தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருக்குற்றால நாதர் உலா

  • 3.3 திருக்குற்றால நாதர் உலா

    குறவஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் ஆகிய திருக்குற்றால நாதர் என்னும் இறைவன் உலா வருகின்றார். தலைவன் உலா வருவதைக் கட்டியக்காரன் அறிவிக்கிறான். மக்கள் திரண்டு வந்து பார்க்கிறார்கள்.

    3.3.1 கட்டியக்காரனின் அறிவிப்பு

    கட்டியக்காரன், தலைவன் உலா வரும் செய்தியைக் கூறுகின்றான். சான்றாகச் சில அடிகளைக் காண்போமா?

    பவனி வந்தனரே - மழவிடைப் பவனி வந்தனரே
    அவனி போற்றிய குறும் பலா உறை
    மவுனநாயகர் எவனநாயகர்
    சிவனும் ஆய் அரிஅயனும் ஆனவர்
    கவனமால் விடை அதனில் ஏறியே

    (பாடல் 12: 1 - 2)

    (பவனி = உலா; மழவிடை = இளமை பொருந்திய எருது; அவனி = உலகம்; உறை = தங்கி உள்ள; மவுன நாயகர் = சத்துவகுணத்தலைவர்; எவன நாயகர் = என்றும் இளமை ஆனவர்; கவனம் = விரைந்து செல்லும்; மால் = பெரிய; விடை = காளை)


     

    திருக்குற்றாலத்து இறைவன் உலா வருகின்றார். உலக மக்கள் யாவராலும் வணங்கத்தக்கவர்; குறும் பலா மரத்தின் அடியில் எழுந்து அருளி உள்ளவர்; என்றும் இளமை ஆனவர்; சிவன் வடிவம் ஆனவர்; அதனுடன் திருமால், பிரம்மன் ஆகிய கடவுளர்களின் உருவத்தையும் கொண்டவர்; இத்தகைய சிறப்புடைய இறைவன் உலா வருகின்றார். தன் வாகனம் ஆகிய காளை மீது ஏறி உலா வருகின்றார் என்று கட்டியக்காரன் கூறுகின்றான். நண்பர்களே! இந்தப் பாடல் அடிகள் இசை உடன் பாடி மகிழ ஏற்றனவாக உள்ளன அல்லவா? இசையுடன் பாடிப் பாருங்கள்.

    3.3.2 உலாவைக் காணவரும் பெண்கள்

    தலைவனாகிய குற்றால நாதர் உலா வருகின்றார் என்பதைப் பெண்கள் அறிகின்றனர். உலா வரும் தலைவனைக் காண ஓடோடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி திருக்குற்றாலக் குறவஞ்சியில் நகைச் சுவையாக விவரிக்கப்படுகிறது. சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போமா?

    ஒருகை வளை பூண்ட பெண்கள் ஒரு கைவளை
                 பூணமறந்து
    ஓடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
    இருதனத்து ரவிக்கைதனை அரையில் உடை
                 தொடுவார்பின்
    இந்தஉடை ரவிக்கைஎனச் சந்தமுலைக்கு இடுவார்
    கருதும்மனம் புறம் போக ஒரு கண்ணுக்கு மை எடுத்த
    கையுமாய் ஒரு கண்இட்ட மையுமாய் வருவார்

    (பாடல் 16: 5 - 7)

    என்று கூறுகின்றார்.

