாயகர்.)

இறைவி - சிவகாமி, சிவகாமசுந்தரி.
தலமரம் -

தில்லை, ஆல் (திருமூலட்டானப் பிராகாரத்தில் ‘ஆல்’கருங்கல் வடிவில் செய்து வைக்கப்பட்டுள்ளது.)

தீர்த்தம் -

சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம்,(திருப்புலீச்சரம்) பிரமதீர்த்தம், அனந்த தீர்த்தம்முதலியன.

(சிவகங்கையே பிரதான தீர்த்தம். இளமையாக்கினார் கோயிலின்
எதிரில் வியாக்ரபாததீர்த்தம் உள்ளது.)

இக்கோயிலுள் 1. சிற்றம்பலம் 2. பொன்னம்பலம் 3. பேரம்பலம்
4. நிருத்தசபை 5. இராசசபை என ஐந்து பெருமன்றங்கள் உள்ளன.

  1. சிற்றம்பலம்: நடராசப் பெருமான் திருநடம்புரிந்தருளும் இடம்.
    “தூய செம்பொன்னினால் எழுதிவேய்ந்த சிற்றம்பலம்” என்பார்
    அப்பர். இவ்வம்பலம் ‘தப்ரசபா’ எனப்படும். முதலாம் ஆதித்த
    சோழனின் மகன் முதற்பராந்தகசோழன் இச்சிற்றம்பலத்திற்குப்
    பொன்வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளும்
    ‘லெய்டன்’ நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. இவனுக்கு
    முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோயிற்புராணம்
    தெரிவிக்கின்றது. இச்சிற்றம்பலம் உள்ள இடம் உயர்ந்த
    அமைப்புடையது. பக்கவாயில் வழியாக மேலே செல்ல வேண்டும்.
    இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் -
    பஞ்சாக்கரப் படிகள் உள்ளன. இப்படிகளின் இருபுறமும் யானை
    உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை
    இப்படியில் வைத்த போது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று
    தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப் பெருமான்
    திருவடியில் வைத்தமையால் அந்நூலுக்குத் ‘திருக்களிற்றுப் படியார்’
    என்ற பெயர் ஏற்பட்டது. நடராசப்பெருமானின் வலப்பால்
    ‘ரஹஸ்யம்’ - அருள்ஞானப் பெருவெளி - உள்ளது.

  2. பொன்னம்பலம்(கனகசபை): நடராசப்பெருமான் அபிஷேகம்
    கொண்டருளும் இடம். சிற்றம்பலத்திற்கு முன்னால் உள்ள பகுதி.
    இங்கு ஸ்படிகலிங்கத்திற்கு நாடொறும் ஆறுகால பூஜையும்,
    இரண்டாங்காலத்தில் ரத்னசபாபதிக்கு அபிஷேக வழிபாடுகளும்
    நடைபெறுகின்றன. இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம்
    ஆதித்த சோழன், கொங்கு நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த
    மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார்
    ‘இடங்கழி’ நாயனார் வரலாற்றில் கூறுகின்றார். தில்லைக் கோயில்
    கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும்,படைத்தலைவனுமான
    மணவில்     கூத்தனான    காளிங்கராயன்     என்பவன்
    இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று
    கூறுகின்றது.

  3. பேரம்பலம் : இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான
    காளிங்கராயன் விக்கிரமசோழன் காலத்தில் இச்சபையைச்
    செம்பினால் வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால்
    அறியலாம். பின்பு, இப்பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தவன்
    மூன்றாங்குலோத்துங்கன் சோழன் ஆவான். இங்குத்தான்
    பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர். இம்மணவில்கூத்தன்
    செம்பொற்காளமும் செய்து தந்தான் ; நூற்றுக்கால் மண்டபம்
    அமைத்தான் ; நந்தவனம் அமைத்தான் ; ஓராயிரம் கறவைப்
    பசுக்களைக் கோயிலுக்கு வழங்கினான் ; திருப்பதிகங்கள் ஓத
    மண்டபம் அமைத்தான் ; திருமுறைகளைச் செப்பேடு செய்வித்தான்
    என்னும் பல அரிய செய்திகளும் கல்வெட்டுக்களால்
    தெரியவருகின்றன.

  4. நிருத்த சபை : நடராசப்     பெருமானின் கொடிமரத்துக்கு
    (துவஜஸ்தம்பத்திற்கு)த் தென்பால் உள்ளது. ஊர்த்துவ தாண்டவம்
    செய்தருளிய இடம் இதுவே. அப்பெருமானின் திருமேனி இங்கே
    உள்ளது.

  5. இராச சபை : இஃது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர்
    மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு முன்னர்ச் சொல்லிய
    பஞ்சாக்கரப் படியில் அபிஷேகமும் இம்மண்டபத்தில் முடிசூட்டு
    விழாவும் நடைபெற்று வந்தன. இம்முடிசூட்டினைத் தில்லைவாழ்
    அந்தணர்களே செய்து வந்தனர்.

இத்தலத்தில் நிகழ்ந்த அரிய செயல்களுள் சில

  1. மாணிக்கவாசகர் புத்தரை வாதில்வென்று ஊமைப் பெண்ணைப்
    பேசவித்தது.
  2. திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக்
    கண்டது.
  3. உமாபதிசிவம் ‘கொடிக்கவி’ பாடிக் கொடியேற வைத்தது.
  4. திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச்
    செய்தது.
  5. திருமுறைகளை வெளிப்படுத்தியது.
  6. சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட
    அடியெடுத்துத் தந்தது முதலிய பலவாகும்.

தேவாரப் பதிகங்கள், திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு, கோயில் நான்மணி மாலை, கோயில் திருப்பண்ணியர்
விருத்தம், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை,
சிவகாமி இரட்டை மணிமாலை, தில்லைக் கலம்பகம், கோயிற் புராணம்
முதலிய நூல்களாலும், ஏனைய அளவற்ற நூல்களில் ஆங்காங்கு
வரும் பகுதிகளாலும் இத்தலத்தின் பெருமையை அறியலாம்.

பின்