ஆதிவராகப்பெருமாள் கோவில் - திருக்கள்வனூர்

    நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
    நிலாத்திங்கள் துண்டத்தாய், நிறைந்தாய, கச்சி
    ஊரகத்தாய், ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்
    உள்ளுவாருள்ளத் துள்ளாய், உலகமேத்தும்
    காரகத்தாய் கார் வாளத்துள்ளாய், கள்வா
    காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
    பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
    பெருமான் உன் திருவடியே பேணி னேனே
            (2059) திருநெடுந்தாண்டகம் 8

என்று திருமங்கையாழ்வாரால் அர்ச்சாவதார மூர்த்திகள் பலரை
ஒருங்கே மங்களாசாசனம் செய்யப்பட்ட இப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள
கள்வா என்னும் ஒரு சொல்லே இத்தலத்திற்கும் இப்பெருமாளுக்கும்
இட்ட மங்களாசாசனம் ஆகும். திருமங்கையாழ்வார் எத்தனையோ
தலங்கட்கு எம்பெருமானின் திருப்பெயர்களை மட்டும் மங்களாசாசனம்
செய்துள்ளார். அப்பாடல்களில் அவ்வெம்பெருமான்களின் பெயர்கள்
தனித்து தெளிவாக மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்கும். அல்லது
தலத்தின் பெயர் மட்டும் தனித்து மங்களாசாசனம் செய்யப்பட்டு
ஒலிக்கும்.

உதாரணம்

அ) தண்ணார் தாமரை சூழ்தலைச்சங்க மேல்திசையுள் - 1736
என்பதில் உள்ள தலைச்சங்க மென்பது தலைச்சங்க
நாண்மதியத் திவ்ய தேசத்தையும்.
ஆ) கோழியும் கூடலும் கோயில் கொண்ட - 1399
என்பதில் கோழி என்ற சொல்லால் தலத்தையும்
இ) போரானை குறுங்குடியெம் பெருமானை, திருத்தங்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை -

என்பதில் உள்ள கரம்பனூர் உத்தமனை என்பதில்
பெருமானையும் தலத்தையும்,

ஈ) பிண்டியார் மண்டை யேந்தி
பிறர்மனை திரிதந்துண்ணும்
உண்டியான் சாபந்தீர்த்த
ஒருவனூர் உலகமேத்தும்
கண்டியூர் (2050)

என்பதில் கண்டியூர் என்ற சொற்றொடராலும் தெளிவாகக்
குறிக்கிறார். இதேபோல் திருமழிசையாழ்வாரும்

கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன் - ஆற்றங்
கரை கிடக்கும் கண்ணன் - 243

        என்று சுட்டியுள்ளார்.

இதில் ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்ற சொல்லாலே
கவித்தலத்தை மங்களாசாசனம் செய்கிறார். இங்கு பெருமாளின்
திருநாமத்தால் மட்டும் மங்களாசாசனம் அதாவது ஆற்றங்கரை
கிடக்கும் கண்ணன் கவித்தலத்தான் என்று மங்களாசாசனம் செய்கிறார்.

இதுபோன்றே மற்ற ஆழ்வார்களும் ஒரே சொல்லால் பல
திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

ஆனால் இப்பாடலில் இத்தலத்தின் பெயரைக் குறிக்காமல் கள்வா
என்று மட்டும் குறிக்கிறார். கள்வன் என்னும் சொல் நம் மாயனுக்கே
உரித்த தனிச் சொல்லாகி சர்வசாதாரணமானதாக வழங்குவதாகும்.
மேலும் இதில் கார்வானத்துள்ளாய் என்று கார்வான திவ்ய தேசத்தை
தனியாகவும், கள்வா என்னும் சொல்லால் கள்வா என்று பெருமாளின்
பெயரைத் தனியாகவும், மங்களாசாசனம் செய்தார் என்று கொள்ளவும்
இடமுண்டு. அதாவது கார்வானம் என்று ஒரு திவ்ய தேசத்தையும்
கள்வா என்று மற்றுமோர் திவ்ய தேசத்தையும் மங்களாசாசித்துள்ளார்
என்றும் கொள்ளலாம்.

அன்றியும் கள்வன் என்ற பெயரில் வேறு இரண்டு திவ்ய தேசத்து
எம்பெருமான்களுக்கும் திரு நாமம் உண்டு.

  1. ஸ்ரீ வைகுண்ட கள்ளப்பிரான்

  2. திருமாலிருஞ்சோலைக் கள்ளழகர் திருமாலிருஞ் சோலைக்கு
    பயின்று வந்த பாக்களில் எல்லாம் மாயன் என்ற சொல்லால்
    மங்களாசாசனம் செய்திருப்பது, மறைமுகமாக சுட்டுவதாகவே
    கொள்ளலாம்.

எனவே கள்வா என்னும் சொல் கார்வானத்துள்ளானைப் பற்றி
மட்டுமன்று என்று தலைக்கட்டலாம்.

