தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நீலகண்ட சிவன்

  • நீலகண்ட சிவன்

    முனைவர் செ.கற்பகம்
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை


    இறைவழிபாட்டு நெறிகளுள் இசை மூலம் இறைவனை வழிபடும் முறை மிகவும் தொன்மையான நெறியாகும். தமிழிசையால் இறைவனைப் போற்றிப் புகழும் திருநெறியை நாயன்மார்களும், ஆழ்வார்களும் சிறப்புடன் கையாண்டனர். இவர்களைத் தொடர்ந்து அருணகிரிநாதரும், தமிழிசை மூவர்களும், சங்கீத மும்மூர்த்திகளும் இசை வழிபாடு செய்தனர். இந்தத் திருநெறியை 19 ஆம் நூற்றாண்டில் இசையின் மூலம் பரப்பியவராக நீலகண்ட சிவன் விளங்குகிறார்.

    பிறப்பு:

    நீலகண்ட சிவன் நாகர்கோவிலை அடுத்துள்ள வடிவேச்வரம் என்னும் திருத்தலத்தில் சுப்பிரமணிய அய்யருக்கு மகனாக 1839 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பமே தெய்வீக மார்க்கத்திலும், இசைக்கலையிலும் சிறந்து விளங்கியது. சிவநெறியிலும், முருகவழிபாட்டிலும் ஈடுபாடு கொண்டவராக இவர் விளங்கினார். இதனால் இவருக்குச் ‘சுப்பிரமணியன்’ என்று பெயர் சூட்டினர்.

    இளமைப்பருவம்:

    இளமை முதலே ஆன்மீகத்திலும், திருக்கோயில்களில் நடைபெறும் பஜனையிலும் ஈடுபாடு கொண்டார். தனது ஐந்தாம் வயதிலே பழைய பஜனைப் பாடல்களுக்கு புதிய மெட்டமைத்துப் பாடி பலரையும் வியக்க வைத்தார். முத்தாண்டவருக்குச் சீகாழி தோணியப்பர் ஆலய அம்மை அருள் புரிந்ததைப்போல, சுப்பிரமணியன் பத்மநாபபுர கோயில் வாகன அறையில் கடுந்தவம் இயற்றி இறைவனது அருள் பெற்று, பாடும் திறமையைப் பெற்றார். அது முதல் சுப்பிரமணியன் நீலகண்ட சிவன் ஆனார்.

    இல்லற வாழ்வு:

    நீலகண்ட சிவன் செல்வச் சிறப்பு மிக்க தாணுஐயரின் மகளான இலட்சுமியைத் தனது 14 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்குப் பொண்ணு சிவன், தாணு சிவன், நீலகண்டன், சுந்தரம் என்ற நான்கு மகன்களும், பார்வதி அம்மாள் என்ற மகளும் உண்டு. சிவநெறியில் கொண்ட ஈடுபாட்டில் தம் குழந்தைகளுக்கும் சிவனுடைய பெயரையே சூட்டினார். இவர், உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவராகவும், சட்டத்துறையில் பல வருடங்கள் பணியாற்றினார். ஆனாலும், இவரது மனம் இல்லறத்தை விட்டு இறைவன் புகழைப் பாடுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. இவரது இல்லத்திற்கு ஒரு முறை சுவாமி விவேகானந்தர் வந்து இவருடன் ஒரே மேடையில் உரை நிகழ்த்தினர்.

    பெயர்க்காரணம்:

    நீலகண்ட சிவன் தனது வாழ்வைத்துறந்து, இறைத்தொண்டிற்கு தம்மை முழுமையாக ஆட்படுத்திய பிறகு “நீலகண்ட சிவன்” என்ற சிறப்புப் பெயர் பெற்றார். ஆனால், இவர் தன்னை “நீலகண்ட தாசன்” என்று அழைப்பதையே விருப்பினார் கொண்டார்.

    முத்திரைகள்:

    நீலகண்ட சிவன் தனது பாடல்களில் “நீலகண்ட” என்ற முத்திரையைப் பயன்படுத்தியுள்ளது. இருப்பினும், நீலகந்தன், நீலமணி சுந்தரன், நீலமை மணிகண்டன், நீலநாம மணிசுந்தரன் என்று பல முத்திரைகளையும் தமது பாடல்களில் பயன்படுத்தியுள்ளார்.

    ஆதரவு:

    நீலகண்ட சிவனை திருவாங்கூர், கொச்சி, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை ஆண்ட மன்னர்கள் தங்கள் அரசவைக்கு அழைத்துக் கௌரவப்படுத்தினர். மேலும், குடும்பம் முழுமைக்கும் தினமும் இலவசமாக அரிசி மற்றும் உணவுப் பண்டங்களை அளித்தனர். திருவாங்கூர் மகாராஜா இவருக்கு “அரியும் கொப்பும்” என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்தார். பல மகாராஜாக்கள் இவர் மீது அன்பும், அபிமானமும் கொண்டிருந்தாலும், இவர் இறைவனைத் தவிர வேறு யாரையும் துதித்துப்பாடவில்லை.

