தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பரணி

  • 1.1 பரணி

    பண்டைத் தமிழ் இலக்கியத்தை அகம், புறம் என்று பிரிப்பர். தமிழர்களின் காதல் வாழ்க்கையைப் பாடுபவை அக இலக்கியங்கள். வீரம், கொடை, மானம் முதலியவற்றைப் பாடுபவை புற இலக்கியங்கள். பரணி புற இலக்கியம். பாட்டுடைத் தலைவனின் வீரமே இந்த இலக்கியத்தின் மையக் கருவாகும். இது பற்றிப் பன்னிரு பாட்டியல் கூறுவது வருமாறு:

    வஞ்சி மலைந்த உழிஞை முற்றி
    தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
    வெம்புசின மாற்றான் தானை வெங்களத்தில்
    குருதிப் பேராறு பெருகும் செங்களத்து
    ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே

    (பன்னிரு: 240)

    மன்னன் பகைவனது நாட்டை வெல்வதற்காக வஞ்சிப் பூமாலை அணிந்து போர்க்களம் சென்றான். உழிஞைப் பூமாலை அணிந்து பகைவனது மதிலை முற்றுகை இட்டான். தும்பைப் பூமாலையைச் சூடிப் பகைவனுடன் போர் செய்தான். பகை வீரர்கள் மடிந்தனர்; குருதி ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பகைவனை வென்றான். இவ்வாறு படை எடுத்துச் சென்று வாகை மாலை சூடிய மன்னனின் வீரத்தைப் புகழ்வதே பரணி இலக்கியம் ஆகும்.

    பரணி, வீரத்தைப் பற்றிப் பாடினாலும் காதல் இலக்கிய மரபையும் கொண்டு உள்ளது. மகளிரை அழைத்துப் போர் பற்றிய செய்திகளைக் கூறும் பகுதி 'கடைதிறப்பு' எனப்படும். 'தலைவன் புகழைக் கேட்கக் கதவைத் திறவுங்கள்' என்று கூறுவது கடைதிறப்பு ஆகும். இப்பகுதி முழுவதும் காதல் இலக்கிய மரபை அடியொற்றி அமைந்துள்ளது.

    1.1.1 பரணி பெயர்க் காரணம்

    பரணி என்பது நட்சத்திரத்தின் பெயர்; காளியையும் யமனையும் தெய்வங்களாகக் கொண்ட நாள். பரணி நாளில் பிறந்தவன் பெரும் வீரனாவான் என்பதும் நம்பிக்கை. எனவே போர்க்களத்தில் யானைகள் பலவற்றைக் கொன்று, பல உயிர்களையும் யமன் கவர்ந்து கொள்ளுமாறு செய்து, அரசனின் வீரம் வெளிப்பட, போர்க்களத்தில் காளிக்குக் கூழ் சமைத்து வழிபட்ட நிகழ்ச்சிகளைக் கூறுவதால் இந்நூல் பரணி என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். காளிக்கு உரிய நாள் பரணி. காளியைத் தெய்வமாகக் கொண்டு பாடப்படுவதால் இந்நூலுக்குப் பரணி எனப்பெயர் வந்தது என்றும் விளக்கம் கூறுவர்.

    1.1.2 பரணியின் இலக்கணம்

    பரணியின் இலக்கணம் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடவில்லை. இருந்தாலும் 'யானை மறம்' என்ற துறையைச் சுட்டி உள்ளது. யானைகளின் வெற்றியைப் பாடுவது இந்தத் துறை. சங்க இலக்கியங்களில் பரணி இலக்கியக் கூறுகள் காணப்படுகின்றன. போர்க்களத்து வீர நிகழ்ச்சிகள் - பேய்களின் நிகழ்ச்சிகள் - முதலியவற்றைச் சுட்டலாம்.

    பரணி இலக்கியத்திற்கான இலக்கணம் பாட்டியல் நூல்களில்தான் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நண்பர்களே! இதுபற்றிய சில செய்திகளை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

    • இலக்கண விளக்கம்

    ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
    மானவனுக்கு வகுப்பது பரணி

    (இலக்.வி. 839)

    (அமர் - போர்; மானவன் - படைவீரன்.)

