தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நண்டு (Crab)

  • நண்டு
    (Crab)

    முனைவர் ச.பரிமளா
    பேராசிரியர் மற்றும் தலைவர்
    தொல்லறிவியல் துறை
    நண்டு

    மீன்கள், இறால்களுக்கு அடுத்த நிலையில் வணிக, பொருளாதார முக்கியத்துவம் மிகுந்த நண்டுகள் உண்பதற்குச் சுவையானவையாகும். நண்டு இறைச்சியில் புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், தாமிரம், கந்தகம் மற்றும் உயிர்ச்சத்துக்களான வைட்டமின் பி, சி போன்றவை நிறைந்து காணப்படுகின்றன.

    மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு என்பது போல நண்டு வளர்ப்பும் நாட்டில் மிக முக்கியமான, லாபகரமான தொழிலாக வளர்ந்து வருகிறது. கடல், ஆறு, குளம் என்று அனைத்து வகையான நீர் நிலைகளிலும் நண்டு இனங்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, அவற்றின் வாழிடங்களுக்கும் வடிவத்திற்கும் ஏற்றவாறு நண்டுகள், கடல் நண்டு, கழி நண்டு, ஆற்று நண்டு, குள நண்டு, வயல் நண்டு, கல் நண்டு, ஓலைக்கால் நண்டு, நீலக்கால் நண்டு, புள்ளி நண்டு, முக்கண் நண்டு, சிலுவை நண்டு என வெவ்வேறு பெயர்களைப் பெற்றுள்ளன.

    உலகில் ஏறத்தாழ 5000க்கும் மேற்பட்ட நண்டு இனங்கள் உள்ளன என்றும் அவற்றுள் இந்தியப் பகுதியில் ஏறத்தாழ 640க்கும் மேற்பட்ட நண்டு இனங்கள் அடையாளம் அறியப்பட்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உணவுக்குப் போக எஞ்சியுள்ள நண்டுகளின் மலோடுகளிலிருந்து கைய்டின் (Chitin) என்னும் செயற்கை நூலிழை தயாரிக்கப்படுகிறது. இந்நூலிழை அறுவைச் சிகிச்சையின் போது காயங்களைத் தைப்பதற்கு உதவும் நூலாகப் பயன்படுவதால் தையல் பிரிப்பது என்ற சிக்கல் இல்லாமல் இப்புரத இழை தசைப் பகுதியுடன் கரைந்து போவது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:24:45(இந்திய நேரம்)