    சிறப்புத்தன்மை:

    தமிழிசைக்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த நீலகண்ட சிவன் தன்னைத் தேடி வந்த பொன், பொருளை அறவே வெறுத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றிய இவர் எந்தக் குருவிடம் குருகுலவாசத்தில் இசைப்பயலவில்லை. எனினும் பஜனை முறையைப் பின்பற்றி பாடல்களை இயற்றிப் புகழ் பெற்றார்.

    பாடலின் எண்ணிக்கையும், தெய்வ ஈடுபாடும்:

    இவர் தியாகராசரைப் போல எண்ணிடலங்காதப் பாடலை இயற்றினாலும், தற்பொழுது 164 பாடல்களே கிடைத்துள்ளன. சிவபெருமானை வாழ்த்திப் பாடல்கள் பல இயற்றி இருந்தாலும், விநாயகர், முருகன், கலைவாணி, அம்பிகை, திருமால் போன்ற பல கடவுளர்கள் மீதும் பாடல்களைப் பாடியுள்ளர். மேலும் தென்னிந்தியாவிலுள்ள பல திருத்தலங்களுக்குச் சென்று அத்தலங்களில் வீற்றிருக்கும் தெய்வங்களின் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். பெரும்பான்மையான பாடல்களைத் தமிழிலும், சிலவற்றைச் சமஸ்கிருத மொழியிலும் இயற்றியுள்ளார்.
    இவர் விநாயகர் மீது 15 கீர்த்தனைகளையும், முருகன் மீது 14 கீர்த்தனைகளையும், சிவன் மீது 9 கீர்த்தனைகளையும், ஒரு தோடயப் பாடலையும், ஒரு பதத்தினையும், நாட்டுப்புற இசைமெட்டில் பல பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரின் சிறப்பு வாய்ந்த பாடல்கள் சில,

    1. ஆனந்த நடமாடுவார் – பூர்விகல்யாணி – ரூபகம்
    2. சண்முகனே – காபி –ரூபகம்
    3. மங்கலம் மால்மருகர்க்கு – மத்தியமாவதி – ஆதி

    இவரின் முருக வழிபாட்டுக் கீர்த்தனைகளில் திருப்புகழின் தாக்கம் காணப்படுகின்றது.

    அற்புத நிகழ்வுகள்:

    நீலகண்ட சிவன் தமது வாழ்வில் நடந்த அற்புத நிகழ்வுகளைப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் சில,
    1. வடலூர் இராமலிங்க அடிகளார் திருவருட்பா எழுதிய போது, தண்ணீரால் விளக்கு எரியச் செய்தது போல, இவர் பத்மநாபபுரம் கோவிலில் இறைவனைத்துதிக்க தண்ணீர் விட்டு விளக்கினை எரியச் செய்தார்.
    2. திருநெல்வேலி அருகேயுள்ள குமரக்குளம் என்ற ஊரில் மக்கள் வறட்சியால் வாடியபோது, “வளர்த்த தரு உருவகம் மார்த்தாண்டேசுவரனே” என்ற பாடலைப் பாடியவுடன் மழை பெய்து வறட்சி நீங்கியது.
    3. சிறுவன் ஒருவன் காய்ச்சலால் அவதியுற்ற போது, நீலகண்ட சிவன், பஞ்சாட்சர மந்திரத்தைப் பாடி அந்நோயினைக் குணப்படுத்தினார்.
    4. இவர் தமது வாழ்வின் இறுதிக்குள் 108 திருத்தலங்களுக்கும் சென்று பாடல் புனைந்துள்ளார்.

    இயற்றிய நூல்கள்:

    நீலகண்ட சிவன் ஆழ்வார்கள் பாசுரங்களைப் பின்பற்றி, சிவபெருமான் மீது 1500 செய்யுட்களை 150 பதிகங்களாக உருவாக்கினார். மேலும் தமிழிசை நால்வரின் புகழைப் பரப்ப “நால்வரின் சரித்திரம்” என்ற நூலையும், அறுபத்து மூன்று நாயன்மார்களின் மீது அரிகதை வடிவில் பாடல்களையும் அமைத்துள்ளார். மேலும் தீரநிசாதர் சரித்திரம் முதலான இருபத்து ஆறு இசைத் தொகுதிகளை இயற்றியுள்ளார்.
    மேலும், இவரது மகன்களும், சீடர்களும் இவரின் பாடல்களைப் பல்வேறு நூற்களாக வெளியிட்டனர். திருநீலகண்டபோதம், ஞானஸ்கந்தய்யர், கீர்த்தனைமாலை, மகாத்மா ஸ்ரீ நீலகண்ட சிவன் கீர்த்தனைகள் இரண்டு பாகங்கள் போன்ற பல்வேறு நூற்களாக இவரின் பாடல்கள் வெளியிடப் பெற்றுள்ளன.

    மறைவு:

    நீலகண்ட சிவன் தனது இறுதி நாட்களை முன்கூட்டியே அறிந்து சொன்னார். தவத்தில் சிறந்த முனிவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய “கபாலமோட்சம்” இவருக்குக் கிட்டியது. அவரின் மரணத்திற்கு பிறகு, அவரின் தலையின் கபாலத்தில் ஏற்பட்டிருந்த ஓர் காயம் அவருக்குக் கபாலமோட்சம் கிட்டியதை உறுதிப்படுத்தியது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:10:27(இந்திய நேரம்)