தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • சௌம்யநாராயணப்பெருமாள் கோவில்
    திருக்கோட்டியூர்
    வரலாறு

    பிர்ம்மாண்ட புராணத்தில் 6 அத்தியாயங்களிலும், பிரம்ம
    கைவர்தத்தில் இரண்டு அத்தியாயங்களிலும் இத்தலம் பற்றிச்
    சிறப்பித்துப் பேசப்படுகிறது.

    பிரம்மனைக் குறித்து தவமிருந்த இரண்யன், தனக்கு தேவர்களாலும்,
    மனிதர்களாலும், விலங்குகளாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம்
    நேரக்கூடாது என்று வரம் பெற்று, தேவர்களையுந் துன்புறுத்தி,
    உலகெங்கும் நமோ ஹிரண்யாய நமஹ என்றே சொல்லுமாறு செய்து
    வந்தான்.     இரண்யனின் இம்சை பொறுக்காத     தேவர்கள்
    சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவன் வரங்கொடுத்த பிரம்மாதான்
    இதற்கு உபாயம் சொல்ல முடியுமென்று சொல்ல பிரம்மரோ
    ஸ்ரீமந் நாராயணன் ஒருவனால்தான் இரண்யாட்சகனுக்கு சரியான முடிவு
    கட்ட முடியும் என்று கூற எல்லோரும் திருமால் பள்ளிகொண்டுள்ள
    பாற்கடலுக்கு விரைந்து பணிந்து நின்று விபரங்கூறினர்.

    இவர்களின் குறையைக் கேட்ட ஸ்ரீமந் நாராயணன் எல்லா
    உலகங்களிலும் இரண்யனின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது. இரண்ய
    நாமம் ஒலிக்காத இடம் எங்காவது இருந்தால் கூறுங்கள் அங்கு
    சென்று நாமெல்லாரும் ரஹஸ்யமாய் இரண்யவதம் செய்வது பற்றிப்
    பேசலாம் என்று சொன்னதும், பூவுலகில் ஸ்ரீமந் நாராயணனை சீராப்தி
    நாதனாகக் காண வேண்டுமென்று “கதம்பரிஷி” கடுந்தவம் புரிகிறார்.
    எந்நேரமும் நாராயண மந்திரம் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த ஒரு
    ஆஸ்ரமம் தான் இரண்யாதிக்கம் செல்லாத இடம். இப்போது நாம்
    கூடிப் பேசுவதற்கு அதுவே உகந்த இடம் என்று பிரம்மதேவன் கூற
    தேவர்களும் மும்மூர்த்திகளும் கதம்பரிஷியின் ஆஸ்ரமத்திற்கு
    எழுந்தருளி, அம்முனிவரின்     தவப்பயனாக     சீராப்திநாதனாக
    எம்பெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து, இரண்ய சம்ஹாரத்தைப்
    பற்றி பேசி முடித்தனர். பேசி முடித்தபின், மற்றெல்லோரையும்
    கதம்பரிஷியின் ஆஸ்மரத்திலேயே மறைந்திருக்கச் செய்து தான்
    மட்டும் திருப்பாற்கடலுக்கு எழுந்தருளினார் ஸ்ரீமந்நாராயணன்.

    மூம்மூர்த்திகளுடன், தேவர்களும், ஸப்தரிஷிகளும் கூட்டம்
    கூட்டமாய் இவ்விடத்திற்கு (கோஷ்டி கோஷ்டியாய்) வந்தமையால்
    திருக்கோஷ்டியூர் ஆயிற்று.

    (திருக்கு + ஓட்டியூர்) திருக்கு என்றால் பாவம். எனவே பாவங்களை
    ஓட்டக்கூடிய ஊர் என்றும் பொருள்படும்.

    திருக்கோட்டியூர் அமைந்துள்ள இடத்தைப் பற்றி பிரம்மாண்ட
    புராணம் பின்வருமாறு கூறுகிறது.

    “காவேரி நதிக்குத் தெற்குப் பக்கத்தில் விருஷபாசலத்திற்கு
    (அழகர் கோவிலுக்கு) கீழ்ப்புறத்தில் புண்ணியமாய் சக்தியையுடைய
    மணிமுத்தா நதிக்கரையில் பரமாத்ம ஞானம் பிறந்த பாகவதர்கள்
    தங்குமிடமாய் நான்கு யோஜனை விஸ்தீரணமாய் (யோஜனை 10 மைல்)
    கதம்ப மஹரிஷியின் ஆஸ்ரமம் அமைந்துள்ளது.

    (பிர்ம்மாண்ட புராணம், திருக்கோட்டியூர் க்ஷேத்ர மகிமை சுலோகம்
    42, 43)

    பாற்கடலுக்கு எழுந்தருளின பரந்தாமன், தனது அருகாமையில்
    இருந்த சங்கு கர்ணனைப் பார்த்து நீ சென்று இரண்யன் மனைவி
    வசந்தமாலையின் வயிற்றில் பிரஹலாதனாகப் பிறக்க கடவாய் எனக்
    கூற, அவ்விதமே பிரஹலாதன் பிறந்து நாராயண மந்திரத்தைச் சொல்ல,
    எங்கேயடா உன் நாராயணன் என்று இரண்யன் கேட்க,
    தூணிலிருப்பான், துரும்பில் இருப்பான் என, பிரஹலாதன் சொல்ல,
    இத்தூணில் உள்ளானோ என்று “பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண்
    புடைப்ப, பிறையெயிற் றண்ணல் விழி பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய”
    தேவாய்த் தோன்றி இரண்யனைக் கொன்று நரசிம்மவதாரம் முடிவுற்றது.

    இதையெல்லாம் அறிந்த கதம்பரிஷி ஸ்ரீமந் நாராயணன்
    இரண்யனைப் பிடித்தது கொன்றது போன்றவற்றைக் குறிக்கும் மங்கள
    விக்ரகங்களைத் தனக்குத் தரவேண்டுமென்று பிரம்மனை வேண்ட,
    பிரம்மன், தேவசிற்பியான விஸ்வகர்மாவையும், அசுர சிற்பியான
    மயனையும் அழைத்து தேவலோகத்தில் உள்ளது போன்ற விமானத்தை
    இவ்விடத்தில் எழுப்புங்கள் என்று சொல்ல, மூன்றடுக்குகள்
    கொண்டதான அஷ்டாங்க விமானத்துடன் அழகிய கோவிலை
    நிர்மாணித்து முடித்தனர்.

    மூன்று தளங்களுடன் கூடிய இந்த விமானம் மூன்று பதங்களுடன்
    கூடின மூலமந்திரம் போன்ற தாயும் (ஓம் என ஒருபதம், நமோ என
    ஒருபதம், நாராயண என ஒரு பதம்) விளங்குகிறது.

    இரண்யவதம் முடியும் வரை இங்கு தங்கியிருந்த தேவேந்திரனான
    இந்திரன் இந்திர லோகத்தில் தன்னால் பூஜிக்கப்பட்ட பேரழகு வாய்ந்த
    ஸ்ரீபூமி நீளா தேவிகளுடன் கூடின ஸ்ரீ சௌமிய நாராயணனை, கதம்ப
    மஹரிஷிக்கு கொடுக்க மிக்க சந்தோஷத்துடன் பெற்று அர்ச்சித்து
    வரலானார்.

    கதம்பரிஷியை     வாழ்த்தி     வணங்கிவிட்டு     அனைவரும்
    தேவருலகெய்தினர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:16:25(இந்திய நேரம்)