தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • காரைக்காலம்மையார்

    முனைவர் செ.கற்பகம்
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    நாயன்மார்களுள் காலத்தால் மூத்தவராகவும், பதிக முறையில் இசைத் தமிழ்ப் பாடிய முன்னோடியாகவும், மூத்த இயலிசைப் புலவராகவும், பண்சுமந்த பாடல்கள் பாடியவராகவும், நட்டபாடை, இந்தளப் பண்களில் பாடிய முன்னோடியாகவும், தென்னக இசையின் தாயாகவும், பேய் உருப்பெற்று கயிலாயம் சென்றவராகவும், கயிலாயத்திற்குத் தலையால் நடந்து சென்றவராகவும், கயிலைநாதனால் அம்மையே என்று அழைக்கப் பெற்றவராகவும் புனிதவதி என்கிற காரைக்காலம்மையார் கருதப்படுகிறார்.

    பிறப்பும், திருமண வாழ்வும்:

    சோழநாட்டில் கடற்கரைப் பட்டினமாகத் திகழும் காரைக்கால் என்னும் ஊரில் தனத்தன் என்ற பெயருடைய வணிகன் ஒருவன் இருந்தான். இவருக்குப் புனிதவதி என்கிற பெண் மகவு பிறந்தாள். புனிதவதி வளர்ந்து திருமணப்பருவம் அடைந்தாள். நாகப்பட்டினத்தில் வாழும் நிதிபதி என்கிற வணிகன் மகன் பரமதத்தனுக்குப் புனிதவதியாரைத் திருமணம் செய்து வைத்தனர். பரமதத்தனும் காரைக்காலிலேயே தங்கி வாணிகம் செய்துவந்தார்.

    மாங்கனி பெறுதல்:

    ஒரு நாள் பரமதத்தனைக் காணவந்தவர்கள் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தனர். இதனைத்தன் இல்லத்திற்கு பரமதத்தன் அனுப்பிவைத்தான். ஒரு சிவனடியார் பசியால் வருந்தியபடி புனிதவதியார் இல்லத்திற்கு வந்தார். திருவமுது வேண்டினார். கறியமுது செய்யப்பெறாத நிலையில் கணவன் அனுப்பி வைத்திருந்த ஒரு மாம்பழம் கொண்டு திருவமுது அளித்தார்.
    பரமதத்தன் நண்பகலில் தன் வீட்டிற்கு வந்து உணவு உண்டான். புனிதவதியார் மற்றொரு மாங்கனியைக் கணவனுக்கு அளித்தார். அதனை உண்ட பரமதத்தன் கனியின் சுவை மிகுதி கண்டு தான் அனுப்பிருந்த மற்றொரு மாங்கனியையும் கொண்டு வருமாறு கூறினார். சிவனடியார்க்கு அதனைத் தந்தமையைக் கூறாமல் கணவனது விருப்பத்தையும் நிறைவேற்ற இயலாத நிலையில் சிவனது திருவருளால் கையிலே வேறொரு மாங்கனியைப் பெற்றார். அதனைக் கணவனுக்கு இட்டார். இக்கனியை உண்ட பரமதத்தன் முன்னினும் இக்கனி தவ அமிழ்தம் போன்று இனித்தது. உடன் பரமதத்தன் இக்கனி அற்புதக்கனி இதனை எங்கிருந்து பெற்றாய் என்று தன் மனைவியிடம் கேட்டான். கற்பு நிலை தவறாத அந்நங்கை நடந்தவற்றைக்கூறி இறைவன் அருளால் இக்கனியைப் பெற்றேன் என்றாள். இக்கனி சிவனருளால் உனக்குக் கிடைத்த தாயின் மேலும் ஒரு கனியைச் சிவனருளால் கொணர்க என்றான்.
    புனிதவதியார் இறைவன் திருவருளை வேண்டினாள். மற்றொரு மாங்கனியையும் பெற்றாள். இது கண்டு அஞ்சிய பரமதத்தன் தன் மனைவியைத் தெய்வமாகக் கருதினான். பிரிந்து வாழ எண்ணினான். கடல் கடந்து வாணிகம் செய்ய புறப்பட்டான். பெரும் பொருள் ஈட்டினான். காரைக்கால் திரும்பாமல் மதுரையில் சென்று தங்கினார். மதுரையில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்குப் புனிதவதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.