    (வளை = வளையல்; பூண்ட = அணிந்த; கவிழ்வார் = தலை கவிழ்வார்; ரவிக்கை = மேல் ஆடை (கச்சு); அரை = இடுப்பு; புறம் = உலா வரும் காட்சியின் பக்கம்; எடுத்த = இட்ட)

     

    ஒரு கையில் வளையல்களை அணிகின்றனர். மற்றொரு கையில் வளையல் அணிய மறந்து ஓடுகின்றனனர். தாம் ஓடுவதைப் பார்த்துச் சிலர் சிரிக்கின்றனர். எனவே தலை கவிழ்கின்றனர். மார்புகளில் அணிய வேண்டிய ஆடையை இடையில் உடுக்கின்றனர். பின் இது மேல் ஆடை என உணர்கின்றனர். எனவே, அதை மார்புகளில் அணிகின்றனர். ஒரு கண்ணுக்கு மை இட்டுள்ளனர். மற்றொரு கண்ணுக்கு இடவேண்டிய மையைக் கையில் வைத்துள்ளனர் என்று கூறுகிறார். இவை உலாவைக் காணவரும் பெண்களின் விரைவையும் ஆசையையும் விளக்குகின்றன.

    • இறைவழிபாடு

    இது வயது வேறுபாடின்றி இறைவன் பேரழகில் ஈடுபடும் பெண்களின் பக்தி ஈடுபாட்டினைச் சுட்டுகின்றது.

    3.3.3 உலாவைக் காணும் பெண்கள்

    இவ்வாறு, குற்றால நாதர் உலா வருகின்றார். உலாவைக் காண வந்த பெண்கள் உலாவரும் தலைவனைப் பார்க்கின்றனர். அவன் அழகில் மயங்கிய பெண்கள் இந்தத் தலைவன் யாராக இருக்கும் என ஐயம் கொள்கின்றனர். இறுதியில் தலைவன் திரிகூடராசனே என்று துணிகின்றனர். இச்செய்திகளைக் கூறும் இலக்கியச் சுவை மிகுந்த பாடல் அடிகளைப் பார்ப்போமா?

    ஒரு மானைப் பிடித்துவந்த பெருமானைத் தொடர்ந்துவரும்
        ஒரு கோடி மான்கள் போல் வரு கோடி மடவார்
    புரி நூலின் மார்பன் இவன் அயன்என்பாற் அயன்ஆகில்
        பொங்கு அரவம் ஏது தனிச் சங்கம் ஏது என்பார்
    விரிகருணை மால் என்பார் மால் ஆகில் விழியின்மேல்
        விழி உண்டோ முடியின்மேல் முடிஉண்டோ என்பார்
    இருபாலும் நான்முகனும் திருமாலும் வருகைபோல்
        ஈசன் இவன் திரிகூடராசனே என்பார்

    (பாடல் 15 : 1 - 4)

    (பெருமான் = சிவபெருமான்; மடவார் = பெண்கள்; புரி நூல் = முப்புரி நூல்; அயன் = பிரம்மன்; அரவம் = பாம்பு; சங்கம் = சங்கக் குண்டலம்; விரி = பரந்த; மால் = திருமால்; விழி = நெற்றிக்கண்; முடி = தலை, சடை, கூந்தல்; இருபாலும் - இரண்டு பக்கமும்; நான்முகன் - பிரம்மன்)

    உலாவைக் காண வந்த பெண்கள் தலைவனைப் பார்க்கின்றனர். இவன் பிரம்மனாக இருக்குமோ என எண்ணுகின்றனர். பிரம்மன் ஆனால் அவனுக்குப் பாம்பு ஆகிய அணிகலன் ஏது? சங்குக் குழை ஆகிய காது அணி ஏது? எனவே, இவன் பிரம்மன் அல்ல. திருமாலாக இருக்குமோ? திருமால் ஆனால் அவனுக்கு நெற்றிக்கண் ஏது? தலையில் சடைமுடி ஏது? எனவே திருமால் அல்ல. மேலும், தலைவனின் இரண்டு பக்கமும் பிரம்மனும் திருமாலும் வருகின்றனரே. எனவே, இவன் திரிகூடராசன் ஆகிய இறைவனே என்று ஐயம் நீங்குகின்றனர். பெண்களின் இந்த இயல்பான பேச்சுப் படிப்பவர் மனத்தை ஈர்த்து ஆசிரியரின் திறனை எண்ணி இன்புறச் செய்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 10:42:46(இந்திய நேரம்)