தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.4 உடன்போக்கு

  • 6.4. உடன்போக்கு

    தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பிக் காதல் கொள்ளும் போது பெற்றோருக்குத் தெரியாமல் தம்தம் சொந்த ஊரை விட்டு, வெளியூர் செல்வது உண்டு அதை உடன் போக்கு என்பர்.

    6.4.1 தலைவனோடு செல்லுதல்

    தலைவி தன் வீட்டை விட்டுத் தலைவனுடன் சென்று விடுகிறாள். இருவரும் மக்கள் அதிகம் காணப்படாத கொடிய வழியில் செல்கின்றனர். வழிநடை வருத்தம் தெரியாமல் இருக்க இருவரும் விளையாடிக் கொண்டு செல்கின்றனர். அப்போது அவர்கள் எதிரே வழிப்போக்கர் ஒருவர் வருகின்றார். அவரிடம் தாங்கள் செல்ல வேண்டிய நகரம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று தலைவனும் தலைவியும் கேட்கின்றனர். அதற்கு அவர் நீங்கள் செல்ல வேண்டிய நகரம் பக்கத்தில் உள்ளது என்று கூறுகிறார். இதுவே '' நகர் அணிமை கூறல் '' என்ற துறை ஆகும். இந்தத் துறையில் அமைந்த பாடல் பின்வருமாறு.

    மின்தங்கு இடையொடு நீவியன் தில்லைச்சிற்
    றம்பலவர்
    குன்றம் கடந்துசென் றால்நின்று தோன்றும் குரூஉக்
    கமலம்
    துன்றுஅம் கிடங்கும் துறைதுறை வள்ளைவெள்
    ளைநகையார்
    சென்றுஅங்கு அடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே

    (பாடல் - 221)

    (மின் = மின்னல்; இடையொடு = இடையை உடைய பெண்ணொடு; வியன் = அகன்ற; குன்றம் = மலை; குரூ = நிறம்; கமலம் = தாமரை துன்று = நெருங்கிய; அம் = அழகிய; கிடங்கு = அகழி; வள்ளை = வள்ளைப் பாடல்; நகையார் = பற்களை உடைய பெண்கள்; அடை = சேரும்; தடம் = குணம்; சேண் = உயர்ந்த)

    தலைவி மின்னல் போன்ற இடையை உடையவள். அவளொடு நீ அகன்ற தில்லையில் சிற்றம்பலவன் ஆகிய இறைவனின் மலையைக் கடந்து செல்ல வேண்டும். சிறிது தூரம் சென்றவுடன் தாமரைப் பூக்கள் நிறைந்த அகழிகள் காணப்படும். உரலில் நெல்லை இட்டு உலக்கையால் பெண்கள் குற்றும் போது, பாடல் பாடுவர். அந்தப் பாடல் வள்ளைப் பாட்டு அல்லது உலக்கைப் பாட்டு எனப்படும். இவ்வாறு பாடல் பாடுகின்ற பெண்கள் குளங்களில் சென்று நீராடுவர். அத்தகைய குளங்களும் உள்ளன. இத்தகைய வளம் மிக்க தில்லை ஆகிய நகர் தோன்றும். எனவே, விரைந்து செல்வீர்களாக என்று வழிப்போக்கர் தலைவன், தலைவி ஆகியோரிடம் கூறுகின்றார்.

    6.4.2 தலைவனின் பிரிவு

    தலைவன் தலைவியைத் திருமணம் செய்வதற்கு வேண்டிய பொருளை ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்ல எண்ணுகிறான். தலைவியோ தலைவனிடம் மிகுந்த அன்பு கொண்டுள்ளாள். எனவே, தலைவனின் பிரிவைத் தலைவி தாங்கமாட்டாள். ஆகவே, தலைவன் தலைவியிடம் கூறாது பிரிந்து செல்ல எண்ணுகின்றாள். இது '' சொல்லாது ஏகல் '' என்ற துறையாக அமைகிறது. இந்த துறையில் பின்வரும் பாடல் இடம் பெறுகிறது.

    வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும்

    மனம்மகிழ்ந்து
    தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை
    சீர்அருக்கன்
    குருட்டில் புகச்செற்ற கோன்புலி யூர்குறு
    கார்மனம்போன்று
    இருட்டில் புரிகுழ லாட்கு எங்ஙனே சொல்லி ஏகுவனே

    (பாடல் - 270)

    (வருட்டில் = தடவினால்; திகைக்கும் = மயங்கும்; வசிக்கில் = இன்பமான சொற்களைக் கூறினால்; தெருட்டில் = தெளிவித்தால்; அருக்கன் = சூரியன்; குருட்டில் = குருடு ஆகிய இழி பிறவியில்; செற்ற = செல்லும்படி சினந்த; குறுகார் = அடையாதவர்; ஏகுவன் = செல்லுவேன்)

    தலைவன் தனக்குள் எண்ணுகின்றான். தலைவியின் நெற்றி, தோள் முதலிய உறுப்புகளைத் தடவிக் கொண்டு நான் பிரிந்து செல்லப் போவதைக் கூற எண்ணினால் அதை உணர்ந்து கொண்டு தலைவி மயங்குவாள். இனிய சொற்களைக் கூறி அவளை மயக்க நினைத்தால் அவள் என் எண்ணத்தை அறிந்து கொண்டு உண்ணவும் மாட்டாள். உறங்கவும் மாட்டாள். வெளிப்படையாக நான் பிரிந்து செல்வதன் காரணத்தைக் கூறினாலும் அவள் தெளிவு பெறமாட்டாள். எனவே, நான் பிரிந்து செல்வதை அவனிடம் கூறுவதற்கு எந்த வழியும் இல்லை.

    தக்கன் செய்த வேள்வியின் போது இறைவனாகிய சிவபெருமான் சூரியனின் கண்களைக் குருடு ஆக்கினான். அத்தகைய இறைவனது புலியூர் ஆகிய ஊரை அடையாதவர்களின் மனம் இருட்டாக இருக்கும். அதுபோல கரிய நிறம் உடைய சுருண்ட கூந்தலை உடைய தலைவியிடம் நான் என்ன சொல்லிக் கொண்டு பிரிந்து செல்வேன் என்று தலைவன் ஏங்குகின்றான்.

    நெற்றியைத் தடவுதல், தோள்களைத் தடவுதல் போன்றவை அன்பு கொண்டவர் செய்யும் செயல்கள் ஆகும். அன்புடையவர்கள் பிரியும் போது இனிமையான சொற்களைக் கூறுதல் உலக வழக்கு. எனவே, இவை இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இதைப் போன்று இறைவனை எண்ணாதவர்களுடைய மனம் இருண்டு காணப்படும் என்பதும் காட்டப்படுகிறது.

    6.4.3 திருமணமும் மகிழ்ச்சியும்

    தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் ஈட்டச் சென்றான். பொருளை ஈட்டிய பின் தலைவியை மணக்க வருகின்றான். இதனால் திருமண முரசு ஓலிக்கிறது. தலைவியின் வீட்டருகில் வந்து விட்டனர். இந்தத் திருமண முரசின் ஒலியைத் தலைவியின் வீட்டில் உள்ளவர்கள் கேட்கின்றனர். தலைவிக்குத் திருமணம் நடக்கப் போவதை எண்ணி மகிழ்கின்றனர்.

    இது மண முரசு கேட்டு மகிழ்ந்து உரைத்தல் என்ற துறை ஆகும். இந்தத் துறையில் வரும் பாடலைக் காண்போம்.

    பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த
    தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொல் மால்அயற்கும்
    காரணன் ஏரணி கண் நுதலோன் கடல் தில்லைஅன்ன
    வாரண வும்முலை மன்றல்என்று ஏங்கும் மணமுரசே

    (பாடல் - 296)

    (நீடுக = எங்கும் ஓங்குவதாக; தூரியம் = ஒருவகை இசைக்கருவி; ஆர்க்க = முழங்க; தொல் = பழைமையான; அயன் = பிரம்மன்; காரணன் = காரணனாக உள்ள சிவபெருமான்; ஏர் அணி = அழகு உடைய; வார் அணவும் = வார் பொருந்திய; மன்றல் = திருமணம்; ஏங்கும் = ஒலிக்கும்)

    சிவபெருமான் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் காரணன் ஆக உள்ளவன். நெற்றியில் கண்ணை உடையவன். சிவபெருமானின் தில்லை நகரைப் போன்ற மார்பை உடைய தலைவியின் திருமணத்தை அறிவிக்கும் வகையில் மண முரசு ஒலிக்கிறது.

