தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.6

  • 6.6 விடை
     

    விடை எட்டு வகைப்படும் என்பது முன்னர்க் கூறப்பட்டது. அவற்றை இங்கு நினைவில் கொள்க.

    (1) சுட்டுவிடை
    (2) மறைவிடை
    (3) நேர்விடை
    (4) ஏவல்விடை
    (5) வினாஎதிர்வினாதல் விடை
    (6) உற்றதுஉரைத்தல்விடை
    (7) உறுவதுகூறல்விடை
    (8) ஏவல்விடை

    என்பன விடை வகைகளாகும்.

    விடையில் இடம்பெறும் எழுவாயின் திணையும் பாலும் மாறுபட்டு வரும் விடைத்தொடர்கள் விடை வழுநிலைத் தொடர்கள் எனப்படும்.

    (எ.டு. )

    இது மகள்
    இது பறவைகள்

    முதல் தொடரில் எழுவாய் ‘இது’ அஃறிணைச் சுட்டுப் பெயர்; ‘மகள்’ என்னும் பெயர்ப் பயனிலை உயர்திணைக்கு உரியதாகும்.

    இரண்டாம் தொடரின் எழுவாய் ‘இது’ ஒன்றன்பால்; ‘பறவைகள்’ என்னும் பெயர்ப் பயனிலை பலவின்பால்.

    இவ்வாறு ஒரு விடைத் தொடரில் திணை மயங்கி வருவதும், பால் மயங்கி வருவதும் விடை வழுநிலை ஆகும்.

    இதேபோல் ஒரு விடைத் தொடரில் முதலும் சினையும் கலந்து (மயங்கி) வருவதும் கூடாது. மயங்கி வருமானால் வழுவாகும்.

    (எ.டு.)   மரம் முறிந்தது; கிளை முறிந்தது.

    இத்தொடரில் மரம் முறிந்ததோ? மரத்தின் கிளை முறிந்ததோ? என்னும் ஐயம் எழுவதால் இவ்வாறு கூறுதல் விடை வழுவாகும்.

    வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல் (நன்னூல் : 387)

    ஒருவன் வினவிய பொருள் தன்னிடம் இருந்தால் உண்டு என்று கூறுதல் விடை வழாநிலை. அப்பொருள் இல்லை என்றால் அதனை இல்லை எனக் கூறுவதற்கு மாறாக அதனை நேரடியாகச் சொல்லாமல் அவன் வினவியதற்கு இனமாகத் தன்னிடம் உள்ள ஒன்றையோ பலவற்றையோ கூறுவதால், அவன் கேட்ட பொருள் தன்னிடம் இல்லை என உணர்த்துவதும் விடை வழாநிலை கும்.

    (எ-டு.)

    ‘துவரம் பருப்பு உளதோ வணிகரே’ என்று வினவிய ஒருவனுக்கு, அவ்வணிகர் துவரம் பருப்பு தன்னிடம் இல்லை என்றால், அதனை இல்லை என்று நேரடியாகக் கூறாமல் ‘உளுத்தம் பருப்பு உள்ளது’ என்றோ, ‘உளுத்தம் பருப்பும், பயிற்றம் பருப்பும் உள்ளது’ என்றோ தன்னிடம் உள்ளதைக் கூறுவார். இவ்வாறு விடையை நேரடியாகக் கூறாமல், வேறு வகையாகக் கூறுதல் விடை வழுவன்று; விடை வழாநிலையே ஆகும்.

    தம்பால் இல்லது இல்லெனின் இனனாய்
    உள்ளது கூறி மாற்றியும் உள்ளது
    சுட்டியும் உரைப்பர் சொற்சுருங் குதற்கே    (நன்னூல் : 406)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:13:47(இந்திய நேரம்)