தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • விசயராகவப்பெருமாள் கோவில் - திருப்புட்குழி
    வரலாறு

    இத்தலத்திற்கு கூறப்படும் அதே வரலாறு அப்படியே புள்ளம்
    பூதங்குடி ஸ்தலத்திற்கும் கூறப்படுகிறது. இதில் எது உண்மையானது
    என அறியுமாறில்லை.

    கற்றறிந்த பெரியோர்களையும்     வைணவ     ஆராய்ச்சியில்
    மிக்கோரையும் இந்த பேதங் குறித்து வினவுமிடத்து ஆமாம்
    அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. என்கின்றனரேயன்றி எந்த
    தலத்திற்கு     கூறப்பட்ட     வரலாறு     உண்மை     என
    தெளிவுபடுத்துகிறார்களில்லை.

    இத்தல வரலாறு இவ்வாறு பேசப்படுகிறது.

    சீதையை     இராவணன்     சிறையெடுத்துச்     சென்றபோது
    அவனையெதிர்த்து போரிட்ட ஜடாயு இராவணனால் வெட்டப்பட்டு
    இவ்விடத்தில் வீழ்ந்து பின் ஜானகியைத் தேடி அவ்வழியில் வந்த
    இராமனிடம் விவரங்களைத் தெரிவித்துவிட்டு உயிர் நீத்தார். ராமன்
    அவருக்கு மோட்சமளித்து தனது கரங்களால் அந்திமச் சடங்குகளை
    இங்கு (இத்தலத்தில்) செய்வித்தார். எனவே இத்தலத்திற்கு
    திரு + புள் + குழி என்ற பெயருண்டாயிற்று (வட மொழியில் க்ருத்ர
    புஷ்கரணி சேஷத்தரம் எனப்படுகிறது)

    இதே வரலாறுதான் புள்ளம் பூதங்குடிக்கும் கூறப்பட்டுள்ளது.
    இவ்விதம் ஒரே வரலாறு இரண்டு ஸ்தலங்கட்கு கூறப்பட்டுள்ளது.
    இவ்விதம் ஒரே வரலாறு இரண்டு ஸ்தலங்கட்கு கூறப்படுகிறதே, இதில்
    எதை உண்மையானதாகக் கொள்ளலாமென பண்டித சிரோண்மணி
    தஞ்சை என்.எஸ்.தாத்தாச்சார்யாருக்கு கடிதம் எழுதியதில் அவர்
    கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

    ..........தலபுராணங்கள் பெரும்பாலும் பிர்ம்மாண்ட புராணங்கூறும்
    தகவல்கள்தான். அவைகளில் பெரும்பாலும் நமக்கு குழப்பத்தையும்,
    ஐயத்தையும், தரும் கருத்துக்கள் ஒன்றேபோல் பல தலங்களுக்கும்
    குறிப்பிட்டிருக்கும். அதை அந்தந்த தலத்துடன் புகழ்ந்து கூறி நிறுத்த
    வேண்டியதுதான். அதில் அதிக ஆராய்ச்சி கூடாது எவ்வாறாயினும்
    இரு ஸ்தலங்கட்கும் ஒரே வரலாறு பேசப்படும் போது எது உண்மை
    அல்லது எதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளதென ஆய்தல்
    கடமையாகும். இது ஆய்வுக்குரிய விஷயமுமாகும்.

    திருப்புட்குழியைவிட, புள்ளம் பூதங்குடி திவ்யதேசத்திற்கே ஜடாயு
    தொடர்பான ஆதாரங்கள் அதிகம் இருப்பதாக ஒருவாறு
    தலைக்கட்டலாம்.

    சீதையைத் தேடிவந்த இராமன் புள்ளம் பூதங்குடியில் ஜடாயுவின்
    நிலையைக் கண்டு விபரந் தெரிந்து கொண்டபின் அந்திமச் சடங்குகளை
    நிறைவேற்ற சீதையில்லையே (பக்கத்தில் பிராட்டியில்லையே) என்று
    நினைத்தவுடன் பூமாதேவியே பிராட்டியாக வந்தார் என்பர். ஆனால்
    திருப்புட்குழியில் இரண்டு தேவிமார்கள் சூழ அமர்ந்துள்ளார்.