    என்று இலக்கண விளக்கம் கூறியுள்ளது. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனின் வெற்றியைப் பாடுவதே பரணி - என்பது இதன் பொருள்.

    • பன்னிரு பாட்டியல்

    எழுநூறு யானைகளைக் கொன்ற ஏந்தலை (தலைவனை)ப் பாராட்டுவதே பரணி என்று பன்னிரு பாட்டியல் கூறியுள்ளது.

    ஏழ்தலை பெய்த நூறுஉடை இபமே
    அடுகளத்து அட்டால் பாடுதல் கடனே

    (பன்னிரு. 243)

    (இபம் - யானை, அடுகளம் - போர்க்களம், அட்டால் - கொன்றால், கடன் - முறைமை.)

    யானையைக் கொன்ற போர்க்களம் அல்லாத பிற போர்க்களங்கள் பரணி பாடுவதற்குத் தகுதி உடையன அல்ல. இதனை,

    யானை சாய்த்த அடுகளத்து அல்லது
    யாவரும் பெறாஅர் பரணிப் பாட்டே

    (பன்னிரு. 242)

    என்ற பாடலால் அறிய முடிகிறது.

    • வெண்பாப் பாட்டியல்

    வெண்பாப் பாட்டியல் பரணியின் பாட்டுடைத் தலைவனைப் பற்றிப் பேசியுள்ளது.

    மூண்ட அமர்க்களத்து மூரிக் களிறு அட்ட
    ஆண்டகையைப் பரவி ஆய்ந்துரைக்க

    (வெண்பா : 28)

    (மூரி - வலிமை, களிறு - யானை, அட்ட - கொன்ற, ஆண்டகை - வீரன், பரவி - புகழ்ந்து.)

    என்று கூறியுள்ளது. 'போர்க்களத்தில் ஊறுபாடு (சேதம்) இன்றி இருத்தல் வேண்டும்; பகைவர் யானைகளை அழித்தல் வேண்டும்; போரில் வெற்றிவாகை சூட வேண்டும்; இவ்வாறு திகழ்பவனே பரணியின் பாட்டுடைத் தலைவன் ஆவான்.'

    1.1.3 பரணியின் அமைப்பு

    பரணி இலக்கியம் பத்து உறுப்புகளைப் பெற்று விளங்குகிறது. பத்து உறுப்புகள் அனைத்துப் பரணி நூல்களுக்கும் உரியன, ஒரு சில பரணிகளில் இந்தப்பத்து உறுப்புகள் அல்லாது ஒரு சில உறுப்புகள் கூடுதலாகவும் உள்ளன. இந்த உறுப்புகள் பண்டைய பரணி நூல்களுக்கே பொருந்தும். பிற்கால நூல்களுக்குப் பொருந்தாது. சான்றுக்குச் சீனத்துப் பரணியை இங்குக் கூறலாம். நண்பர்களே! இனிப் பத்து உறுப்புகள் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்வோம்.

     

    c01241d1.gif (12701 bytes)

    மேற்கூறிய பத்து உறுப்புகள் பண்டைய பரணி நூல்கள் அனைத்திற்கும் உரியன. இவை அல்லாமல் இந்திரசாலம் (பேயின் மாயாசாலம் பற்றியது), இராசபாரம்பரியம் (சோழர் பரம்பரை பற்றிய விளக்கம்), அவதாரம் (பாட்டுடைத் தலைவனின் பிறப்பு பற்றியது) ஆகிய உறுப்புகள் கலிங்கத்துப் பரணியில் காணப்படுகின்றன.

    பரணியின் உறுப்புகள் கடவுள் வாழ்த்து முதலாக ஒரே அமைப்பாக எல்லாப் பரணி நூல்களிலும் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    1.1.4 பரணியின் தோற்றம்

    பரணி இலக்கியம் பற்றிய தொன்மையான இலக்கணக் குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. பரணியைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடைக்கால நூலாகக் கொள்ள வேண்டும். சோழர் காலத்தில்தான் பரணி ஓரு தனி இலக்கிய வகையாகத் தோற்றம் பெற்றுள்ளது. இந்த இலக்கிய வகையின் தோற்றம் வளர்ச்சி மாற்றங்கள் பற்றி இங்குக் காண்போம்.

    கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கலிங்கத்துப் பரணி நூலே இன்று நமக்குக் கிடைக்கும் முதல் பரணி நூலாகும். இதற்கு முன்பும் பரணி நூல்கள் இருந்துள்ளன. ஆனால் அவை கிடைக்கவில்லை.

    1) முதல் இராசேந்திரசோழன்- 11- ஆம் நூற்றாண்டு - கொப்பத்துப் பரணி
    2) வீரராசேந்திரசோழன்- 11- ஆம் நூற்றாண்டு - கூடல் சங்கமத்துப் பரணி

    மேலே உள்ள பரணி நூல்களைப் பெயர் அளவில் மட்டுமே நாம் அறிகிறோம்.

    • பரணியின் பாடுபொருள் மாற்றம்

    கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய பரணி நூல்களுக்குத் தலைவர்களாக இணையற்ற வீரர்கள் தமிழகத்தில் இருந்தார்கள். ஆனால் அதன் பின் தமிழக ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது.

    அதன் பின் இணையற்ற வீரர்கள் அவ்வளவாகத் தமிழகத்தில் தோன்றவில்லை. எனவே பரணி நூல்கள் சமயச் சார்புடையனவாக அமைந்தன. வீரர்களின் போர்க்களத் திறனைப் பாடிய உள்ளம் தெய்வங்களின் போர்களை, சமயத் தத்துவங்களைப் பாடியது.

    1.1.5 சமயம் தழுவிய பரணி நூல்கள்

    சமயத் தத்துவங்களையும், சமயம் தொடர்பான புராணக்கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு சில பரணி நூல்கள் வெளிவந்தன.

    • தக்கயாகப் பரணி

    இந்நூலின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர். தக்கன், தான் செய்த யாகத்தின்போது சிவபெருமானை அழைக்காது விட்டான். இதனால் சிவனுக்கும் சக்திக்கும் மனவேறுபாடு ஏற்பட்டது. இறுதியில் சிவனின் அருளால் வீரபத்திரர் என்பவர் தக்கன் யாகத்தை அழித்தார். இந்தப் புராணத்தைக் கருவாகக் கொண்டு இப்பரணி அமைந்துள்ளது.

    • அஞ்ஞவதைப் பரணி

    இந்நூலினைத் தத்துவராய சுவாமிகள் பாடி உள்ளார். அஞ்ஞானத்தினை (அறியாமை) ஓர் அரசனாக்கி, அகங்காரம் (ஆணவம்) முதலிய தீய பண்புகளைப் படைகள் ஆக்கி இவற்றை ஞானமாகிய இறைவன் அழித்ததாகப் பாடப்பட்டதே இந்நூல். இதனை ஞானப்பரணி என்றும் கூறுவர்.

    • திருச்செந்தூர்ப் பரணி

    இந்த நூலினைச் சீனிப்புலவர் இயற்றி உள்ளார். முருகன் சூரனை அழித்த புராணத்தைப் பாடுகிறது இந்நூல்.

    • இரணியன் வதைப் பரணி

    இந்நூலாசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை. சிலர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இந்நூல் ஆசிரியராக இருக்கலாம் என்பர். திருமாலின் நரசிம்ம அவதாரத்தைப் பாடுகிறது இந்தநூல்.

    1.

    பரணி என்ற சொல்லுக்குரிய பொருள்களைக் குறிப்பிடுக.

    2.

    எத்தனை யானைகளைக் கொன்றால் பரணி இலக்கியத்தின் பாட்டுடைத் தலைவன் ஆகலாம்?

    3.

    பரணியின் உறுப்புகளில் ஐந்தினைக் குறிப்பிடுக.

    4.

    பண்டைய பரணி நூல்களுள் நான்கைக் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 11:28:43(இந்திய நேரம்)