தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • அரவிந்தலோசனர் கோவில் - (இரட்டைத்திருப்பதி)
    திருத்தொலைவில்லிமங்கலம்

    வரலாறு

    பிரம்மாண்ட புராணமே இதைப்பற்றியும் புகழ்கிறது. பாத்ம
    புராணத்தில் சிறு குறிப்புத் தென்படுகிறது. வடநூற்கள் “கேதார
    நிலையம்” என்று இத்திருப்பதியைக் குறிக்கின்றது.

    முன்னொரு காலத்தில் ஆத்ரேய கோத்திரத்தில் உதித்த சுப்ரபர்
    என்னும் முனிவர் திருமாலைக் குறித்துப் பெரும் யாகஞ் செய்ய பல
    இடங்களிலும் முயன்றும், ஒரு இடத்திலும் தனது மனம்
    ஒருநிலைப்படாது. யாகமும் தொடர இயலாது,

    அலைந்து தேடுங்காலை புஷ்பங்களாலும் அழகிய சோலைகளாலும்,
    இனிய கீதம் பாடும் பறவைகளாலும் சூழப்பட்ட இவ்விடத்தை தெரிவு
    செய்து, தம் யாகத்தை தொடங்க எத்தனித்தார்.

    இவ்விடத்தில் யாகசாலை அமைக்க பூமியை உழுது சமப்படுத்த
    முனைந்து கொண்டிருக்கும்போது உழுதவிடத்தில் ஒளிபொருந்திய ஒரு
    தராசையும் வில்லையுங்கண்டு. ஆச்சர்யத்துடன் அதைக் கையில்
    எடுத்ததும், இவை இரண்டும் இளம் வயதான ஒரு ஆணாகவும்,
    பெண்ணாகவும் மாறி சுப்ரபரை வணங்கி நின்றனர்.

    வியப்புற்ற சப்ரபர் இத்தகு சாபம் விளைந்த காரணத்தை வினவ
    அவர்கள் கீழ்வருமாறு கூறினர்.

    வில்லாயிருந்த அந்த ஆண்மகன் சுப்ரபரை நோக்கி சுவாமி, முன்
    பிறப்பில் வித்யாதரன் என்னும் தேவனாயிருந்த நான், அதோ
    அருகிலிருக்கும் என் மனையாளுடன் வெகுவான காமத்திலீடுபட்டு இச்
    சோலை வந்து மோகித்திருந்தேன். அப்போது ஆகாய மார்க்கத்தில்
    சென்று கொண்டிருந்த குபேரனை நான் கண்டும் காணததுபோல்
    இருந்தேன். இதையறிந்த குபேரன் மிக்க     சினங்கொண்டு
    எங்களிருவரையும் வில்லாகவும், தராசாகவும் மாறுமாறு சபித்தான்.

    குபேரனின் பாதத்தில் வீழ்ந்து சாபவிமோசனம் வேண்டினேன்.
    என்னை மதியாதிருந்த உமக்கு இச்சாபம் செல்லும். சாப விமோசனத்தை
    நான் கொடேன். பின்னொரு காலத்தில் சுப்ரபர் என்னும் முனிவர் யாகம்
    செய்ய இவ்விடத்தை தோண்டும் போது அவர் கரங்கள் பட்டதும்
    சாபம் விலகும். அதுவரை இப்பூமியில் அமிழ்ந்து கிடக்கவும் என்று
    கூறி செல்லலுற்றான்

    இதுவரை இங்கு அமிழ்ந்து கிடந்த நாங்கள் இன்று உங்கள்
    திருக்கரம் பட்டதும் மீண்டும் பழைய நிலை எய்தினோம் என்று கூறி
    தொழுது நின்றனர்.

    முனிவர் அவர்களை வாழ்த்திவிட்டு, தம்யாகத்தை தொடங்கலானார்.

    சுப்ரபர் யாகத்தை வெகு விமரிசையாக நடாத்தி திரண்டு வந்த
    யாகத்தின் பலனை “அவிர்ப்பாகமாக” தேவர்களுக்கும் கொடுத்தார்.
    அவிர்ப்பாகம் தமக்கு கிடைக்க காரணமாயிருந்த எம்பெருமானை
    தேவர்களும் சுப்ரபருடன் கூடித் தொழ திருமால் அப்போதே தோன்றி
    காட்சியளித்தார்.

    அதுமுதல் இங்கு எழுந்தருளிய பிரானுக்குத் தேவப்பிரான் என்னும்
    திருநாமம் நிலைக்கலாயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:28:13(இந்திய நேரம்)