தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எச்சத் தொடர்

  • 3.3 எச்சத் தொடர்
     

    பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் தொடர் எச்சத் தொடர் ஆகும். இஃது இரு வகைப்படும்.

    1) பெயரெச்சத் தொடர்

    பெயரெச்சம் என்பதைப் பெயர் + எச்சம் எனப் பிரிக்கலாம். பெயர்ச் சொல்லைப் பற்றி முந்தைய பாடத்தில் விளக்கப்பட்டது. எச்சம் என்பது ‘முற்றுப்பெறாத வினைச்சொல்’ ஆகும். முடிக்கும் சொல்லாகப் பெயரைப் பெற்றுவரும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். எச்சமும் பெயரும் சேர்ந்த தொடர், பெயரெச்சத் தொடர் எனப்படும்.

    இனிப் பெயரெச்சம் என்றால் என்ன என்பதைக் காணலாம். பெயரெச்சம்,

    - செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் வாய்பாட்டில் வரும்.
    - இறந்தகாலம் (செய்த), நிகழ்காலம் (செய்கின்ற), எதிர்காலம்
      (செய்யும்) என்னும் முக்காலத்தையும் காட்டும்.
    - செயலைக் காட்டும்.
    - செயலுக்குரிய வினைமுதலின் பால் என்ன என்பதைக்காட்டாது
    - வினைமுற்றால் அறியப்பெறும் வினைமுதல், கருவி, இடம்,
      செயப்படுபொருள் ஆகியவற்றைக் காட்டாது.
    - ஆறுவகைப் பெயர்களையும் கொண்டு முடியும்.

    (எ.டு.)

    படித்த இளைஞன்
    -
    எச்சம் பொருட்பெயர் கொண்டு முடிந்தது.
    பார்த்த ஊர்
    -
    எச்சம் இடப்பெயர் கொண்டு முடிந்தது.
    கடந்த தை
    -
    எச்சம் காலப்பெயர் கொண்டு முடிந்தது.
    முறிந்த கால்
    -
    எச்சம் சினைப்பெயர் கொண்டு முடிந்தது.
    சுவைத்த இனிப்பு
    -
    எச்சம் பண்புப்பெயர் கொண்டு முடிந்தது.
    முடிந்த தேர்தல்
    -
    எச்சம் தொழிற்பெயர் கொண்டு முடிந்தது.

    செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டில்
    காலமும் செயலும் தோன்றிப் பாலொடு
    செய்வது ஆதி அறுபொருள் பெயரும்
    எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே       (நன்னூல் : 340)

    2) வினையெச்சத் தொடர்

    வினையைக் கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம் எனப்படும். எச்சம் வினைகொண்டு முடியும்போது அது வினையெச்சத் தொடர் ஆகிறது. வினையெச்சம்,

    - தொழிலையும் காலத்தையும் காட்டும்.
    - செயலுக்குரிய வினைமுதலின் பால் என்ன என்பதைக்காட்டாது
    - செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்னும் இறந்தகால
      வாய்பாட்டில் வரும்.
    - செய என்னும் நிகழ்கால வாய்பாட்டில் வரும்.
    - செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு என்னும்
      எதிர்கால வாய்பாட்டில் வரும்.
    - வினையைக் கொண்டு முடியும்.

    (எ.டு.)    படித்து வந்தான்.

    இவற்றுள், படித்து என்பது, படித்தல் என்னும் தொழிலும், இறந்த காலமும் காட்டி, அத்தொழிலை நிகழ்த்தும் வினைமுதலின் பால் என்ன என்பதைக் காட்டாமல் வினைச்சொல்லை முடிக்கும் சொல்லாகப் பெற்று வந்துள்ளது.

    தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை
    ஒழிய நிற்பது வினையெச் சம்மே          (நன்னூல் : 342)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 12:28:04(இந்திய நேரம்)