நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில்
திருநிலாத் திங்கள் துண்டம்

நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்
    நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துரை நீர் வெஃகாவுள்ளாய்
    உள்ளுவா ருள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
    காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
    பெருமானுன் திருவடியே பேணினேனே - (2059)
            - திருநெடுந்தாண்டகம் - 8

என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலம் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள்
உள்ளது. நிலா வென்றாலும், திங்கள் என்றாலும் ஒன்றுதான்.
அவ்வாறிருந்தும் நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர்
எவ்வாருண்டாயிற்று என்று தெரியவில்லை. திருமங்கையாழ்வார்
சொற்றொடர் மங்களாசாசனமே வழங்கியுள்ளார். விவரங்கள் வேறு
யாதும் கொடுக்கவில்லை. நிலாத் திங்கள் துண்டத்தான் என்று
வைணவச் சுவையிலிருந்து சற்றே மாறுபட்ட சொல்லைக் கொண்டவன்
இப்பெருமாள்.     அதுமட்டுமன்றி     சைவக்கோவில்களுக்குள்
மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள்கள் எழுந்தருளியிருக்கிறார்கள்
என்றால் அது இங்கும் காமாட்சியம்மன் கோவிலுமேயாகும்.

இந்த இரண்டு தலங்களும் (திருநிலாத்திங்கள் துண்டம்,
திருக்கள்வனூர்) எவ்வாறு சைவக் கோவில்களுக்குள் வந்தன என்பன
தொல்லியல் மற்றும் வரலாற்றடிப்படையில் ஆய்ந்து முடிவு செய்யப்பட
வேண்டியதாகும்.     நிலாத்திங்கள்     துண்டத்தான் கோவிலும்,
ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் எதிரெதிரேயான ஒரே சாயலில் இருந்த
சமயம் சுற்று மதில் எழுப்பும்போது இரண்டு கோவில்கட்கும் சேர்த்து
சுற்றுமதில் எழுப்பப்பட்டுவிட்டதா, அல்லது சைவ, வைணவ ஒற்றுமை
கருதி சிவன் கோவிலுக்குள் ஒன்றுமாக உமையவள் கோவிலுக்குள்
ஒன்றுமாக மங்களாசாசனப் பெருமாள்கள் தேவை என்று கருதி
கொணரப்பட்டதா என்பது ஆய்ந்து அறிதற்குரியனவாகும்.

இதே போன்று சோழநாட்டுத் திருப்பதிகளில் திருச்சித்ரக்கூடம்,
தில்லை நடராஜன் சன்னதிக்குள் அமைந்துள்ளது. இருப்பினும்
இவ்விரண்டு ஸ்தலங்களின் அமைப்பையும் உற்று நோக்கினால்
முன்னொரு காலத்தில் - இரண்டு ஸ்தலங்களும் தனித்தனியே அதே
சமயம் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் அமைந்திருந்தன என்று
பார்த்த மாத்திரத்திலேயே ஊகிக்க முடிகிறது.

பின்னொரு காலத்தில் சுற்று மதில் எழுப்பப்பட்ட போது
இரண்டுக்கும் சேர்த்து தற்போதுள்ள மாதிரி பெரிய மதிலை
அமைத்திருக்கின்றனர் என்பது ஊகிக்க முடிகிறது.

பெரிய மதிலாகச்சுற்றி வளைத்து இரண்டு சன்னதிகளையும் ஒரு
பெரும் கோட்டைக்குள் வைத்தது மாதிரி அமைத்துவிட்டனர். இந்த
மதிலும் திருமங்கையாழ்வாரின்     காலத்திற்குப் பின்னால்தான்
ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் தில்லை கோவிந்த ராஜன்
சிதம்பரம்     நடராஜன்     கோயிலுக்குள்     உள்ளான்     என்று
திருமங்கையாழ்வார் ஓரிடத்திலும் சொல்லவில்லை.

வைணவத்திருத்தலங்களில்     சிவன்     (தேவதாந்திரத்திற்கும்
எம்பெருமான் இடங்கொடுக்கிற பண்பை)இருப்பதை திருமங்கையாழ்வார்
சுட்டுகிறார். உதாரணமாக பாண்டிநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான
திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் சிவனுக்குத்தனி சன்னதி உள்ளது.
இதனைத் திருமங்கையாழ்வார்

அக்கும் புலியின் அதளும் உடையான் அவரொடு
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர் போலும் - 1798

இவ்விதம் அடையாளங்காட்டும் திருமங்கையாழ்வார் மேற்சொன்ன
ஸ்தலங்கள் சைவதலங்கட்கு உள்ளேயோ அன்றி     வெகு
அருகாமையிலோ இருந்ததாக ஓரிடத்தும் கூறினாரில்லை. எனவே
இத்தலங்கள் தனித்து மற்ற வைணவத் தலங்களைப் போலவே
வைணவலட்சணத்தோடு திகழ்ந்திருக்க வேண்டும். காலத்தின் போக்கில்
இவ்விதம் ஏற்பட்டிருக்கலாம். எனவே இத்தலங்களின் உண்மையான
இருப்பிடம் யாது, அதில் குறிப்பிட்டுள்ள புஷ்கரணி மற்றும்
பிறவெல்லாம் எங்கிருந்தனவென்பது ஆய்ந்து காண்டற்குரியனவாகும்.

பின்