தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

  • 2.2 மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    மதுரை மீனாட்சி அம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு அவள் பெயரால் அமைந்தது இப்பிள்ளைத்தமிழ் நூல். இந்நூலைக் குமரகுருபரர் இயற்றி உள்ளார். பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் தலை சிறந்ததாக இந்நூல் கருதப்படுகிறது.

    மதுரை மீனாட்சி அம்மனின் பெருமைகளை எடுத்து உரைப்பதே இந்நூலின் நோக்கம். தேவி புராணங்களின் அடிப்படையிலும், கடவுள் தத்துவங்களின் அடிப்படையிலும் இந்த நூல் இயற்றப்பட்டுள்ளது.

    தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி

    (மீனா.பிள். 13)

    என்ற பிள்ளைத்தமிழ்ப் பாடலின் தொடர் குறிப்பிடத்தக்கது. மீனாட்சி பாண்டிய மன்னனின் மகளாகவும் இமயமலை இமயவர்மனின் செல்வியாகவும் விளங்குவதை அத்தொடர் குறிப்பிட்டுள்ளது.

    தமிழோடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி
    சப்பாணி கொட்டி அருளே

    (மீனா.பிள். 34)

    என்ற பாடல், தமிழுடன் மீனாட்சி பிறந்ததாகக் கூறித் தமிழுக்கு ஏற்றம் தந்துள்ளது.

    இப்பிள்ளைத்தமிழ் மீனாட்சி எனும் சைவ சமயத் தாய்க்கடவுளையும் பாண்டிய நாட்டையும் தமிழ் மொழியையும் சேர்த்துப் பெருமைப்படுத்துவதில் முன் நிற்கிறது.

    2.2.1 நூலாசிரியர்

    இந்நூலை இயற்றிய குமரகுருபரர் கி.பி. 17- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நெல்லை மாவட்டம் திருவைகுண்டத்தில் பிறந்தவர். சண்முக சிகாமணிக் கவிராயரும், சிவகாமி அம்மையாரும் இவருடைய பெற்றோர்கள் ஆவர்.

    குமரகுருபரர் இளம் வயதில் ஐந்து ஆண்டுகள் வரை பேசாது இருந்தார். பின்பு திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் ஆற்றல் பெற்றார் என்று மரபு வழிச்செய்தி கூறுகிறது. பேச்சாற்றல் பெற்ற இவர் முருகனின் மீது கந்தர் கலிவெண்பா எனும் நூலைப் பாடினார். முருகப்பெருமான் இவர் கனவில் தோன்றி ''நீ குருபரன் ஆகுக'' என்று கூறினார். அது முதல் இவர் குமரகுருபரர் என்று அழைக்கப்பட்டார்.

    • பயணமும் இறுதியும்

    திருச்செந்தூர் முதல் இமயம் வரை நடைப் பயணம் மேற்கொண்டவர். இந்நடைப் பயணத்தின் போது சைவத்தையும் தமிழையும் பரப்புவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொண்டவர். இவர் காசியில் மடத்தில் தங்கி இருந்தபோது இறைவனடி சேர்ந்தார்.

    மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் காலத்தில் இப்புலவர் வாழ்ந்துள்ளார். திருமலை நாயக்கர் வாயிலாக மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இயற்றப்பட்டது. மீனாட்சியம்மன் கோயில் திருமுன்பு அரங்கேற்றமும் செய்யப்பட்டது.

    • பிற படைப்புகள்

    குமரகுருபரர் மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம் முதலிய நூல்களை இயற்றி உள்ளார்.

    மேலும் நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிவகாமியம்மை இரட்டை மணிமாலை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம் முதலிய நூல்களையும் இயற்றி உள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 17:17:42(இந்திய நேரம்)