சியாமளமேனிப் பெருமாள் கோவில் - திருக்கண்ணங்குடி

    வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய
    வாளரவி னனை மேவிச்
    சங்கமா ரங்கைத் தடம லருந்திச்
    சாம மாமேனி என் தலைவன்
    அங்கமாறைந்து வேள்வி நால் வேத
    மருங்கலை பயின்றெரி மூன்றும்
    செங்கையால் வளர்க்கும் துளக்கமில்
    மனத்தோர் திருக்கண்ணங் குடியுள் நின்றானே
            (1748) பெரிய திருமொழி 9-1-1

பெருங்கப்பல்கள் மிதந்து செல்லக்கூடிய கடலில் அழகிய
வரிகளையுடைய தோற்றத்துடன் கூடிய திருவனந்தனாகிய ஆதிசேடன்
மேல், கரங்களில் சங்கு சக்கரத்துடன் தாமரை பொருந்திய நாபிக்
கமலத்துடனும், நீல மேகமன்ன நிறத்தில் திகழும் என்தலைவனாகிய
எம்பெருமான். ஆறங்கமுள்ள வேதங்களிலும், இதிகாசங்களிலும் தேர்ச்சி
பெற்று, ஐந்து வகையான வேள்விகளைச் செய்து கொண்டு நான்கு
வேதங்களிலே சொல்லப்பட்டவாறு மூன்று     நெருப்புகளையும்
வேள்விக்காக ஆராதனம் பண்ணுகிறவர்களான பெரியோர்கள்
வசிக்கக்கூடிய திருக்கண்ணங்குடியிலே எழுந்தருளியுள்ளான், என்று
திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்திருப்பதி சோழ நாட்டுத் திவ்ய
தேசங்கள் நாற்பதில் இருபத்தியாறாவதான திவ்யதேசமாக இடம்
பெறுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும்
பேருந்து மார்க்கத்தில் சுமார் 5 மைல் தூரத்தில் உள்ள ஆழியூர் என்ற
இடத்தில் இறங்கி தெற்கே சுமார் 5 பர்லாங் தூரம் சென்று இத்தலத்தை
அடையலாம்.

திருத்துறைப்பூண்டியிலிருந்தும்,     ஆழியூர்     மார்க்கமாக
நாகப்பட்டினத்திற்குப் பேருந்துகள் செல்கின்றன.

திருவாரூர் நாகப்பட்டினம் இருப்புப்பாதையில் கீழ்வேளூர் என்ற
புகைவண்டி நிலையத்திலிருந்து இறங்கி சுமார் 1 1/2 மைல் தூரம்
நடந்தும் இத்தலத்தை அடையலாம்.

பின்