தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொதுவிளக்கம்

பாரதியார் கவிதைகள் - 1

பொதுவிளக்கம்

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர் என்ற தலைப்பில்
பாரதியார், பாரதிதாசன் ஆகிய இருவர் அறிமுகம்
செய்யப் பெறுகின்றனர். இவர்களில் பாரதியார் தேசிய
விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டவர்; பத்திரிகை
ஆசிரியராகப் பணியாற்றியவர். இருபதாம் நூற்றாண்டுக்
கவிதைப் போக்கில் ஒரு பெரிய திருப்பத்தை
ஏற்படுத்தியவர். கனக சுப்புரத்தினக் கவிஞர் பாரதியாரிடம்
பேரன்பு கொண்டு, தம் பெயரைப் ‘பாரதிதாசன்’ என்று
மாற்றி வைத்துக் கொண்டார். பெண்கள் முன்னேற்றம்,
சாதிகள் அற்ற சமத்துவச் சமூகம், அடிமைத்தனம் அற்ற
உரிமை வாழ்வு, உலகம் தழுவிய நோக்கு ஆகியன
பாரதியார் கவிதைகளில் வெளிப்படும் பண்புகள்.
இப்பண்புகளைப் பெற்ற பாரதியார் கவிதைகளைக் குறித்து
இரண்டு தொகுதிகளில், பன்னிரண்டு பாடங்கள் உள்ளன.
அவற்றுள் முதல் தொகுதியைக் குறித்த அறிமுக உரையை
உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாரதியார் கவிதைகள் முதல் தொகுதி என்ற பாடப் பகுதி
ஆறு பாடங்களைக் கொண்டது. பாரதியாரின் வாழ்க்கைச்
சித்திரம் என்னும் முதல் பாடம், அவருடைய வாழ்க்கை
வரலாற்றைக் கூறுவது. முப்பத்து ஒன்பது ஆண்டுகளே
வாழ்ந்த அந்த மகா கவிஞனின் வாழ்க்கையில்
தென்றலைவிடப் புயலும் சூறாவளியும் வீசிய காலங்களே
மிகுதி. எனினும் இவற்றிடையே அவர் செய்த சாதனைகள்
தாம் எத்தனை எத்தனை! என வியப்போடு எடுத்து
உரைக்கின்றது இப்பாடம்.

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில்
நிலவிய பாரத நாட்டின் விடுதலைக்குப் பாரதியாரின்
தேசியப் பாடல்கள் பேருதவி செய்தன. சொந்த நாட்டில்
‘பரர்க்கடிமை செய்து துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்’ எனப்
பலரை முழங்க வைத்த தேசியப் பாடல்களின் பெருமைகளை
இரண்டாம் பாடம் விளக்குகிறது.

பாரதி பல தெய்வங்களைக் குறித்துப் பாடியுள்ளார்;
பிள்ளையார், முருகன், காளி, மாரி, சக்தி, திருமால் எனப்
பல தெய்வங்களையும் குறித்து அவர் பாடல்கள் உள்ளன.
தெய்வப் பாடல்களில் கூடப் புதுமையும் புரட்சியும்
தெரிகின்றன. மூன்றாம் பாடம் பாரதியின் தெய்வப்
பாடல்களின் சிறப்புகளைப் புலப்படுத்துகின்றது.

பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு என்ற
மூன்றும் பாரதி பாடிய முப்பெரும் பாடல்கள் ஆகும்.
இவற்றில் காவியச் சிறப்பும் சமயப் புரட்சியும் தத்துவப்
புதுமையும் காணப்பெறுகின்றன என்பதை நான்காம் பாடம்
தெரிவிக்கின்றது.

பாரதி ‘மண்டும் மதங்கள் அண்டா நெருப்பு; படரும்
சாதிப்படைக்கு மருந்து’ என்பது பாரதிதாசன் மதிப்பீடு.
பாரத நாட்டு மக்கள் எல்லாரும் சரிநிகர் சமானமாக
வாழ்வதை அக்கவிஞர் எதிர்நோக்கினார். எல்லாரும் ஓர்
நிலை எல்லாரும் ஓர் விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்
என்பது அவர் முழக்கம். அவருடைய சமுதாயக்
கருத்துகளை ஐந்தாம் பாடம் அறிவிக்கின்றது.

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக்
கொளுத்துவோம்’ என்பதல்லவா மகாகவிஞனின் புரட்சிக்
குரல். ‘நாணமென்பது நாய்களுக்கன்றோ வேண்டும்’
என்றவன் அல்லவா அவன். கவிஞர் பெண்ணியம் பற்றிக்
கொண்டிருந்த கருத்துகளை ஆறாம் பாடம் விளக்குகின்றது.

நண்பர்களே! மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

1. பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரம்

2. பாரதியாரின் தேசியப் பாடல்கள்

3. பாரதியாரின் தெய்வப் பாடல்கள்

4. பாரதியாரின் முப்பெரும் பாடல்கள்

5. பாரதியார் பாடல்களில் சமுதாய நோக்கு

6. பாரதியார் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்

என்னும் மேற்கண்டஆறுபாடங்கள் உங்களுக்கு மகாகவி பாரதியார்
குறித்து ஓரளவுச் செய்திகளை வழங்கும். எஞ்சியவற்றை இரண்டாம்
தொகுதி நிறைவு செய்யும்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-11-2017 18:24:05(இந்திய நேரம்)