தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காலம்

  • காலம் மூன்று வகைப்படும். அவை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பன.

    வினையின் இயல்பு, காலம் காட்டுதல் என்பது முந்தைய பாடங்களில் கூறப்பட்டது. அதனை நினைவில் கொள்க.

    இறப்பெதிர்வு நிகழ்வெனக் காலம் மூன்றே    (நன்னூல் : 382)

    ஒரு காலத்திற்குரிய வினையை வேறு காலத்தில் கூறுவது வழுவாகும்.

    (எ.டு.)

    நேற்று சாப்பிடுவான்
    இப்பொழுது சாப்பிட்டான்
    நாளை சாப்பிடுகிறான்

    முதல் தொடரில் ‘நேற்று’ என்னும் சொல் கடந்த காலத்தைக் குறிக்கிறது. ‘சாப்பிடுவான்’ என்பது எதிர்கால வினைமுற்று.

    இரண்டாவது தொடரில் ‘இப்பொழுது’ என்னும் சொல் நிகழ்காலத்தைக் குறிக்கிறது. ‘சாப்பிட்டான்’ என்பது இறந்தகால வினைமுற்று.

    மூன்றாவது தொடரில் ‘நாளை’ என்னும் சொல் எதிர் காலத்தைக் குறிக்கிறது. ‘சாப்பிடுகிறான்’ என்பது நிகழ்கால வினைமுற்று.

    இவ்வாறு இந்த மூன்று தொடர்கள் ஒவ்வொன்றிலும் இடம்பெற்றுள்ள இரண்டு சொற்களும் ஒரே காலத்தில் இல்லாமல் வெவ்வேறு காலத்தில் உள்ளமை கால வழுவாகும்.

    மூன்று காலங்களில் ஒன்றின்காலத்தைக் குறிக்கும் ஒரு சொல் இடம்பெறும் பொழுது அதே காலத்திற்கு உரியதாகக் காலமும் வினையும் இருத்தல் கால வழாநிலையாகும்.

    (எ.டு. )

    நேற்று சாப்பிட்டான்
    இப்பொழுது சாப்பிடுகிறான்
    நாளை சாப்பிடுவான

    இவ்வாறு காலத்தைக் குறித்து வரும் சொற்களுக்கு ஏற்ப ஒவ்வொரு தொடரிலும் காலம் காட்டும் வினை இடம்பெறுவது கால வழாநிலையாகும்.

    மூன்று காலத்திலும் இடைவிடாது தன் தொழிலைச் செய்யும் பொருள்களை நிகழ்காலத்தில் குறிப்பிடுவது கால வழுவமைதி ஆகும்.

    (எ.டு.)    சூரியன் கிழக்கில் தோன்றுகிறது

    இத்தொடரின் எழுவாயான சூரியன், கிழக்கில் தோன்றுவது முக்காலத்திலும் நிகழும் இயல்பான நிகழ்ச்சியாகும். இது நிகழ்காலத்திற்கு மட்டும் உரிய நிகழ்ச்சியாகக் கூறுவது சரியன்று, இதனை, ‘நேற்றுச் சூரியன் கிழக்கில் தோன்றினான்; இன்று கிழக்கில் தோன்றுகிறான்; நாளை கிழக்கில் தோன்றுவான்’ என ஒவ்வொரு முறையும் மூன்று காலத்திலும் சொல்வது பொருத்தமாகாது. எனவே இதனை நிகழ்காலத்தில் மட்டும் சொல்வது வழுவமைதி ஆயிற்று. விரைவு, மிகுதி, தெளிவு என்னும் மூன்று காரணங்களுக்காகவும் இக்காரணங்கள் இல்லாமலும் முக்காலங்களையும் ஒன்றை வேறொன்றாகக் கூறுவது வழுவமைதி ஆகும்.

    (எ.டு.)

    வந்துவிட்டேன் வந்துவிட்டேன்
    பார்த்தேன் பார்த்தேன்
    நாளை பள்ளிக்குப் போகிறேன்
    நான் சிறுவயதில் இந்தத் திடலில்தான் விளையாடுவேன்

    முதல் தொடரில், ‘வருவேன்’ என்று எதிர் காலத்தில் கூறவேண்டிய வினைமுற்று, விரைவுப் பொருளின் காரணமாக ‘வந்துவிட்டேன்’ என இறந்த காலத்தில் கூறப்பட்டது.

    இரண்டாவது தொடரில், ‘பார்க்கிறேன்’ என நிகழ்காலத்தில் கூற வேண்டிய வினைமுற்றுப், பலமுறை பார்ப்பதை உணர்த்தல் வேண்டி மிகுதிப்பொருளின் காரணமாகப் ‘பார்த்தேன்’ என இறந்த காலத்தில் கூறப்பட்டது.

    மூன்றாம் தொடரில், ‘போவேன்’ என்று எதிர்காலத்தில் கூற வேண்டிய வினைமுற்றுத், தெளிவுப் பொருளின் காரணமாகப் ‘போகிறேன்’ என நிகழ்காலத்தில் கூறப்பட்டது.

    நான்காவது தொடரில், ‘விளையாடினேன்’ என்று இறந்த காலத்தில் கூறவேண்டிய வினைமுற்று, எவ்வித காரணமும் இன்றி ‘விளையாடுவேன்’ என எதிர்காலத்தில் கூறப்பட்டது.

    இவ்வாறு ஒரு காலத்திற்கு உரிய வினையை வேறு காலத்தில் கூறுவது இலக்கணம் அன்றாயினும் அறிவுடையோர் ஏற்பதனால் கால வழுவமைதி ஆயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:13:42(இந்திய நேரம்)