தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • மணிக்குன்றப்பெருமாள் கோவில்
    திருத்தஞ்சை மாமணிக்கோவில்
    வரலாறு

    இத்தலம் பற்றியும், இந்நகர் பற்றியும்பிரம்மாண்ட புராணம்
    விளக்குகிறது.

    கிரேதாயுகத்தில் மது என்னும் அரசனது மரபில் தஞ்சகன்,
    தண்டகன், கஜமுகன் என்னும் அசுரர் மூவர் பிறந்து சிவனைக் குறித்து
    கடுந்தவம் செய்ய சிவன் தோன்றி என்ன வரவேண்டுமெனக் கேட்க
    அதற்கம்மூவரும் சாகா வரம் வேண்டுமென்று கேட்டனர். சாகா
    வரமளிக்கும் வல்லமை திருமால் ஒருவருக்கே உண்டு என்றும்,
    என்னால் உங்கள் மூவருக்கும் மரணமில்லை என்றும் சிவன் அருளி
    மறைந்தார்.

    இதனால் இம்மூவரும் மிகவும் செருக்குற்று இந்திரலோகத்தையும்
    அச்சுறுத்தி, முனிவர்களின் தவத்தையும் சிதைத்து கொடுமைகள்
    புரிந்துவந்தனர். அப்போது பராசுரர் என்னும் முனிவர் இவ்விடத்தில்
    தவம் செய்து வந்தார். அப்போது நாடெங்கும் கடும் பஞ்சம் உண்டாகி
    குடிப்பதற்கும் நீரின்றிப் போனது.

    ஆனால் பராசர முனிவர் தவமிருக்கும் இடத்திற்கு அருகில் மட்டும்
    ஒரு சுனையில் நன்னீர் இருந்தது. இம்மூவரும் வந்து அந்த தண்ணீரைப்
    பருகிக் கொண்டு அவ்வனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு
    நாள் பராசரரின் தவத்தைக் கண்டதும் அவரைத் துன்புறுத்தி
    அழிக்கலாயினர்.

    பராசரர் ஹரி, ஹரி என்று அரியை அழைக்க, பக்தருக்கு இரங்கும்
    பரந்தாமன் தனது வாகனமான கருடனை அனுப்ப அம்மூவருக்குத்
    துணை நின்ற அரக்கர்களையெல்லாம் கருடன் அழித்துவிட அம்மூவர்
    மட்டும் எஞ்சி நின்றனர். இந்நிலைகண்ட எம்பெருமான் தானே நேரில்
    வந்து தஞ்சகன் என்னும் அரக்கனை தனது சக்ராயுதத்தால் தலையைச்
    சீவினார். தவறுணர்ந்த தஞ்சகன் தன்னை மன்னிக்குமாறு வேண்டி தன்
    பெயரிலேயே இந்நகரம் திகழவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்
    (எனவே தஞ்சகனூர் ஆகி தஞ்சகூராகி, தஞ்சாவூராயிற்று)

    இதன் பிறகு கஜமுகன் என்னும் அரக்கன் யானை வடிவம் கொண்டு
    திருமாலைத் தாக்க அவர் நரசிம்ம ரூபமெடுத்து அவனைக் கொல்ல
    இறக்கும் தருவாயில் தனக்குத் திருநாடு வேண்டுமெனக் கேட்க
    அவனுக்கும் திருநாடருளினார். இந்த தஞ்சையில் யாளியாகிய நரசிம்ம
    ரூபத்தில் நின்றதால் தஞ்சையாளி என்றே பெயராயிற்று.

    ....“என் மனத்தேயிருக்கும் புகழ்
        தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன்”
        ....என்று எடுத்தாண்டுள்ளார்.

    இவ்வாறு இரண்டு சகோதரர்களும் மாண்டுவிட்டதைக் கண்ட
    தண்டகாசுரன் மிக்க சினத்துடன் திருமாலுடன் பொருதி பாதாளத்திற்குள்
    புகுந்து மறைந்து கொண்டான். திருமால் உடனே வராக உருவங்கொண்டு
    பூமியைக் கீண்டு அவனைப் பின் தொடர்ந்து சென்று தன் முகக்
    கோட்டால் அவனது தலையைக் கிழித்து எறிந்தார். அவனும் தனது
    இறுதிக் காலம் வந்துற்றதையெண்ணி எம்பெருமானின் பாதங்களில்
    வீழ்ந்து இவ்விடமும் தன் பெயரால் வழங்கப்படவேண்டுமென
    வேண்டிக்கொள்ள அவ்வனம் “தண்டகாரண்யம்” ஆயிற்று. அதன்
    நடுவே திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) என்னும் திவ்ய ஷேத்திரத்தில்
    நிலத்தினின்று எழுந்த வண்ணம் ஸ்ரீபூவராகப் பெருமாள் சுயம்பு
    வடிவாய் காட்சி தந்தார்.

    இந்த வெண்ணாற்றங்கரையில் இப்போது மூன்று கோவில்கள்
    உள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று பெருமான்கள்
    எழுந்தருளியுள்ளனர். மூன்று     தலங்கள் இருந்தாலும் இரு
    திவ்யதேசமாகவே மங்களா சாசனம் செய்யப்பட்டுள்ளது. இம்மூன்றும்
    சுமார் ஒரு பர்லாங் சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:21:34(இந்திய நேரம்)