நெல்லயப்பசுவாமி கோவில் - திருநெல்வேலி


பாண்டிய நாட்டுத் தலம்.

திருநெல்வேலி, மாவட்டத் தலைநகரம். சென்னையிலிருந்து விரைவுப்
பேருந்துகளும், புகைவண்டி வசதிகளும் உள்ளன. மதுரையிலிருந்தும்,
பிறவூர்களிலிருந்தும் மதுரை வழியாகவும் நெல்லைக்கு அடிக்கடி
பேருந்துகள் உள்ளன.

வேதபட்டர், இறைவனுக்குத் திருவமுது ஆக்குவதற்கு உலரப்
போட்டிருந்த நெல், மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டுக்
காப்பாற்றியமையால் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று பெயர்
ஏற்பட்டது. ஆகவே இத்தலம் நெல்வேலி (திருநெல்வேலி) எனப் பெயர்
பெற்றது.

பாற்குடம் சுமந்து சென்ற அன்பனை (முழுதுங்கண்ட ராமக்கோன்)
இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறச் செய்து பாலைத் தன்மீது
கவிழச் செய்து, அதனால் வெட்டுண்டு, காட்சி தந்தருளியதால் சுவாமிக்கு
வேணுவனநாதர் என்றும் பெயர். இத்தலமும் வேணுவனம் என்று
வழங்கலாயிற்று.

ஊர்ப்பெயர் :- வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி,
சாலிவாடி, சாலிநகர், பிரம விருந்தபுரம், தாருகாவனம் என்பன. கோயில்
கல்வெட்டுக்களில் இத்தலம் ‘கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி
மங்கலம்’ என்று காணப்படுகிறது.

இறைவன் -

நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர்,நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேணுவனேஸ்வரர், வேணுவன மகாலிங்கேஸ்வரர், மூலவர் சுயம்பு மூர்த்தி.

இறைவி - காந்திமதி அம்மை, வடிவுடையம்மை.
தலமரம் - மூங்கில் (வேணு, வேய்)
தீர்த்தம் -

பொற்றாமரைக்குளம், (ஸ்வர்ண புஷ்கரணி) கருமாறித்தீர்த்தம், சிந்துபூந்துறை.

சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

இக்கோயிலில் மிகப் பழமையான கல்வெட்டுக்கள் உள. இக்கோயில்
14 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. காமிக ஆகம முறைப்படி அமைந்து
நாடி வருவோர்க்கு நலமருளும் இத்திருக்கோயில் திருநெல்வேலி நகரின்
நடுவில் அமைந்துள்ளது.

கோயிலுள் பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகள்.
நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம்,
திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம்,
சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா
மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன்
விளங்குகின்றன.

மூன்று தெப்பக் குளங்கள் இக்கோயிலில் உள்ளன. சுவாமிக்கு நான்கு
ராஜகோபுரங்களும் அம்பாளுக்கு ஒரு கோபுரமும் உள்ளன. சுவாமி,
அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை. நந்தி பெரியது
- சுதையாலானது சுவாமி. சந்நிதிக்குச் செல்லும் வழியில் இசைத் தூண்கள்
உள்ளன. துவாரபாலகர்களைக் கடந்து மகா கணபதி, முருகன்
சந்நிதிகளைத் தரிசித்து உட்புகுந்தால் சுவாமி சந்நிதி மிகவும்
விசாலமானது.

நெல்லையப்பர் - சிவலிங்கத் திருமேனி, மேற்புறம் வெட்டப்பட்ட
அடையாளம் உள்ளது. இப்போதுள்ளது 21-ஆவது ஆவுடையார் என்றும்
20 ஆவுடையார்கள் பூமியின் கீழ் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது.
இம்மூர்த்தி ‘மிருத்யஞ்சமூர்த்தி’ ஆவார்.

அன்வர்கான் என்ற இஸ்லாமியரின் மனைவிக்கு உண்டான
வயிற்றுவலி நீங்காமையால் அவன் வழிபட்டுப் பேறு பெற்ற சிவலிங்கம்
‘அனவரத லிங்கம்’ என்று வழங்கப்படுகிறது. இதற்கு அவர் தந்துள்ள
நகை முதலியவைகளும் உள்ளன.

நாள்தோறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.
இவற்றுள் உச்சிக்காலத்தில் மட்டும் காந்திமதி அம்பிகையே - இறைவியே
நேரில் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். அகத்தியருக்கு
இறைவன் கல்யாண காட்சியைக் காட்டி அருளிய தலமிதுவே. சுவாமிக்குப்
பக்கத்தில் கோவிந்தராஜர் சந்நிதி உள்ளது.

இங்குள்ள உற்சவத் திருமேனி கையில் தாரை வார்த்துத் தரும்
பாத்திரத்துடன் இருப்பதைக் காணலாம். திருமால் பார்வதியைத் தாரை
வார்த்துத் தர இறைவன் மணந்து கொள்ளும் நிகழ்ச்சியை இது
நினைவூட்டுகிறது. திருமாலின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

இன்றும் ஐப்பசியில் நடைபெறும் திருக்கல்யாண விழாவில் ஒருநாள்
வைணவர் வந்து தாரை வார்த்துத் தர, சிவாசாரியார் பெற்றுக் கொள்ளும்
ஐதீகம் நடைபெறுகின்றது. சுவாமி பிராகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி
தேவர், பாண்டியராஜா சந்நிதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர்
உருவங்கள் கல்லில் வண்ணந் தீட்டப்பட்டுள்ளன.

அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி
சற்றுத் தாழ்வில் உள்ளது. இத்தலம், பஞ்ச சபைகளுள் தாமிரச்
சபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் ‘ தாமிர
சபாபதி’ என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு
வேயப்பட்டுள்ளது. பின்னால் உள்ள நடராஜர்-சிலாரூபம்-சந்தன சபாபதி
என்றழைக்கப்படுகிறார்.

உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன.
கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு
அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன்
அருமையாகத் திகழ்கின்றது. சபைக்குப் பக்கத்தில் தலமரம் உள்ளது.

இக்கோயில் இரு துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. மகிஷாசுரமர்த்தினி
சந்நிதி தெற்கு நோக்கியும், பண்டாசுரமர்த்தினி சந்நிதி வடக்கு பார்த்தும்
உள்ளன.

ஆறுமுகர் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமானது. வள்ளி தெய்வ
யானையுடன் ஆறு முகங்களும் சுற்றிலும் திகழ, ஒவ்வொரு முகத்திற்கும்
நேரே இரண்டிரண்டு திருக்கரங்கள் வீதம் சுற்றிலும் திகழ,
அவ்வவற்றிற்குரிய ஆயுதங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்துள்ள
பாங்கு அற்புதமானது. அமாவாசைப் பரதேசி என்பவர் ஒருவர் 120 வயது
வரை வாழ்ந்திருந்து இச்சந்நிதியை விசேஷித்துக் காவடி எடுத்து
இறுதியில் ஓர் அமாவாசையில் சித்தியடைந்தார். இவராலேயே இச்சந்நிதி
மிக்க சிறப்பு பெற்றது. பாம்பன் சுவாமிகள் பதிகம் சுவரி்
பதிக்கப்பெற்றுள்ளது.

பின்