மேலும் மேற்கூறியது போல ஒரு சொல்லால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலங்கள் அனைத்தும் வைணவ இலட்சினைகளோடு
ஸ்ரீவைஷ்ணவ லட்சணமும் பெற்றுத் தணித்து நின்று மணங்கமழ்கின்றன.
ஆனால் இத்தலமோ, சிவஸ்தலமான காஞ்சி காமாட்சி கோவிலுக்குள்
உள்ளது. காமாட்சியம்மன் கர்ப்பக் கிரஹத்திற்கு முன் ஒரு மூலையில்
(ஒரு கம்பத்தில் உள்ள சிலை போல்) கிழக்கு நோக்கிய
திருக்கோலத்தில் நால்தோள் எந்தாயாக எழுந்தருளியிருக்கிறார்.

எனவே திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த கள்வன்
இவர்தானா என்று இந்த மங்களாசாசனத்தை பெரியோர்கள் பலர்
சந்தேகிக்கின்றனர்.

இச்சந்தேகம் சரியானதேயாகும். திருக்கள்வனூர் என்பது யாது.
கள்வா என்று மங்களாசாசனம் செய்யப்பட்ட கள்வன் யார். கார்வானம்
என்பது யாண்டுளது என்று ஆய்ந்து கண்டறிதல் அவசியமாகிறது.

வராஹச் சேஷத்திரங்கள்தான் திருமால் சேஷத்திரங்களில் மிகவும்
தொன்மை வாய்ந்ததாகும். முன்னொரு காலத்தில் நாடெங்கும் வராக
ரூபியாய் பெருமாள் எழுந்தருளின ஸ்தலங்களே திருமால்
ஸ்தலங்களாகக் கொள்ளப்பட்டன. திருமலை கூட முன்னொரு
காலத்தில் வராகச் சேஷத்திரமாகவே இலங்கியது. இந்தியாவின்
பண்டைய வரலாற்றை உற்று நோக்கினால் வராகமூர்த்தியாக திருமாலை
வழிபட்டமை தெற்றன விளங்கும். எனவே ஆதிவராக மூர்த்தி என்னும்
திருநாமம் கொண்ட இப்பெருமான் எழுந்தருளியிருந்த தலம் வேறு
எங்கோ மிகச் சிறப்பான செல்வச் செழிப்பான இடத்தில்
இருந்திருக்கலாமெனவும் காலப்போக்கில் அத்தலம் இருந்த இடத்தில்
பிற சமய ஆலயங்கள் உருவாகியமையாலோ அல்லது அந்த
ஆதிவராஹர் இருந்த தலம் இடர்ப்பாடுகளுக்கு உட்பட்டமையாலோ
காஞ்சிக்கு இடம் பெயர்ந்த இப்பெருமான் காமாட்சியம்மன் ஸ்தலம்
இருந்த இடத்திற்கு வந்திருக்கலாமென யூகிக்கலாம்.

ஆழ்வார் மங்களாசாசனத்தினால் உண்டான பெயரே பிரபல்யமாகி
இருப்பதால் அதற்குமுன் ஆதிவராஹப் பெருமான் சன்னதி என்பதே
பிரசித்தமாகி இவ்விடத்து தனிச் சன்னதியாக இருந்திருக்க வேண்டும்.
பிற்காலத்தே காமாட்சியம்மன் கோவில் உருவான போது இன்றுள்ள
நிலைமையை எய்திருக்கலாம்.

அல்லது காமாட்சிக்கு அருள்பாலித்ததால் எம்பெருமானுக்கு
இவ்விடத்திலேயே ஒரு ஸ்தலம் உண்டாகி காலப்போக்கில் பெருமாள்
வழிபாடு குறைந்து காமாட்சியம்மன் ஸ்தலம் பிரசித்தி பெற்றதால்
இன்றைய நிலையை எய்திருக்கலாம். மேலும் சமய ஒற்றுமை கருதியும்
காமாட்சியும், லட்சுமியும் ஒருங்கே சேர பெருமாள் காட்சிகொடுத்தார்
எனக்கொண்டு சமயப் பொறைக்கு இவ்விதம் அமைக்கப்பட்டதென்றும்
கொள்ளலாம். இதுபோன்ற காரணங்களால்தான் பெருமாள் இங்கு
எழுந்தருளியுள்ளார் எனக் கொள்ளலாமே தவிர திருமங்கையின்
மங்களாசாசனத் தலம் இதுதான் என்று அறுதியிடமுடியாது.

புராணம் கூறும் நாச்சியாரும், புஷ்கரணியும், விமானமும் தற்போது
அங்கு இல்லை. பெயரும் இடமும் பெரும் பேதுற்றுத் திகழும் இந்த
இடம் (இத்தலம்) ஆழ்வாரால் பாடப்பட்ட திவ்யதேசமன்று எனத்
துணிவுறக் கூறலாம்.

பின்