தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • கூடலழகர் கோவில் - திருக்கூடல்
    வரலாறு

    இத்தலத்தைப் பற்றி, பிரம்மாண்ட புராணம் கூடற் புராணம்
    போன்றவற்றால் விரிவான செய்திகளை அறிய முடிகிறது. நான்கு
    யுகங்களிலும் இத்தலம் இருந்ததாக புராண வரலாறு உரைக்கிறது.

    கிரேதா யுகத்தில் பிரம்ம தேவனின் மைந்தன் திருமாலை அர்ச்சா
    ரூபத்தில் வழிபட விரும்பி, விஸ்வகர்மாவை அழைத்து அதற்கேற்றார்
    போல ஒரு கோவிலைப் படைக்கச் சொன்னதும் இந்தக் கிருதமாலா
    நதியிடையே அஷ்டாங்க விமானத்துடன் இக்கோவிலைப் படைக்க
    எம்பெருமானும் பிராட்டியும் சகல பரிவாரங்களுடன் இங்கு
    எழுந்தருளினர். இதே யுகத்தில்தான் சிவன் உமையவளைக் கூட
    இத்தலத்தே தவமிருந்து இப்பெருமானின் அருள்பெற்று உமையவளை
    மணம் புரிந்தார்.

    திரேதாயுகத்தில் பிருது என்னும் மன்னன் ஒருவன் எல்லாத்
    தலங்கட்கும் சென்று வழிபட்டு வரும் சமயத்தில் இத்தலத்தின் மீது
    பறக்கும் போதும் அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் விமானம்
    பறக்க முடியாமல் போகவே இவ்விடத்தே இறங்கி இப்பெருமானின்
    திருவழகில் ஈடுபட்டு நெடுநாள் தங்கி பரமபதம் அடைந்தான்.

    துவாபரயுகத்தில் விஷ்ணு பக்தியில் மிகச்சிறந்து விளங்கிய
    அம்பரிஷன் மன்னனும் இப்பெருமானை வழிப்பட்டு முக்தியடைந்தான்.

    கலியுகத்தின் ஆரம்பத்தில் புருரவன் என்னும் பேரரசன் இந்தக்
    கூடலழகருக்குப் பணிவிடை பல செய்து வைகுந்தம் அடைந்தான்.
    அவனது மகன் இந்திரத்யுமனன் தந்தையைப் பின்பற்றியே
    தொண்டூழியம் செய்து உய்ந்து போனான். இவனது புத்திரனே
    மலயத்துவசப் பாண்டியன் என்பவன். இவனே வடநாட்டு வேந்தர்களை
    வென்று இமயமலைமீது மீன் கொடியை நாட்டி மீன் முத்திரையும்
    பதித்துத் திரும்பினான். இவனைத்தான் பெரியாழ்வார்,

        “பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர்”
                     என்கிறார்.

    இதே கலியுகத்தில் நீண்ட வருடங்கட்குப் பிறகு “வல்லபதேவன்”
    என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த போது “முக்தியளிக்கும்
    தெய்வம் எது’. என்று சந்தேகம் கொண்டு தன் தேசத்திலிருந்த பல
    மதத்தார்களையும் முக்தியளிக்கும் தெய்வத்தை நிருபணம் செய்யுமாறு
    கோரி அதற்குப் பரிசாக பொற்கிழி ஒன்றைக் கட்டுவித்து யாருடைய
    மதம் முக்தியளிக்கும் என்று நிருபணம் செய்யப்படுகிறதோ அப்போது
    இந்தப் பொற்கிழி தானாகவே அறுந்துவிழும் என்றும், இதனை
    யாவருக்கும் அறிவிக்க ஏற்பாடு செய்தான். இதைக் கேள்வியுற்ற
    ஒவ்வொரு மதாபிமானியும் தத்தம் மதமே சிறந்ததென்று வாதிட்டு
    வரலாயினர். அப்போது பாண்டியனின் அரசவைப் புரோகிதராக இருந்த
    செல்வநம்பியின் கனவில் தோன்றிய கூடலழகர் திருவில்லிபுத்தூரிலே
    இருக்கும் பெரியாழ்வாரை விழிமின். அவர் வந்து திருமாலே
    பரம்பொருள், வைணவமே முக்தியளிக்கும் மதம் என்று பரதத்துவ
    நிர்ணயம் செய்வாரென்று கூற அவ்வாறே பெரியாழ்வாரை அழைக்க
    அவரும் இக்கூடல் நகருக்கு எழுந்தருளினார்.

    சபையினுள் புகுந்த பெரியாழ்வார் வேதம், இதிகாசம், ஸ்மிருதிகள்,
    மற்றும் புராணங்களிலிருந்து எண்ணற்ற எடுத்துக் காட்டுகளைக் காட்டி
    திருமாலே பரம்பொருள் எனவும், வைணவமே முக்தியளிக்க வல்ல
    மதம் எனவும் நிருபணம் செய்து காட்ட பொற்கிழி தானாகவே அறுந்து
    விழுந்தது.     இதைக்கண்டு     பேராச்சர்யமுற்ற     பாண்டியன்
    பெரியாழ்வாரையும் பணிந்து போற்றி பலவாறாகப் புகழ்ந்து, யானை
    மீதேற்றித் தானும் பின் தொடர்ந்து ஊர்வலமாய் அழைத்து வரலானான்.
    இக்காட்சியைக் காண கூடலழகரே பிராட்டியோடு கருட வாகனத்தில்
    விண்ணில் உலாவரத் தொடங்கினார்.

    இக்காட்சியைக் கண்ட ஆழ்வார், பெருமாளே கலியுகத்தில் நீ
    இவ்விதம் காட்சி தருவதோ, நின் அழகுக்கு கண்ணேறு பட்டுவிடாதோ
    என்று நினைத்து எம்பெருமானைப் பல்லாண்டு வாழ்க என்று
    பல்லாண்டு பாடினார்.

    இந்த திவ்யதேசத்தில் விளைந்த இப்பல்லாண்டுதான் எல்லாத்
    தலங்களிலும் இறைவனுக்குத் திருப்பல்லாண்டாக முதன் முதலில்
    பாடுவதாக அமைந்துவிட்டது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:15:34(இந்திய நேரம்)