தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மாவிலிங்க மரம்

  • மாவிலிங்க மரம்

    முனைவர் கு.க.கவிதா,
    உதவிப் பேராசிரியர்,
    சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.


    மாவிலங்கம்

    இதற்கு வில்வபத்திரி, வரணி, மாவிலங்கம், மாவிலங்கு, மாவிலங்கை, மகாவிலங்கமரம், அதிசரணம், மரலிங்கம், மாவிப்பட்டை, மாவிட்டை, மாவிளக்கப்பட்டை என்னும் பெயர்களும் உண்டு. இம்மரத்தின் தாவரவியல் பெயர் கிரேட்டேவா அடன்சோனி (Crataera adansoni H.Jacobe) என்பதாகும். இதற்குக் கிரேட்டேவா ரிலிஜியோசா (Crateva religiosa) என்ற பெயரும் உண்டு. இது கெப்பாரிடேசியே (Capparidiacaae) குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தியாவில் பரவலாகக் காணப்படும் இம்மரம் தானாக வளர்கிறது. இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் இம்மரம் காணப்படுகிறது.

    வளரியல்பு :

    இது நடுத்தர உயரம் வளரும் இலையுதிர் மரம். இதன் கிளைகள் ஒழுங்கற்று வளரும். மரப்பட்டை சாம்பல் நிறத்திலும் வழவழப்பாகவும் இருக்கும். இலை விரல்கள் போன்ற மூன்று கூட்டிலை அமைப்பைக் கொண்டிருக்கும். பிப்ரவரி – மார்ச் மாதங்களில் புதிய இலைகள் உண்டாகும். பூக்கள் இளமஞ்சள் நிறத்தில், மரத்தில் இலைகள் உதிர்ந்திருக்கும் போது உண்டாகின்றன. வெண்ணிற மலர்கள் பெரியவை, பளபளப்பானவை. மலர்ந்தவுடன் இவை மஞ்சள் நிறமாக மாறிவிடும். புல்லி இதழ்கள் நான்கும் மடல்கள் போன்ற வட்டத்தட்டுடன் ஒட்டியிருக்கும். அல்லி இதழ்கள் நான்கும் நீண்ட கால் கொண்டிருக்கும். மகரந்தத்தாள்கள் மிகுதி. ஆல்பைக் காம்பின் மீது இருக்கும். இரண்டு வரிசை உட்சுவர் சூலொட்டு முறையில் அமைந்திருக்கும். சதைக்கனி, கடினமான கரடுமுரடான புறத்தோலுடன் காணப்படும். காய் உருண்டையாகவும், 1.5 – 5 செ.மீ கனத்தில் முதலில் பச்சையாகவும் பின்பு சிவப்பாகவும் இருக்கும். விதைகள் சதையுள் புதைந்திருக்கும்.

    பயன்கள் :

    இம்மரம் வலிமையற்றது. எனவே இதைத் தீக்குச்சி, சீப்பு செய்யப் பயன்படுத்தலாம். மரம் பளபளப்பான மஞ்சள் கலந்த வெள்ளை நிறமானது. பூச்சிகளால் எளிதில் தாக்கப்படும். இம்மரத்தின் இலைகளைக் கால் நடைகளுக்குத் தரலாம். மாவிலங்க மரத்தின் இலை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவத்திற்கு உதவும், பட்டைக் குடிநீர் கல்லடைப்பைப் போக்கும். பட்டையைச் சிதைத்து உட்புறமாக வைத்துக் கட்ட, கட்டிகள் கரையும். இதன் பட்டையை வட்டமாக வெட்டி அரையாப்புக் கட்டியில் வைத்து அதன் மீது ஓர் ஈயத்தகட்டைப் பொருத்திக் கட்ட, கட்டி அமுங்கிவிடும். பட்டை 170 கிராம், மூக்கிரட்டை 65 கிராம் இவற்றை 1400 மி.லி நீரிலிட்டுக் குடிநீரிட்டு அதில் 17-35 கி. தர நாட்பட்ட புண், விரை வீக்கம் நீங்கும். இம்மரத்தின் வேர்ப்பட்டையை நன்கு அரைத்துக் கொட்டைப் பாக்களவு கொடுத்துவர வண்டுக்கடி போகும்.

    மாவிலங்கம் பூ
    மாவிலங்கப்பட்டை, மிளகு, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை உணவிற்கு முன் சாப்பிட்டு வரச் சூதக வாயு காரணமாகப் பெண்களுக்கு மாதவிடாய் தடைப்பட்டால் சீராகும். சீரகம் சுக்குடன் இலையைக் குடிநீரிட்டுக் குடிக்க காய்ச்சல், செரியாமை, வலி நீங்கும். இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றிட வீக்கம், எரிச்சல் நீங்கும். மாவிலங்க இலை முடக்குவாதத்தையும் போக்கும்.

    நோக்கீட்டு நூல் :

    அறிவியல் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (2005).

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:57:00(இந்திய நேரம்)