    இல்லற வாழ்வைத் துறத்தல்:

    பரமதத்தன் வருகைக்காக காரைக்காலில் புனிதவதியார் காத்திருந்தார். பரமதத்தன் மதுரையில் இருப்பதனை உறவினர் அறிந்தனர். புனிதவதியாரும் தன் உறவினர்களுடன் மதுரைக்குச் சென்றார். பரமதத்தனைக் கண்டனர். பரமதத்தன் மனைவியின் காலில் வீழ்ந்தான். புனிதவதியார் நடுங்கிப் போனார். ‘அம்மையே உனது அருளால் நான் வாழ்கிறேன். உன் பெயரையே என் மகளுக்கு இட்டுள்ளேன். இவர் தெய்வத்திற்குச் சமமானவர். இவரை எல்லோரும் வணங்குங்கள் என்று பரமதத்தன் கூறினார்.
    இது கேட்டு சுற்றத்தார் வியந்தனர். கணவன் கூறிய வார்த்தையைக் கேட்ட புனிதவதியார், சிவனடியைச் சிந்தித்தார். என் கணவன் கொள்கை அறிந்தேன். இவன் பொருட்டு சுமந்துள்ள அழகுமிகு இத்தசைப் பொதியைக் கழித்து உன் கணங்களுள் ஒருவராக பேய் வடிவைத் தந்தருள இறைவனை வேண்டினார். அங்ஙனமே பேய் வடிவம் பெற்றார். எலும்பு உருவினர் ஆனார். இறைவனது திருவருளைச் சிந்தித்து அற்புதத் திருவந்தாதி என்னும் பிரபந்தத்தைப் பாடினார். பின்பு திருவிரட்டை மணிமாலை என்கிற பிரபந்தத்தையும் பாடியருளினார்.

    தலையால் கைலாயம் செல்லுதல்:

    கயிலை நாதனைக் காண கயிலாயம் சென்றார். கயிலையைக் காலால் மிதிக்கக்கூடாது என்று தலையாலே நடந்து சென்றார். இறைவனது திருநோக்கம் இவர் மீது பட்டது. உமாதேவியார் “எம்பெருமானே தலையினால் நடந்து இம்மலை மீது ஏறி வரும் எலும்புடன் பின் அன்பின் திறம் என்னே” என்றார். உடன் சிவபிரான் “உமையே இங்கு வரும் இவள் நம்மை அன்பினால் பேணும் அம்மையாவாள் இப்பேய் வடிவத்தை நம்பால் தாமே தேடிப் பெற்றாள்” என்றார்.

    சிவபெருமான் அம்மையே என்று அழைத்தார். அப்பா என்று கூறிக்கொண்டு பேயார் சிவனை வணங்கினார். இறைவன் “நம்பால் இங்கு வந்து நீ வேண்டிப் பெறக்கருதியது யாது” என்றார். அப்பனே உன்மீது கொண்ட அன்பு என்றும் நிலைத்திருக்க என்று வேண்டினார். மேலும், ஐயனே மீண்டும் பிறவாமை வேண்டும் என்றார். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் என்றார். இன்னும் ஒன்று வேண்டும். அவ்வாறு நீ ஆடும் பொழுது உன் அடியின் கீழிருக்க வேண்டும் என்றார்.

    “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
    அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழியிருக்க வேண்டும்
    (பெரியபுராணம், பா. எண். 1176)

    என்றார்.

    அம்மையார் வேண்டிய அனைத்தும் கூடுமாறு சிவபிரான் அம்மையாரை நோக்கித் “தென்னாட்டில் உள்ள திருவாலங்காட்டில் யாம் ஆடியருளும் திருக்கூத்தினைக் கண்டு நீ என்றும் எம்மைப் பாடிப்போற்றுவாயாக என்றார். அம்மையார் கயிலையிலிருந்து விடைபெற்றார். திருவாலங்காட்டிற்குத் தலையாலே நடந்து சென்றார். ஆலங்காட்டு இறைவனது ஆடலைக் கண்டு மனம் உருகினார். “கொங்கைத் திரங்கி” என்னும் முதற்குறிப்புடைய நட்டபாடைப் பண்ணில் அமைந்த திருப்பதிகத்தினையும், “எட்டியிலவம்” என்று தொடங்கும் இந்தளப்பண் பதிகமும் பாடினார். ஆலங்காட்டு இறைவனது திருவடிக்கண் பாடிப்போற்றும் பெருவாழ்வைப் பெற்றார்.

    இவரது வரலாற்றைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் 66 பாடல்களில் கூறியுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:11:17(இந்திய நேரம்)