    எனவே வாயில்களில் எல்லாம் நீரால் நிறைக்கப்பட்ட பொன்னால் ஆகிய குடங்களை வையுங்கள். எல்லா இடங்களிலும் தோரணங்களைக் கட்டுங்கள். இசைக்கருவிகளை முழக்குங்கள் என்று தலைவியின் வீட்டில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

    திருமணத்தின் போது பொற்குடங்கள் வைத்தல், தோரணம் கட்டுதல், இசைக்கருவிகளை முழக்குதல் போன்ற வழக்கங்கள் உண்டு என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

    6.4.4 ஊடல் நீங்குதல்

    இந்தத் துறை திருக்கோவையார் நூலின் இறுதிப் பாடலாக அமைகிறது. தலைவன் பரத்தையிடம் கொண்ட காதல் காரணமாகத் தலைவியைப் பிரிந்து விடுகிறான். இதனால் தலைவி தலைவனுடன் ஊடி இருக்கின்றாள். இந்த நிலையில் தோழி தலைவியிடம் தலைவனுடைய பயன்களை எடுத்துக் கூறுகின்றாள். தலைவன் உலகில் உள்ளவர்களுக்கு எத்தகைய பயன் உடையவனாக உள்ளான் என்பதை விளக்கிக் கூறுகிறாள். எல்லோருக்கும் பயன் உடையவன் ஆதலால் தலைவன் பிடித்தவரிடம் செல்வதும் குற்றம் அல்ல. எனவே நீ அவனோடு ஊடல் கொள்ளாதே என்று அறிவுரை கூறித் தலைவி தலைவனிடம் கொண்ட ஊடலைத் தோழி தீர்க்கின்றாள்.

    இது ஊதியம் எடுத்து உரைத்து ஊடல் தீர்த்தல் என்ற துறையாகக் காட்டப்படுகிறது . இந்தத் துறையில் வரும் பாடல் இதோ.

    கார்அணி கற்பகம் கற்றவர் நல்துணை பாணர்ஒக்கல்
    சீர்அணி சிந்தாமணிஅணி தில்லைச் சிவன்அடிக்குத்
    தார்அணி கொன்றையன் தக்கோர் தம்சங்க
    நிதிவிதிசேர்
    ருணி உற்றவர்க்கு ஊரன்மற்று யாவர்க்கும் ஊதியமே

    (பாடல் - 400)

    (ஊரன் = ஊரை உடைய தலைவன்; கார் = மேகம்; கற்பகம் = கற்பக மரம்; ஒக்கல் = சுற்றத்தினர்; சிந்தாமணி = நினைத்ததைக் கொடுக்கும் மணி; தக்கோர் = பெரியவர் அல்லது சான்றோர்; சங்க நிதி = குறையாத செல்வம்; ஊருணி = ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் குடிக்கும் நீரை உடைய குளம்;உற்றவர் = சுற்றத்தார்; ஊதியம் = பயன்)

    தோழி தலைவனின் பெருமைகளைத் தலைவிக்குக் கூறுகிறாள். தலைவன் கேட்காமல் பிறர்க்குக் கொடுப்பவன். எனவே அவன் மேகத்தைப் போன்றவன். கேட்பவர்களுக்கும் கொடுப்பவன். எனவே கேட்பவர்களுக்குக் கேட்டவற்றைச் கொடுக்கும் கற்பக மரம் போன்றவன்; தலைவன் கல்வி கற்றவன். எனவே அவன் கற்றவர்களுக்கு நல்ல துணைவன். பாணர்களுக்கு அவர்களுடைய உறவினரைப் போன்றவன். நினைத்ததைக் கொடுப்பவன், ஆகையால் அவன் சிந்தாமணி என்ற மணியைப் போன்றவன். சிவபெருமான் அணியும் கொன்றைப் பூவின் தன்மை உடையவன். சான்றோர்களுக்குச் குறையாத செல்வம் போன்றவன். நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் வேறுபாடு இல்லாது பயன் அளிப்பதால் அவன் தலைவிதியைப் போன்றவன். உறவினர்களுக்குப் பயன்படுவதால் ஊருணியைப் போன்றவன். எனவே, அவன் பரத்தையர்க்கும் பயன்படுகின்றான். ஆகவே அவனிடம் நீ ஊடல் கொள்ளாதே என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 11:56:28(இந்திய நேரம்)