தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-முகவுரை


கலித்தொகை

முகவுரை

எட்டுத் தொகை நூல்களுள் பாவின் பெயரைப்
பெற்ற தொகை நூல்கள் பரிபாடலும் கலித்தொகையும்,
அகன் ஐந்திணையாகிய அகப்பொருட்
செய்திகளைப் பாடுதற்கு உரிய தகுதி வாய்ந்த
பாவாக இவ் இரண்டினையும் தொல்காப்பியர்
குறித்துள்ளனர்.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர் (அகத்.53)

என்பது தொல்காப்பியரது வாக்கு. இச்சூத்திரத்தில்
'என்மனார் புலவர்' என்று குறிப்பதனால், ஆசிரியர்
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பேயே
அகப்பொருள் இலக்கிய வழக்கில் பரிபாடலும்
கலியும் முதன்மை பெற்று விளங்கின
என்பது புலனாம்.

பா அமைப்பிலும் பரிபாடலும் கலியும் பெரிதும்
ஒப்புமை உடையன. இவ் இரண்டையும் வெண்பா
நடைத்து எனத்தொல்காப்பியர் கூறுவர். கொச்சகம்,
அராகம், சுரிதகம், எருத்து, என்னும் உறுப்புகள்
இவ் இரண்டு பாவிற்கும் பொதுமையானவை.
மேலும், இவ் இரண்டையும் இசைப்பாட்டு
எனவும் உரையாசிரியர் முதலியோர் குறித்துள்ளனர்.
இவ்வகை ஒப்புமைகளால் இவற்றை வேறுபடுத்திக்
கண்டு கொள்ளுதல் அத்தனை எளிதன்று. 'பரிபாடல்
பரிந்து வருவது; அஃதாவது. கலியுறுப்புப்
போலாது பல அடியும் ஏற்று வருவது'
(செய்யு. 118) எனப் பேராசிரியர் கூறும் விளக்கம்
இவ் இரண்டு பாடல்களின் வேற்றுமைத்
தன்மையை ஒருவாறு புலப்படுத்தும்.

சங்கத்தார் தொகுத்த கலிப்பாட்டு நூற்றைம்பது
எனப் பேராசிரியரும் (செய்யு. 149, 153, 154, 155, 160),
இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும் (சூ.1)
குறித்துள்ளனர். ஏனைய தொகை நூல்களிற்
போலப் பாடல்களில் சிதைவும் குறைவும் இன்றி,
கலி நூற்றைம்பதும் இப்பொழுதும் வழங்குவது
தமிழ் மக்களின் தவப்பயன் எனலாம்.

நூற்றைம்பது பாடல்களுள் முதற் பாடல் கடவுள்
வாழ்த்து. பின்னர், பாலை, குறிஞ்சி, மருதம்,
முல்லை, நெய்தல் என்ற வரிசையில்
ஐந்திணைகளுக்கும் உரிய பாடல்கள்
அமைந்துள்ளன. இவை முறையே 35, 29, 35, 17, 33
பாடல்களைக் கொண்டுள்ளன. இப் பகுதிகளை
மருதக் கலி (செய்யு. 155), முல்லைக் கலி
(செய்யு. 156), என வழங்கியதோடு மருதப்
பாட்டு (செய்யு. 160), முல்லைப் பாட்டு
(செய்யு. 154, 155), குறிஞ்சிப் பாட்டு
(செய்யு. 160), எனவும் பேராசிரியர்
தமது உரையில் வழங்கியுள்ளனர்.

பெருங் கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி;
மருதன் இளநாகன் மருதம்; அருஞ்சோழன்
நல்லுருத்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல்
கல்வி வலார் கண்ட கலி.

என வழங்கும் பாடல் ஐந்திணைப் பகுதிகளும்
வெவ்வேறு ஆசிரியர்களால் பாடப் பெற்றவை
எனக் கூறுகின்றது. இதனைத் தொகுத்தார்,
தொகுப்பித்தார் பற்றிய குறிப்பு நூல் இறுதியில்
காணப்பெறவில்லை. உரையாசிரியராகிய
நச்சினார்க்கினியர் குறிப்பிலிருந்து நெய்தற்
பகுதியைச் செய்த நல்லந்துவனாரே கடவுள்
வாழ்த்துப் பாடலையும் பாடி, இத் தொகையைத்
தொகுத்தார் என்று கொள்ள இடந்தருகிறது,

கலித்தொகையை முதன் முதலாகப் பதிப்பித்த
(1887) சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள்
'நல்லந்துவனார் கலித்தொகை' என்றே
குறித்துள்ளார், பேராசிரியர் எஸ்.வையாபுரிப்
பிள்ளை அவர்களும் தாம் ஆங்கிலத்தில்
எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றில், நெய்தற்
பகுதியின் ஆசிரியராகக் குறிக்கப்பெற்ற
நல்லந்துவனாரே ஏனைய பகுதிகளுக்கும்
ஆசிரியராயிருத்தல் கூடும் என்று எழுதியுள்ளார்.
ஐவர் பாடியதாகக் கூறும் தனிப் பாடல் மிகப்
பிற்பட்ட காலத்தது என்றும். நூலின் நடை,
அமைப்பு, போக்கு, முதலிய சில தனி
இயல்புகளைக் கவனித்தாலும் இஃது ஒரே
ஆசிரியர் இயற்றியதாகும் என்றே
கொள்ளத்தக்கதாயுள்ளது என்றும், இவர்
கருதுகின்றார் (History of Tamil Language
and Literature, pp. 26-27). இங்ஙனம்
மாறுபட்ட கருத்துகள் கலித்தொகை பற்றி
நிலவுவதால், சி.வை.தாமோதரம் பிள்ளை
அவர்கள் குறித்தபடி, கோத்தவர்
பெயராலேயே, 'நல்லந்துவனார் கலித்தொகை'
என்று குறிக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஒவ்வொரு பாடலின் கீழும் அவ்வப்
பாடலுக்கு உரிய கூற்று விளக்கம் பற்றிய
பழைய குறிப்பு உள்ளது. இக் குறிப்புகள்
சில பாடல்களில் தொல்காப்பிய
மேற்கோள்களுடன் மிக நீண்டும்
செல்லுகின்றன. வேறு சில பாடல்களில்
முன் பாடலுக்கு உரிய கூற்றே வந்தால்,
'இதுவும் அது' என்று குறிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும்,
'இன்னார் கூற்று' என்பது விளங்கச் சுருக்கமாகக்
கூற்றுப் பற்றிய தலைப்பு இடப்பெற்றுள்ளது.
மேலும், தலைவன், தலைவி, தோழி,
முதலியோரது உரையாடலாக வரும்
பாடல்களில் மட்டும் பேசுவோரின் பெயர்
விளங்கச் சிறு தலைப்புகள்
அமைக்கப் பெற்றுள்ளன.

கலித்தொகை முழுமைக்கும் நச்சினார்க்கினியரின்
சிறந்த உரை அமைந்துள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:27:31(இந்திய நேரம்)