    1. சீதையைப் பிரிந்து நின்ற ராமனின் தோற்றமும் ஜடாயுவுக்கு
      அந்திமச் சடங்குகள் செய்ய பிராட்டியில்லையே என்று
      நினைத்தமாத்திரம் பூமாதேவி வந்துற்றதுமான இந்த நிகழ்வுகள்
      திருப்புட்குழியில் (ஸ்தல வரலாற்றில்) இல்லை.

    2. ஸ்ரீ இராமன் இலங்கைக்குச் சென்றதாகக் கூறப்படும் பாதை
      சோழநாட்டுக்கு     உட்பட்ட     பகுதியாக இருக்கலாமென
      எண்ணலாமே தவிர காஞ்சியிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும்
      சாலையாக இருக்க இயலாது.

    3. புள்ளம்பூதங்குடியில் ராமன் வல்வில் இராமன் என்று திருநாமம்
      பூண்டுள்ளார். இந்த வில்கொண்ட ராமன்தான் ராமாயணம்
      காட்டும்     ராமனாவான்     ஆனால்     திருப்புட்குழி
      யெம்பெருமானுக்கோ விஜயராகவப்பெருமாள் என்பது திருநாமம்.
      ராகவம் என்னும் சொல் இராமனையே குறித்தாலும், குறிப்பாக
      வல்வில்ராமன் என்று அடையாளமிட்டு குறிக்கும் அழகே தனி.
      இந்தத் தத்துவம் புட்குழி யெம்பெருமானுக்கு இல்லை.

    4. திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் புள்ளம் பூதங்குடி
      பெருமாளை வல்வில் இராமன் எனக் குறிக்கிறார். ஆனால்
      புட்குழியெம்பெருமானின்     விஜயராகவத்     திருநாமத்தை
      மங்களாசாசிக்கவில்லை. புட்குழி என்று மட்டுமே மங்களாசாசனம்
      செய்கிறார். மேலும் புள்ளம் பூதங்குடிக்கு இவர் அருளிய 10
      பாசுரங்களில் இராமாயணக் காதையை நினைவு கூர்கிறார்.

      ‘வெற்பால் மாரி பழுதாக்கி
          விறல் வாளரக்கன் தலைவன்றன்
      வற்பார் திரன் தோளைந் நான்கும்
          துணித்த வல்வில் இராமனிடம்’

      என்ற இந்த வல்வில் இராமனுக்கும் இராமாயணத்திற்கும் உள்ள
      தொடர்பை தெளிவுபடுத்துகிறார்.

    5. இராமாயணத்திலும் ஜடாயுவுடன் தொடர்புள்ளதாக இத்தலம்
      பேசப்பட்டுள்ளது.

      பூதபுரி ஷேத்ரே வந்தே புன்னைவன ஸம்ஸ்திதம்
      ஸௌமித்ரேகா காஷ்டாநி நிர்மதிஷ்யாமி பாவகம்
      க்ருதமாறும் தித்சஷாமி மத்க்ருதே நிதநம்கதம்
                  (ஸ்ரீராம. ஆரண் 68-27)

      இச்சுலோகத்தில் பூதபுரி சேஷத்ரம் என்று குறிக்கப்படுகிறது
      புள்ளம் பூதங்குடியே அன்றி திருப்புட்குழியன்று என்பது
      வெள்ளிடைமலை. மேலும்,

      விமாநே ஸோபநே அம்புஜஸ்ரீ.... ஸஸ்மாசர்தம்
      க்ருதராஜம் புஷ்கரிணி தீரே லஷ்மனோ லஷ்மி ஸம்பன்ன
          ஆரண் 68 33

      என்னும் வரிகளும் இத்தலத்தின் விமானம் தீர்த்தம்
      போன்றவற்றைக் குறிக்கப்படுவதுடன் இலக்குமணனுடன் இராமன்
      மட்டும் வந்துற்றதையும் தெளிவு படுத்துகிறது.

      எனவே ஜடாயுவுக்கு மோட்சமளித்த ஸ்தலம் புள்ளம்
      பூதங்குடியே     என்று     கொள்ளலாம்.     அவ்வாறாயின்
      திருப்புட்குழியின் ஸ்தலவரலாறு யாதென ஆராயவேண்டும்.
      அதை அறிஞர் மாட்டே விடுகின்றேன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:37:13(இந்திய நேரம்)