தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை
     

    சொற்றொடர்களைப் பிழையின்றிப் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிப்பது இலக்கண நோக்கங்களில் ஒன்று. சொற்றொடர்களில் ஏற்படும் பிழையை இலக்கணத்தில் வழு  எனக் குறிப்பிடுகின்றனர். வழுக்கள் யாவை என்றும் அவை எங்கெங்குச் சொற்றொடர்களில் வருகின்றன என்றும் அறிந்தால்தான் அவற்றை நீக்கிப் பயன்படுத்த முடியும்.

    திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றபோது வழுக்கள் சொற்றொடர்களில் ஏற்படுகின்றன.

    இவ்வழுக்களை நீக்கித் திணை முதலிய ஏழினையும் பயன்படுத்துவது வழாநிலை ஆகும்.

    அறிஞர்கள் பயன்படுத்திய தொடர்களிலும் மக்கள் வழக்கிலும் வெவ்வேறு காரணங்களால் நிலைபெற்றுவிட்ட, இலக்கண முறைக்கு மாறானவற்றை அமைதி கூறிச் சான்றோர் ஏற்றுக் கொண்டனர். அவற்றை விளக்குவது வழுவமைதி ஆகும்.

    திணை முதலிய ஏழைப் பற்றியும் விரிவாக முந்தைய பாடங்கள் விளக்கி உள்ளன. அவற்றை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாகும். இங்கு இவ்வேழிலும் ஏற்படும் வழுக்களையும், அவற்றைக் களைவற்கான வழாநிலைகளையும், இலக்கண மரபிற்கு மாறாகப் பயன்படுத்தப்படும் வழுவமைதிகளையும் பற்றிக் காணலாம்.

    திணையே பாலிடம் பொழுது வினாஇறை
    மரபாம் ஏழும் மயங்கினாம் வழுவே          (நன்னூல் : 375)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:13:31(இந்திய நேரம்)